ஆதி மனிதர் ஆதம்(அலை) முதல் இறுதிவரை உள்ள மனிதர்கள் வரை அனைவருக்கும் நல் வழி காட்டி நேர்வழிப்படுத்த எழுந்த மார்க்கமே இஸ்லாம். உலகில் எத்தனையோ மதங்கள் இருந்தாலும், படைத்த இறைவனால் கொடுக்கப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட இயற்கை மார்க்கமே இஸ்லாம் என்பதற்கு ஏராளமான சான்றுகளை நாம் பார்க்க முடியும். அல்லாஹ் கூறுகிறான்.
எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதனைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ் படைத்ததில் மாற்றமில்லை; அதுவே நிலையான மார்க்கமாகும்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் இதை அறிய மாட்டார்கள். அல் குர்ஆன். 30:30.
இஸ்லாம் இயற்கையோட இயைந்த மார்க்கம். இயற்கைக்கு முரண்பட்ட எந்த சட்ட திட்டமும் இஸ்லாத்தில் பார்க்க முடியாது. அனைத்து உயிரினங்களையும் அரவணைத்து செல்லும் அழகிய மார்க்கம். இம்மாபெரும் பிரபஞ்சத்தை இயற்கையாக படைத்த இறைவனால் கொடுக்கப்பட்ட இஸ்லாமும் இயற்கையுடன் இணைந்து செல்கிறது.
படைக்கப்பட்ட முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களால் படைத்த இறைவனை வணங்க, உலகில் கட்டப்பட்ட முதல் இறை இல்லமான காபத்துல்லாஹ்வில் முதலில் செய்ய வேண்டிய வணக்க வழிபாடு; தவாப் என்னும் ஏழுமுறை இட வலமாக (Anti-Clockwise) சுற்றி வருதலாகும்.அதைத் தொடர்ந்து ஸபா-மர்வாவையும் ஏழு முறை இட வலம் சுற்றி வருதலாகும். ஏன் இடம் சுற்றி வர வேண்டும்? வலது புறமாக சுற்றி (Clockwise) வருவதுதான் பொதுவாக எங்கும் உள்ள நடைமுறை.
படைப்பில் சிறந்தவனான மனிதன் தனது வலது புறத்தையே முற்படுத்த வேண்டும் என்றும்; இடதை விட வலதே சிறந்தது என ஏராளமான வசனங்களில் அல்லாஹ் கூறியிருக்கிறான். நாளை மறுமையில் இடைக்கையில் பட்டோலை கொடுக்கப்படுபவர்கள் நஷ்டவாளிகள் என்றும் வலக்கையில் கொடுக்கப்படுபவரே சுவனவாசிகள் என்றும் அல் குர்ஆனில் (69:19,25,17:71) அல்லாஹ் கூறுகின்றான்.” இன்னும் கியாம நாளில், வானங்களனைத்தும் அவனுடைய வலக்கையால் சுருட்டப்பட்டதாக இருக்கும்.” (39:67) இது போன்று வலது புறத்தை முற்படுத்தச் சொல்லும் நபிமொழிகளும் ஏராளமாக உள்ளன.
இப்படி வலது புறத்தை சிறப்பித்துக்கூறும் அல்லாஹ் தன்னை வணங்க வரும் அடியார்கள் தனது இறை இல்லத்தை இடது புறமாகவே சுற்றி வர வேண்டும் என்று கட்டளை இட என்ன காரணம்? உண்மையான காரணம் அல்லாஹ்வே அறிந்தவன்! படைப்பினங்களுக்கு உள்ள சட்டம் படைத்தவனுக்கு இல்லை. அவன் தனித்தவன். இணை இல்லாதவன் பேரறிவாளன்.
