நாம் வசிக்கும் இந்த பூமியும் வானமும் எவ்வாறு கீழே விழாமல் நிறுத்தப்பட்டுள்ளது என்பதை என்றாவது சிந்தித்து இருக்கிறோமா? நம் முன்னோர்களில் சிலர் இந்த பூமியையும் வானத்தையும் நிலவையும் பற்றி என்ன சொல்லி வைத்துள்ளார்கள் என்று பார்ப்போம்.
ஒரு புராணம் நமது பூமியை மூன்று திமிங்கிலங்கள் ஒன்றினைந்து சுமந்து கொண்டிருக்கிறது என்கிறது. மற்றொரு புராணம் ஒரு மீனின் வாலில் பூமி நிலைபடுத்தப்பட்டுள்ளது என்கிறது. வேறு சில புராணங்கள் பன்றியின் மூக்கின் மீது இந்த பூமி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்கிறது. மேலும் சில கதைகளில் ஒரு காளையின் இரண்டு கொம்புகளுக்கு இடையில் பூமி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறுகிறது.
பல அரிய கருத்துக்களை கூறிய வள்ளுவரோ 'திங்களை பாம்பு கொண்டற்று' என்று நமது பாட்டிகளின் கதையை ஒட்டி கூறுவதைப் பார்க்கிறோம். அவர் பார்வையில் சந்திர கிரகணம் ஏற்படுவது பாம்பு விழுங்குவதால் ஏற்படுகிறது என்றும் பாம்பு அந்த சந்திரனை கக்குவதால் சந்திர கிரகணம் விலகுகிறது என்ற ரீதியில் சொல்வதைப் பார்க்கிறோம். இது நம் முன்னோர்கள் வானம், பூமி, சந்திரன் பற்றி எந்த அளவு விளங்கியிருந்தார்கள் என்பதை பார்க்க முடிகிறது.
சரி. குர்ஆன் இந்த நிகழ்வுகள் பற்றி என்ன சொல்கிறது என்பதையும் பார்ப்போம்.
'நீங்கள் பார்க்கின்ற தூண்கள் இன்றி வானங்களை இறைவனே உயர்த்தினான்.....நீங்கள் உறுதியாக நம்புவதற்க்காக சான்றுகளை அவன் தெளிவுபடுத்துகிறான்.'
-குர்ஆன் 13:2
'நீங்கள் பார்க்கின்ற தூண்கள் இன்றி இறைவனே வானங்களைப் படைத்தான். உங்களை சாய்த்து விடாதிருக்க பூமியில் முளைகளைப் போட்டான்.'
-குர்ஆன்: 31:10
ஆகாயத்தின் கட்டுமானத்தில் எந்த திசையில் எவ்வளவு தூரம் நீங்கள் சென்று பார்த்தாலும் கண்களுக்கு தெரியக் கூடிய எந்த ஒரு தூணையும் நீங்கள் காண இயலாது. ஈர்ப்பு விசையைக் கொண்டே ஒவ்வொரு கோள்களும் பிணையப்பட்டு அந்தரத்தில் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஈர்ப்பு விசையை நம் கண்களால் காண இயலாது. ஒவ்வொரு முறையும் நாம் பூமியில் கண்ணுக்குப் புலப்படாத அந்த காந்த தூண்களை கடந்து அதனை உடைத்துக் கொண்டு நடக்கிறோம் ஆனால் அந்த உணர்வு நமக்கு என்றுமே ஏற்பட்டதில்லை. அந்த உணர்வு நமக்கு ஏற்படுமானால் நம்மால் பூமியில் எந்த இடத்தையும் கடக்கவும் முடியாது. படைத்த இறைவன் நமக்கு செய்துள்ள பல உதவிகளில் இதுவும் ஒன்று.
நம் கையில் உள்ள ஆப்பிள் தவறினால் நேராக பூமியை நோக்கி செல்கிறது. ஆப்பிள் பூமியை நோக்கி செல்கிறது என்பதை விட பூமியின் ஈர்ப்பு விசையானது ஆப்பிளை இழுக்கிறது என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும். அந்த ஈர்ப்பு விசையை நம் கண்களால் பார்க்க முடிவதில்லை. இதைத்தான் 'பார்க்கின்ற தூண்களின்றி' என்ற அழகிய வார்த்தையைக் கொண்டு குர்ஆன் நமக்கு விளக்குகிறது.
அறிஞர் அரிஸ்டாட்டில் பூமியை மையமாக வைத்தே அனைத்து கோள்களும் சுழல்கின்றன என்று கூறி வந்தார். அன்றைய கிருத்தவ சபைகளும் அரிஸ்டாட்டிலின் கருத்தையே உண்மை என்று வாதிட்டது. இதன் பிறகு போலந்து நாட்டின் அறிவியல் அறிஞர் கோபர் நிக்கஸ் வானியலைப் பற்றிய ஆய்வை மேற்கொண்டார். இந்த அறிஞர் கிறித்தவ சபையிலும் பணியாற்றி வந்தார். முடிவில் சூரியனைச் சுற்றியே மற்ற கோள்கள் சுழலுகின்றன என்ற 'சூரிய மைய கோட்பாட்டை' உருவாக்கினார். கிறித்தவ சபைக்கு மாற்றாக இந்த கருத்து இருந்ததால் தான் கண்ட உண்மையை தனது நெருங்கிய நண்பர்களிடமே கோபர் நிக்கஸ் சொல்லி வந்தார். பிறகு தனது அறுபதாவது வயதில் ரோமில் 'சூரிய மையக் கோட்பாட்டை வலியுறுத்தி' உரை நிகழ்த்தினார். சும்மா இருக்குமா கிறித்தவ சபை! 'மத நிந்தனை' என்று குற்றம் சாட்டி அவர் கருத்து தவறு என்று அவர் வாயாலேயே சொல்ல வைத்து அவரை மன்னிப்பும் கேட்க வைத்தது கிறித்தவ சபை. இருந்தும் தனது எழுபதாவது வயதில் இறப்பதற்கு முன் சூரியனை மையமாக வைத்தே மற்ற கோள்கள் இயங்குகின்றன என்ற உண்மையை புத்தமாக வெளியிட்டு மறைந்தார் அந்த மேதை.
அறிஞர் நியூட்டனும் கிரக சஞ்சாரங்களை விளக்கி 'பேரண்டம் தாமாகவே காரணமின்றி நிலை பெற்றிருக்கவில்லை. அதனை நிலை நிறுத்தும் கண்ணுக்குப் புலப்படாத ஒரு பிணைப்பு உண்டு. அந்த பிணைப்பே பேரண்டம் மொத்தமும் பரவி நிற்க்கும் ஈர்ப்பாற்றலாகும்.' என்று கூறுகிறார்.
இதனையே குர்ஆன் கூறும் போது பின் வருமாறு விளக்குகிறது.
'வானங்களும் பூமியும் இடம் பெயராதபடி அவனே தடுத்து வைத்துள்ளான். அவ்விரண்டும் இடம் பெயருமானால் அவனன்றி எவரும் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. அவன் சகிப்புத் தன்மை உடையவனாகவும் மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.'
-குர்ஆன்: 35:41
இன்று இந்த உண்மைகளை எல்லாம் எல்.கே.ஜி படிக்கும் நம் குழந்தைகளுக்குக் கூட தெரிந்திருக்கும். ஆனால் இந்த குர்ஆன் இறங்கிய காலம் 1400 வருடங்களுக்கு முன்பு என்பதையும் அந்த மக்கள் வானியலைப் பற்றிய போதிய அறிவு இல்லாதவர்களாகவும் இருந்ததையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment