“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்)
அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.
சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.
“இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”

கைவிரல் ரேகையின் முக்கியத்துவம் குறித்து அல்-குர்ஆன்!


கைவிரல் ரேகையின் முக்கியத்துவத்தையும் அதனை பதிவு செய்யும் முறையையும் கி.பி. 1880-ல் முதன் முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் ஸர் பிரான்சிஸ் கோல்டு என்பவர் தான்.

இவர் கூறுகிறார்” ‘பத்து இலட்சம் நபர்களை எடுத்துக் கொண்டால் அதில் இருவரின் கைவிரல் ரேகைகள்கூட ஒன்று போல இருக்காது’ என்றார். அதனாலேயே இன்று மனிதர்கள் அடையாளத்திற்காகவும், துப்பு துலக்கப்படுவதற்காகவும் இந்த கைவிரல் ரேகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.
இத்தகைய சிறப்பம்சம் வாய்ந்த கை ரேகையைப் பற்றி அல்லாஹ்வின் அருள்மறை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே சிலாகித்துக் கூறியிருக்கிறது.

அல்லாஹ் கூறுகிறான்: –
“மரித்து (உக்கிப்போன) மனிதனின் எழும்புகளைநாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா? அல்ல, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்” (அல்குர்ஆன்: 75:3-4)
மனிதன் இறந்து மக்கி மண்ணாகிப் போனபின், அவனை உயிர்ப்பிப்பதோடு, அவனின் கைவிரல் ரேகையைக்கூட இறைவன் செவ்வையாக உருவாக்குவான் என்று கூறுவதன் மூலம் கைவிரல் ரேகையின் இன்றைய அதிமுக்கியத்துவத்தை அன்றே பறைசாற்றி இருக்கிறது என்பதை அறிய முடிகிறது. 

இவ்வளவு நுணுக்கமான ரேகைகளை உடைய கையின் “நுனி விரல்களையும் செவ்வையாக உருவாக்குவான்” என்று தன்னுடைய திருமறையில் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே கூறியிருப்பதும் திருமறை தெய்வீக மறை என்பதற்கு அத்தாட்சியாக விளங்குகின்றது.
அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.

No comments:

Post a Comment