பொதுவாக உலகில் உள்ள பெளத்த மதம்,ஹிந்து மதம்,யூத மதம், கிருஸ்துவ மதம்,மற்றும் சீக்கிய மதம் போன்ற அனைத்து மதங்களிலும் புனித இடங்களை வலம் சுற்றி வரும் வணக்க வழிபாடு கடைப்பிடிக்கப்படுகிறது. குறிப்பாக இந்து கோவில் பிரகாரங்களை சுற்றி வலம் வரும் “பிரதட்சனம்” உள்ளது. தரையில் படுத்து உருண்டு வலம் வரும் “அங்கப்பிரதட்சணம்” மற்றும் நவ கிரகத்தை சுற்றி வருதல். மலையை சுற்றிவரும் “கிரிவலம்” இன்றும் உள்ளது. கிரிவலம் என்பது மலையை வலம் வருதல் (மலைக்கு வலபக்கத்தில் தொடங்கி சுற்றி வழிபட்டு வருதல்) என்பதாகும்.
கிருஸ்துவ தேவாலயத்தில் திருப்பலி பீடத்தை சுற்றி வந்து தூப ஆராதனை செய்யப்படுகிறது. இப்படி எல்லா மதங்களிலும் புனித இடங்களை வலது புறமாக சுற்றி வரும் நடை முறை வழக்கத்தில் உள்ளது.
அறிவியல் ரீதியாக, படைக்கப்பட்டு சுழன்று வரும் அனைத்து பிரபஞ்சம், (Galaxies) சூரியன், பூமி, சந்திரன், கோள்கள் அனைத்துமே இயற்கையாகவே இடது புறமாக ( Prograde Rotation) சுழன்று செல்கின்றன. இந்த இயற்கையின் விதிப்படியே படைப்பினங்களாகிய பிரபஞ்ச, சூரிய, பூமி, சந்திர, கோள்களுடன் படைக்கப்பட்ட மனிதனும் இடஞ் சுழியாக இறை இல்லமான காபத்துல்லாஹ்வை சுற்றி வருகின்றான். இஸ்லாம் ஒரு இயற்கை மார்க்கம் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு பூமி, சூரிய சந்திர பிரபஞ்ச சுழற்சியை பற்றி எவரும் கற்பனைகூட செய்திருக்க முடியாது. படைத்த இறைவனுக்கு மட்டுமே இவ்வுண்மை தெரியும்.
வானங்களிலும், பூமியிலும் இருப்பவை எல்லாம், விரும்பியோ, விரும்பாமலோ அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்கின்றன; அவற்றின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் (அவ்வாறே சஜ்தா செய்கின்றன.) அல் குர்ஆன்.13:15.
அவற்றின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் சிரம்(ஸஜ்தா) பணிகின்றன. என்ற வசனத்தின் மூலம் பூமி சுழல்கிறது. இதுபோல் வானத்தில் உள்ள சூரிய, சந்திர, பிரபஞ்சங்கள் (Galaxies), கோள்கள் சுழன்று செல்லும் உண்மையை அல்லாஹ் கூறுகின்றான். இன்றைய நவீன அறிவியல் இவை அனைத்தும் இடது புறமாகவே (Anti-Clockwise) சுழன்று செல்வதை உண்மைப்படுத்தி உள்ளது.
ஓர் பொருளின் கண்ணுக்குத் தெரியாத மிகச்சிறிய துகளை அணு (Atom) என்கிறோம். இந்த அணுக்கருவை சுற்றி வரும் எலக்ட்ரான்களும் இடஞ் சுழியாகவே சுழல்கின்றன. பூமியின் நடுவில் உள்ள உட்கரு (Core) இடது புறமாகவே சுழன்று வருவது குறிப்பிடத்தக்கது. இயற்கை மார்க்கமான இஸ்லாத்தை ஒட்டியே அணு முதல் அண்டம் வரை அனைத்தும் இடது புறமாகவே சுழன்று செல்வது ஒரு அறிவியல் விந்தை.
