உலகம் படைக்கப்பட்ட காலம் முதல் மனிதன் நேர்வழியில் வாழ்வதற்கு இறைவன் தந்த புனித வழிகாட்டலான இஸ்லாமிய மார்க்கத்தை இவ்வுலகு அழியும் வரையில் வாழும் மனிதர்கள் பின்பற்றி வாழ வேண்டும் என்பதே இறைவனின் விருப்பமாகும்.
நாம் வாழுகின்ற இந்த நவீன காலத்தைப் பொருத்த வரையில் விஞ்ஞானம் தனது ஆய்வுகளில் உயரிய இடத்தைப் பிடித்துள்ளது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. மருத்துவம், கலை, கலாசாரம், கடல் ஆய்வுகள், கால நிலை பற்றிய ஆராய்ச்சிகள் என்று எத்துறையை எடுத்தாலும் அனைத்துத் துறைகளிலும் மனிதன் பல சாதனைகளைப் படைத்து வருகின்றான்.
தாண்ட முடியாத எல்லைகள்
மனிதன் என்னதான் ஆய்வுகள், ஆராய்ச்சிகள், விஞ்ஞானம் என்றெல்லாம் முன்னேறினாலும் இறைவன் விதித்த விதி முறையைத் தாண்டி அவனால் அணுவளவும் அசைக்க முடியாது என்பதை வரலாற்றில் அணைவரும் உணர்ந்துள்ளார்கள்.
மனிதனுக்கு நேர்வழி காட்ட அனுப்பப்பட்ட அனைத்துத் தூதர்களும் தெளிவான இறைச் செய்திகள் மூலம் மனிதர்களுக்கு நேர்வழி காட்டினார்கள். இறைவன் மூலம் இவ்வுலகுக்கு இறுதியாக அனுப்பப்பட்ட இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள், அல்குர்ஆனை இவ்வுலக மக்களுக்கு நேர் வழி காட்டியாக தந்து விட்டு சென்னார்கள்.
புனித அல் குர்ஆனைப் பொருத்த வரையில் மனிதர்களுக்கு வாழ்வதற்காக வழி முறைகளை தெளிவாக எடுத்துச் சொல்வதுடன், அது இறைவனிடமிருந்து இறக்கப்பட்டது தான் என்பதை நிரூபிக்கும் விதமாக பல அறிவியல் செய்திகளையும் தன்கத்தே கொண்டுள்ளது.
முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப் பெற்ற அற்புதம்
நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட திருமறைக் குர்ஆன் தொடர்பாக இவ்வாறு சொல்கின்றார்கள்.
“ஒவ்வொரு இறைத் தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்”நூல் புகாரி : 4981,7274
நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அற்புதமாக வழங்கப்பட்ட இந்தத் திருமறைக் குர்ஆன் தன்னைத் தானே உண்மைப் படுத்தும் ஒப்பற்ற ஒரு வேதமாக கடந்த 1400 வருடங்களுக்கும் மேலாக இவ்வுலகில் நிலைத்திருக்கின்றது. இவ்வுலகம் அழியும் வரையும் இதுதான் நிலை.
திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள் நாளுக்கு நாள் உண்மைப் படுத்தப்பட்டு வரும் இக்காலத்தில் விஞ்ஞானம் தோற்றுப்போய் இறைவனின் வார்த்தைகள் வெற்றி பெற்ற இன்னொரு சந்தர்ப்பத்தை இவ்வாக்கத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும்.
பூமியின் ஆழத்தை மனிதன் அடைய முடியாது என்ற அல்குர்ஆனின் முன்னறிவிப்பு
மனிதன் பெருமையடிப்பதை இறைவன் பல இடங்களில் கண்டிக்கின்றான், பெருமை என்பது இறைவனுக்குறிய ஒரு பண்பாகும். இப்பண்பை பற்றி இறைவன் தெளிவு படுத்தும் போது அத்துடன் சேர்த்து மிகத் தெளிவான அறிவியல் உண்மை ஒன்றையும் மனித சமுதாயத்திற்கு இறைவன் அறிமுகம் செய்கின்றான்.
விண்வெளிப் பயணம் செல்ல முடியும் என்றும் விண்வெளிப் பயணம் செல்லும் போது இதயம் சுருங்கி விடும் என்றும் சொல்லித் தருகின்ற திருக்குர்ஆன், பூமிக்கு அடியில் மலையின் நீளத்திற்குப் போக முடியாது என்றும் தெளிவாக சொல்கின்றது.
பூமியில் கர்வத்துடன் நடக்காதீர்! நீர் பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டீர்!(அல்குர்ஆன் 17:37)
திருக்குர்ஆனின் இவ்வசனம் மிகப்பெரிய அறிவியல் முன்னறிவிப்பாக அமைந்துள்ளது.
அல்குர்ஆனை தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பு செய்தவர்கள் இவ்வசனத்திற்குத் தவறான மொழி பெயர்ப்பைச் செய்து, இவ்வசனத்தை அர்த்தமற்றதாக ஆக்கியுள்ளனர்.
“நீ பூமியில் அகந்தையுடன் நடக்காதே! ஏனெனில் நீ பூமியைப் பிளக்கவுமில்லை. மலையின் உயரத்தை அடையவுமில்லை” என்ற கருத்துப்படவே பெரும்பாலான மொழிபெயர்ப்புக்கள் அமைந்துள்ளன.
ஆரம்பகாலம் முதல் சுரங்கம் வெட்டுதல், கிணறு தோண்டுதல், அணைகள், கண்மாய்கள் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகளுக்காக மனிதர்கள் பூமியைப் பிளந்து கொண்டு தான் வருகின்றனர். திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்திலும் இப்பணிகள் நடந்து வந்தன. அப்படி இருக்கும் போது, நீ பூமியைப் பிளக்கவில்லை என்று எப்படிக் கூற முடியும்? என்பதை இவர்கள் சிந்திக்கவில்லை.
மேலும் பூமியைப் பிளப்பதற்கும், மலையின் உயரத்தில் இருப்பதற்கும் பெருமையடிக்கக்கூடாது என்ற செயலுடன் எந்தச் சம்பந்தமும் இல்லை.
இவ்வசனத்தின் சரியான பொருள் இது தான்
“நீ பூமியைப் பிளந்து மலையின் உயரத்தை அடையவில்லை”
மனிதன் ஆகாயத்தில் எவ்வளவோ உயரத்திற்குச் செல்கிறான். அது மனிதனுக்கு எளிதாக இருந்தாலும் பூமியின் ஆழத்தில் அப்படிச் செல்ல முடியாது. பெரிய மலையின் உயரம் எவ்வளவோ அவ்வளவு ஆழத்திற்கு மனிதனால் பூமியைப் பிளந்து செல்ல முடியாது என்பதுதான் இவ்வசனம் கூறும் கருத்தாகும்.
நடக்க முடியாத இந்த அரிய செயலை உன்னால் செய்ய முடியும் என்றால் நீ பெருமையடிப்பதில் ஏதாவது பொருள் இருக்கும் என்று இறைவன் இடித்துரைக்கிறான்.
இதில் அடங்கியுள்ள அறிவியல் உண்மை என்னவென்பதைப் பார்ப்போம்.
மனிதன், பூமிக்கு மேலே 3,56,399 கி.மீ. தொலைவுடைய சந்திரனுக்கு ஆளை அனுப்பி அதன் உயரத்தை அடைந்து விட்டான். மேலும் பூமிக்கு மேலே 8 கோடி கி.மீ. தொலைவிலுள்ள செவ்வாய் கிரகத்துக்கு இயந்திரத்தை அனுப்பி அதன் உயரத்தை மனிதன் அடைந்து விட்டான்.
பூமியின் குறுக்களவு 12,756 கி.மீ. ஆகும். அதாவது பூமியின் ஒரு முனையிலிருந்து அதன் எதிர் முனை வரையுள்ள தூரம் (விட்டம்) 12,756 கி.மீ. ஆகும்.
இதில் மனிதன் சென்றடைந்துள்ள தூரம் 3.3 கி.மீ. மட்டுமே. தென் ஆப்பிரிக்காவில் உள்ள உலகின் மிக ஆழமான சுரங்கம் எனப்படும் டிரான்ஸ் வால் பாக்ஸ்பர்க் என்ற இடத்திலுள்ள சுரங்கத்தின் ஆழம் இது தான்.
உண்மையில் இது கூடச் சரியான அளவு என்று சொல்ல முடியாது. ஏனெனில் இந்தப் பகுதி கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து அளவிட்டால் இந்தச் சுரங்கத்தின் ஆழம் 1700 மீட்டர் மட்டுமே! அதாவது 2 கி.மீ. கூட பூமியின் ஆழத்தில் மனிதன் செல்லவில்லை.
உலகின் மிக உயரமான இமய மலையின் உயரம் 9 கி.மீ. ஆகும். இந்த 9 கி.மீ. ஆழத்திற்கு, அதாவது மலையின் உயரம் அளவுக்குப் பூமியில் மனிதன் செல்ல முடியாது என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்கிறார்கள்.
பூமியின் மேற்பரப்பில் சராசரியாக 40 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தையே மனிதனால் தாங்க முடியாது. கடல் மட்டத்திலிருந்து 1700 மீட்டர் ஆழமுள்ள மேற்கண்ட சுரங்கத்தில் 57 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் உள்ளது. தொழிலாளர்களுக்கு இந்த வெப்பம் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் அதன் அருகிலுள்ள பகுதிகள் குளிரூட்டப்பட்டுள்ளன.
பூமிக்கு அடியில் 700 மீட்டர் கடந்து விட்டால் காற்று, முகத்தைச் சுட்டுப் பொசுக்கும் என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். எனவே மலையின் உயரமான 9 கி.மீ. அளவுக்குப் பூமிக்குள் செல்வது சாத்தியமே இல்லை.
