ஆப்கன் தலைநகர் காபூலில் உலகின் மிகப் பெரிய குர்ஆன் பிரதி தயாரிக்கப்பட்டுள்ளது. 30 வருட கால போரில் அந்நாட்டின் கை வினைஞர்களின் திறமை சற்று மடடுப் படுத்தப் பட்டாலும் முற்றிலும் சிதைந்து விட வில்லை என்பதையே இந்த குர்ஆன் பிரதி காட்டுகிறது..
இந்த குர்ஆன் பிரதி 2.28 மீட்டர்(90 இன்ச்) நீளமும் 1.55 மீட்டர்(61 இன்ச்) அகலமும் கொண்டது. இந்த பிரதி உலகில் உள்ள குர்ஆன் பிரதிகளிலேயே பெரிய அளவைக் கொண்டது என்று ஆப்கனின் ஹஜ் அமைச்சகம் சான்றிதழ் வழங்கியுள்ளது.
இதற்கு முன்னால் ரஷ்யாவின் தாரஸ்தான் பகுதியில் உள்ள குர்அனின் பிரதி 2 மீட்டர் நீளமும் 1.5 மீட்டர் அகலமும் கொண்டதாக இருந்தது. அந்த சாதனையை ஆப்கானியர் தற்போது வென்று முதல் இடத்துக்கு வந்துள்ளனர்.
இதன் மொதத எடை 500 கிலோ கிராம். 218 பக்கங்கள் கொண்ட இந்த பிரதி துணியாலும் சிறந்த காகிதங்களைக் கொண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. குர்ஆன் பிரதியின் முகப்பு ஆட்டுத் தோலினால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரதியை உருவாக்க மொத்தம் 5லட்சம் டாலர் செலவழிக்கப்பட்டுள்ளது.
முகமது சாபிர் காதிரி என்ற ஆப்கானியர் தனது 9 மாணவர்களின் துணை கொண்டு இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். குர்ஆனின் உள்ளே எழுத்துக்களிலும் பல உயர்தர வேலைப்பாடுகளை சளைக்காது செய்திருக்கிறார் முகமது சாபிர். 'நான் மேலும் பல வண்ணங்களை சேர்த்து இந்து புனித நூலை மேலும் அழகாக்குவேன்' என்று அந்த பிரதிக்கு பின்னால் நின்று மகிழ்ச்சியோடு கூறுகிறார் முகமது சாபிர்.
இந்த பணியை 2009 லேயே தொடங்கியுள்ளார். ஆனால் வெளியில் யாரிடமும் சொல்லாமல் 2012 ஆரம்பத்தில் திடீரென இதனை உலகுக்கு வெளிக்காட்டியுள்ளார் காதிரி. இந்த குர்ஆனின் பிரதி ஆப்கனின் கலாசார மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. 1980ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த மையத்தில் முன்பு 50000 புத்தகங்கள் இருந்ததாம். சோவியத் ரஷ்யாவோடு நடந்த உள் நாட்டு போரில் அவை அனைத்தும் தீக்கிரையாக்கப்பட்டது.
தற்போது இந்த கலாசார மையத்தில் சிறிய நூலகம் இயங்குகிறது. அரசும் பல உதவிகளை செய்து வருகிறது. இந்த கலாசார மையத்தை மேலும் சிறக்கச் செய்வோம் என்கின்றனர் இந்தகுழுவினர்.
சிறந்த சேவையை செய்த இந்த குழுவினரின் முயற்ச்சியை முதலில் பாராட்டுவோம். அதோடு 5 லட்சம் டாலர் செலவு செய்து ஒரு குர்ஆன் பிரதியை உருவாக்கியது ஏற்புடைய செயல்தானா? என்பதையும் சிந்திக்கக் கடமைபட்டுள்ளோம். 30 வருடங்களாக உள் நாட்டுப் போரில் சின்னா பின்னப் பட்டுக் கிடக்கும் அந்த மக்களின் வறுமையை போக்க இந்த பணத்தை செலவழித்திருக்கக் கூடாதா? கல்வி அறிவில் மிகவும் பின் தங்கியிருக்கும் இந்த மக்களுக்காக அந்த பணத்தை செலவழித்திருந்தால் இறைவன் மேலும் சந்தோஷப்பட்டிருப்பானே! 'ஏழையின் சிரிப்பில் இறைவனை காணுவதாக' பல நபி மொழிகள் நமக்கு இருக்க அந்த ஏழைகளின் வறுமையை போக்கவல்லவா அந்த செல்வந்தர் முயன்றிருக்க வேண்டும்? மற்ற நாடுகளை விட ஆப்கானிஸ்தானத்துக்குத்தான் இன்றைய நிலையில் பொருளாதார உதவி அவசியம் தேவை.
'இச்சொல்லை அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா? அல்லது அவர்களின் முந்தய முன்னோர்களிடம் வராத ஒன்று அவர்களிடம் வந்துள்ளதா?'
-குர்ஆன் 23:68
இது போல் பல இடங்களில் இறைவன் இந்த குர்ஆனை மனிதர்கள் சிந்திப்பதற்காக அருளியிருக்கிறோம் என்று கூறுகிறான். செலவு செய்த ஐந்து லட்சம் டாலரில் சிறிய அளவிலேயே குர்ஆனின் மொழி பெயர்ப்புகளை பல மொழிகளிலும் வெளியிட்டிருந்தால் ஐந்து லட்சம் மக்களை சென்று அது அடைந்திருக்குமே! வசதியுள்ளவர்கள் இதை எல்லாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
-----------------------------------------------------------------
அதே போல் நமது நாட்டை ஆண்ட மொகலாய மன்னன் சாஜஹான் தனது மனைவிக்காக தாஜ்மஹால் என்ற ஒரு சமாதியை பளிங்குக் கற்களால் கட்டினான். அதற்கான இன்றைய மதிப்பை கணக்கிட்டால் நமக்கு மயக்கமே வந்து விடும். இவ்வளவு செலவுகள் செய்து அதுவும் மக்களின் வரிப் பணத்தில் இப்படி ஒரு சமாதி கட்டுவது தேவையா? அந்த பணத்தில் கங்கையையும் காவிரியையும் இணைத்திருந்தால் என்றோ நம் நாடு வல்லரசாகியிருக்குமே! சாஜஹான் மட்டும் அல்ல. சேர சோழ பாண்டிய பல்லவ மௌரியப் பேரரசுக்ள் என்று எந்த அரசுமே சாமான்யர்களை கணக்கில் எடுக்கவே இல்லை.
ஒவ்வொரு மனிதனும் மறு உலகில் இறைவனிடம் இரண்டு கேள்விகளுக்கு அவசியம் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஒன்று அந்த மனிதன் பொருளை எப்படி சம்பாதித்தான்? என்றும் அடுத்து சம்பாதித்த பொருளை எவ்வாறு செலவு செய்தான் என்றும் இறைவன் கேட்பான் என்பது நபி மொழி. எனவே செல்வந்தர்கள் செலவு செய்வதிலும் மிக கவனமாக இருக்க வேண்டும் என்பதை இதிலிருந்து அறிகிறோம்.
தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே! அதைப் பிறருக்கு மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது. உங்கள் தீமைகளுக்கு இதைப் பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை இறைவன் நன்கறிந்தவன்.
-குர்ஆன் 2:271
No comments:
Post a Comment