இயற்கையான ஒளி அலைகள் இடைஞ்சுழியாக செல்லுகின்றன. பூமியின் மின்காந்த அலைகளும் இடஞ்சுழியாகவே (Anti Clockwise) பயணப்படுகின்றன. பெரும்பாலான கடல் நீரோட்டங்கள் இடம் வலமாகவே ஓடுகின்றன. இயற்கையான தாவரங்களில், கொடியில் சுற்றிப் உயரும் செடி கொடிகள் 90% இடம் வலமாகவே (Anti clockwise) சுற்றிப் பின்னிப் பிணைந்து படர்கின்றன. நீரில் உருவாகும் சுழல் நீரோட்டமும் (Whirlpool) இடம் வலமாகவே சுழன்று செல்கிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் உருவாகும் புயல்களின் சுழற்சி பெரும்பாலும் இட வலமாகவே உள்ளது.
இப்படி ஏராளமான இயற்கை விந்தைகள் இடம் வலமாகவே பெரும்பான்மையாக சுழல்கின்றன. இயற்கையுடன் இயைந்த யதார்த்த உண்மைகளில் சில விதி விலக்குகளும் இல்லாமல் இல்லை. உதாரணமாக சூரியனை இடம் வலமாக அனைத்துக் கோள்களும் சுற்றும்போது இதற்கு மாற்றமாக வீனஸ், மற்றும் சில குறுங்கோள்கள், சில காலக்ஸ்சிகள் வலம் இடமாக சுழல்கின்றன. இது போன்ற விதி விலக்குகள் எங்கும் உள்ளன.
உதாரணமாக,அல்லாஹ் ஆண்,பெண், விலங்குகள், மற்றும் தாவரங்களை ஜோடி ஜோடியாகப் படைத்து பல்கிப்பெருகச் செய்துள்ளான். அதேசமயம் விதி விலக்காக இனப்பெருக்கம் செய்ய முடியாத மூன்றாம் பாலினமும் உலகில் இருக்கத்தான் செய்கிறது.
(“அல்லாஹ்) அவர்களுக்கு அவன் ஆண் மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான்; அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கிறான்- நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன்; பேராற்றலுடையவன்.” அல் குர்ஆன்.42:50.
ஆணுக்கு கரு அணு மற்றும் பெண்ணுக்கு கரு முட்டை வளர்சசி இல்லையேல் அவர்கள் குழந்தை பாக்கியம் இன்றி மலடாக ஆவதுபோல் குழந்தையை பெற்றெடுக்க தகுதி இல்லாத மூன்றாம் பாலினமும் மலடாகவே இருக்கிறார்கள். ஆயினும் இந்த விதி விலக்குகள் விகிதாச்சாரத்தில் மிகக்குறைந்த அளவிலே உள்ளது. ஆகவே விதிவிலக்குகளை நாம் விதியாக எடுக்கத்தேவையில்லை.
இஸ்லாம் ஒரு இயற்கை மார்க்கம் என்பதை ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறிய செய்தியை ஹதீஸ்களில் பார்க்கலாம்.
(நபி (ஸல்) அவர்கள்) மிஹ்ராஜ் விண்ணக பயணத்தின் போது ஏழாவது வானத்தில் உள்ள “அல் பைத்துல் மஹ்மூர்’ எனும் இறை இல்லம் காட்டப்பட்டது. பிறகு என்னிடம் ஒரு பாத்திரத்தில் மதுவும், ஒரு பாத்திரத்தில் பாலும், இன்னொரு பாத்திரத்தில் தேனும் கொண்டு வரப்பட்டது. நான் பாலைத் தேர்ந்தெடுத்தேன். (பிறகு அதைக் குடித்தேன்.) அப்போது ஜிப்ரீல், “இதுதான் நீங்களும் உங்கள் சமூதாயத்தாரும் இருக்கும் (இஸ்லாம் எனும்) இயற்கை நெறியாகும்.” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அப்பாஸ் இப்ன் மாலிக் (ரலி) நூல்:புஹாரி.3887.