மேலும் பூமியின் ஆழத்தில் செல்லச்செல்ல புவி ஈர்ப்பு விசையும் அதிகரிக்கின்றது. இதன் காரணமாகவும் பூமியின் ஆழத்தில் மனிதன் செல்ல முடியாது.
இந்தப் பேருண்மைகளை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே பறைசாற்றியதன் மூலம் திருக்குர்ஆன் இறைவேதம் என்பது நிரூபணமாகின்றது.
இறைவனின் வார்த்தைக்கு முன் தோற்றுப் போகும் மனித விஞ்ஞானம்
பூமியின் ஆழத்திற்கு மனிதனால் செல்ல முடியாமை தொடர்பாக கடந்த 10.11.2014 அன்று தமிழ்நாட்டின் பிரபல செய்திச் சேவையான புதிய தலைமுறை தொலைக் காட்சியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
குறித்த நிகழ்ச்சியில் சொல்லப்பட்ட செய்திகளை அப்படியே கீழே தருகின்றோம்.
மனிதன் நிலவில் காலடி எடுத்து வைத்த பின் சூரியக் குடும்பத்தைத் தாண்டி பல கோடி மைல் தொலைவுக்கு வின்வெளியில் பயணம் செய்திருக்கின்றான். செவ்வாய் கிரகத்திலிருந்து பாறைகளை எடுத்து வந்து ஆய்வு செய்வதே தமது அடுத்த இலக்கு என்று அதை நோக்கி மனிதன் முன்னேறிக் கொண்டிருக்கின்றான்.
ஆனால் பூமியின் ஆலத்திற்கு செல்வதில் மனிதன் இதுவரை வெற்றி பெறவில்லை.
விண்ணில் பல கோடி மைல் தொலைவுக்கு பரந்த மனிதன் பூமிக்குள் இது வரை சென்ற தூரம் வெரும் 2.2 கி.மீ மாத்திரம் தான்.
பூமியின் மேற்பரப்பை மாத்திரமே மனிதன் இதுவரைக்கும் சுரண்டிக் கொண்டிருக்கின்றான். பூமியின் மேல் அடுக்கைத் தாண்டி பூமியில் இரும்புகள் நிறைந்த “மூடக மையப் பகுதியான” “மேண்டில்” (Mantle) என்ற பகுதிக்கு செல்வதற்கு மனிதனால் இன்னும் இயலவில்லை.
பூமியின் ஆழத்தைப் பற்றிய அனைத்து ஆய்வுகளும், உத்தேசமானவையாகவோ, அல்லது கணிப்புகளாகவோ மாத்திரம் தான் இதுவரைக்கும் இருந்து வருகின்றன. ஆனால் விஞ்ஞானிகள் பூமியைத் தோண்டி ஆய்வு செய்வதற்கு முயற்சிக்காமலும் இல்லை.
பூமியின் ஆழத்தை ஆய்வு செய்வதற்காக 1961 ம் ஆண்டு மோஹோல் (MOHOLE) என்ற திட்டத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. பசுபிக் பெருங் கடலில் ஆரம்பிக்கப்பட்ட தோண்டும் பணி 601 அடி ஆழம் வரைத் தான் நடைபெற்றது. அதன் பின்னால் இது போன்ற திட்டம் சாத்தியம் இல்லையென்று கைவிடப்பட்டது.
இந்த ஆய்வை “ஐவோடிட்பி” என்ற ஆழ்கடல் துளையிடும் அமைப்பு தற்போது கையிலெடுத்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் நிதியுதவியுடன் செயல்படும் இந்த அமைப்பு பூமியை துளையிடும் பணிக்காக சுமார் 6000 ம் கோடி (இந்திய) ரூபாய்களை ஒதுக்கியுள்ளது.
பசுபிக் பெருங்கடலில் துளையிடுவதற்கான 03 இடங்களும் தேர்வு செய்யப்பட்டு விட்டன. சுமார் 30 செ.மீ விட்டத்தில் 10 கி.மீ வரை துளையிடுவதற்கான கருவிகளும் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
பூமியின் 68 சதவீதமான நிறைக்குக் காரணமாக இருக்கும் “மேண்டில்” பகுதியில் இருந்து மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்வதின் மூலம் பூமியில் உயிர்கள் உருவான ரகசியத்திற்கு விடை கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
ஆனால் தோண்டுவதற்கான இந்த முயற்ச்சியும் 2020 ம் ஆண்டுக்கு முன்னர் சாத்தியமில்லை.
நன்றி : புதிய தலைமுறை இரவுச் செய்திகள் – சர்வதேசம் (10.11.2014)
தோண்டுவதற்கே சாத்தியம் இல்லை எனும் போது, உள்ளே நுழைவதற்கான சாத்தியத்தை கற்பனையில், எதிர்பார்க்கலாமே தவிர, நிஜத்தில் நிரூபிக்க முடியாது என்பதை விஞ்ஞானம் உணர்ந்து கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை.
No comments:
Post a Comment