“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்)
அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.
சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.
“இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”

தாய்ப்பால் ஊட்டுவது கட்டாயக் கடமை

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள். (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு. இருவரும் ஆலோசனை செய்து மனம் விரும்பி பாலூட்டுவதை நிறுத்த முடிவு செய்தால் இருவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. உங்கள் குழந்தைகளுக்கு (வேறு பெண் மூலம்) பாலூட்ட வேண்டும் என நீங்கள் விரும்பினால் (பெற்றவளுக்குக்) கொடுக்க வேண்டியதை நல்ல முறையில் கொடுத்து விட்டால் உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்488 என்பதை அறிந்து கொள்ளுங்கள்! - 2:333

 தாய்ப்பால் ஊட்டுவது குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கும், தாய்க்கும் ஏராளமான நன்மைகளைத் தருவதால் குழ்ந்தைக்கு இரு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

இதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து உறுதி செய்துள்ளனர்.
லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியின் டாக்டர் தெரிசா நோரட் இது குறித்து ஆய்வு செய்து, தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு குறைவு என்றும், ரத்த ஓட்டம் மற்றும் சுவாசப் பிரச்சினைகளால் இறப்பதற்கான வாய்ப்புகளும் குறைவு என்றும் கூறியுள்ளார்.

தங்களது குழந்தைகளுக்குப் பெண்கள் பாலூட்ட வேண்டும் என்பதை மதக் கட்டளையாக இஸ்லாத்தில் மட்டும் தான் சொல்லப்பட்டுள்ளது. வேறு எந்த மதத்திலும் இது குறித்து கட்டளை எதுவும் போடப்பட்டதாகத் தெரியவில்லை.
ஆனால் நவீன காலத்தில் புட்டிப்பால் கொடுத்தே குழந்தைகள் வளரும் மோசமான சூழல் உருவாகி வருகின்றது. தாய்ப்பால் கொடுத்தால் தங்களது அழகு குறைந்துவிடும் என்று பெண்கள் அஞ்சுவதுதான் இதற்கு முக்கிய காரணம்.
ஆனால் தாய்ப்பால் கொடுக்காமல் புட்டிப்பால் கொடுத்தால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும். தாய்மார்களுக்கு புற்றுநோய் ஏற்படும் என்ற உண்மையும், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் புற்றுநோயிலிருந்தும், மாரடைப்பிலிருந்தும் காக்கப்படுகின்றார்கள் என்ற உண்மையும் சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்ற ஆய்வு :
இங்கிலாந்து நாட்டின் ஆராய்ச்சியாளர்கள், 12 வருடங்களாக, 9 ஐரோப்பிய நாடுகளில் உள்ள 3,80,000 (மூன்று லட்சத்து எண்பதாயிரம்) பெண்களைப் பரிசோதித்ததில், தாய்ப்பால் கொடுத்தால் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர். குறைந்தது 6 மாதங்களுக்காவது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம், பெண்கள் புற்று நோயால் இறப்பது 10 சதவிகிதம் குறைகின்றது. அதேபோல் இவர்களுக்கு மாரடைப்பினால் ஏற்படும் மரணமும், 17 சதவிகிதம் குறைகின்றது.
இவ்வாறு அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது

No comments:

Post a Comment