மது,பால்,தேன் இம்மூன்று பானங்களிலும் பால் மட்டுமே கால்நடைகளிலிருந்து எந்த ஒரு மாற்றமுமின்றி நேரடியாக இயற்கையாக குடிக்க கிடைக்கிறது.ஆனால் அறிவியல் ரீதியாக தேன் உருவாவது அப்படியல்ல.தேனீக்கள் பூவில் உள்ள மகரந்த பூந்தாதுகளை உண்டு;அதன் வயிற்றில் உருவாகும் இன்வர்டஸ் என்னும் நொதியினால் குளுகோஸ் ஆக மாற்றி (The main enzymes in honey are invertase (saccharase) diastase (amylase) which are introduced to honey by bees, வெளியேற்றி தனது கூட்டில் சேகரிக்கிறது. பூவிலிருந்து நேரடியாக கொண்டு வந்து சேர்த்த தேன் அல்ல. தேனீக்களின் வயிற்றில் என்சைமங்களால் நொதிக்கப்பட்டு (Fermentation) உடைக்கப்பட்ட எளிய சர்க்கரையே (Glucose) தேனாகும்.
இது போல் மதுவும் இயற்கையாக உருவாவதில்லை. கனிந்த பழங்களை, தானியங்களை செயற்கையாக ஊறல் போட்டு புளிக்க வைத்து சாறாக்குகின்றனர். சாற்றை மதுவாக மாற்றும் நுண்ணுயிர் ஈஸ்டின் அறிவியல் பெயர் “சாக்கரோ மைசெஸ் செர்விசெஸ்” (Saccharomyces cerevisiae) இவை பழச்சாறிலுள்ள இனிப்பில் பல மடங்காக பெருகி சைமாஸ் எனும் நொதிகளை வெளிவிடுகின்றன. இந்த என்சைமே (Zymase) சர்க்கரையை சிதைத்து எத்தனால்(Ethanol) என்னும் (Alcohol) மதுவாக மாற்றுகிறது. இரசாயன மாற்றமடைந்து போதை தருவதே மது பானம்.
தேனும், மதுவும் இயற்கையாக, நேரடியாக கிடைப்பதில்லை. தேனீயின் Invertase Enzyme ஆல் தேன் உருவாகிறது. பழச்சாறானது Saccharomyces cerevisiae என்னும் நுண்ணுயிர் பாக்டிரீயாக்களால் நொதிக்க வைக்கப்பட்டு (Fermentation) மதுவாக மாறுகிறது. ஆனால் தூய பாலானது தேனீ, நுண்ணுயிர்கள் போன்ற (இடைத்தரகர்) என்சைம்களால் நொதிக்க வைக்கப் படாமல் நேரிடையாக இயற்கையாகப் பருகக்கிடைகிறது. ஆகவே இஸ்லாம் என்பது அல்லாஹ்வால் கொடுக்கப்பட்ட இயற்கை மார்க்கம், நபி (ஸல்) அவர்கள் தேர்ந்தெடுத்த பாலைப்போன்ற இயற்கையான இனிய மார்க்கம்.
தேனும், மதுவும் எப்படி உருவாகிறது என்று 1400 ஆண்டுகளுக்கு முன்னால் எந்த ஒரு மனிதராலும் சொல்ல முடியுமா? இந்த அறிவியல் உண்மைகள் கடந்த இரு நுற்றாண்டுகளில்தான் ஆய்வு ரீதியாக அறியப்பட்டது. தேனீக்களையும், பாக்டீரிய நுண்ணுயிர்களையும், மனிதனையும் படைத்த அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த உண்மையை தனது தூதர் நபி(ஸல்) அவர்கள் மூலம் அன்றே வெளிப்படுத்தியுள்ளான்.
இஸ்லாம் ஒரு இயற்கை மார்க்கம் மட்டுமல்ல, ஓர் இறைவனின் மார்க்கம் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.அல்ஹம்துலில்லாஹ்!
இது (குர்ஆன்) மனிதர்களுக்கு தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டதாகவும், உறுதியான நம்பிக்கையுடைய சமூகத்தாருக்கு நேர்வழியாகவும், அருட்கொடையாகவும் இருக்கிறது. –அல் குர்ஆன். 45:20
No comments:
Post a Comment