'முஹம்மதே!' துல்கர்னைன் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். 'அவரைப் பற்றிய செய்தியை நான் உங்களுக்குக் கூறுவேன்' என்று கூறுவீராக!. அவருக்கு பூமியில் ஆட்சி செய்ய நாம் வசதி அளித்தோம். ஒவ்வொரு பொருளிலிருந்தும் அவருக்கு வழியை ஏற்படுத்தினோம். அவர் ஒரு வழியில் பயணம் சென்றார். சூரியன் மறையும் இடத்தை அவர் அடைந்த போது சேறு நிறைந்த தண்ணீரில் மறைவதைக் கண்டார். அங்கே அவர் சமுதாயத்தைக் கண்டார்.'
-குர்ஆன் 18:83-86
தரைவழிப் பயணமும் கடல்வழிப் பயணமும் செய்து உலகம் உருண்டை என்பதை ஒருவர் நிரூபித்துக் காட்டிய அற்புத வரலாற்றை நாம் இந்த பதிவில் பார்ப்போமா!
முகமது நபியின் காலத்திலிருந்து ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு 'துல்கர்னைன்' என்ற அரசர் ஒரு நாட்டில் சிறப்பான ஆட்சி செய்து வந்தார். இந்த அரசரைப் பற்றி அரேபிய மக்களும் நிறைய அறிந்து வைத்திருந்தனர். இவரைப் பற்றிய மேலும் விபரங்கள் அறிய முகமது நபியிடம் அந்த அரபிகள் பல கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தனர். அந்த அரபிகளின் கேள்விகளுக்கு பதிலாகத்தான் மேற்கண்ட வசனம் அருளப்பட்டது.
துல்கர்னைன் என்பது இந்த அரசருக்குரிய பட்ட பெயராகும். இச்சொல்லுக்கு 'இரு கொம்புகளின் உடைமையாளர்' என்பது பொருளாகும். இது தவிர இவரது நாடு மொழி மக்கள் பற்றிய வேறு விபரங்கள் காணக்கிடைக்கவில்லை. சிலர் இவரே 'மாவீரர் அலெக்சாண்டர்' என்றும் வேறு சிலர் இவர் ஒரு பழங்கால பாரசீக அரசர் என்றும் பல மாதிரியாக சொல்கின்றனர். இனி விஷயத்துக்கு வருவோம்.
இறைவனின் கட்டளைப்படி உலகின் சில பகுதிகளை நிர்வகிக்கும் பொருட்டு துல்கர்னைன் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்கிறார். அவரது பயணத்தின் ஒரு கட்டத்தில் குர்ஆன் கூறுவது போல் 'சூரியன் மறையும் இடத்தை அடைந்தார்'. இந்த வார்த்தை பிரயோகத்தில் அழகிய அறிவியல் உண்மை புதைந்துள்ளது. இந்த வார்த்தை பிரயோகத்திலிருந்து துல்கர்னைன் தனது பயணத்தை மேற்கு திசையிலிருந்து ஆரம்பித்துள்ளார் என்று அறிய வருகிறோம்.
அடுத்து 'சூரியன் நீர் நிலையில் மறைவதைக் கண்டார்' என்பதிலிருந்து அவரது பயணம் ஒரு கடற்கரையில் முடிவடைந்தது என்று தெரிய வருகிறது. ஏனெனில் சூரியன் தண்ணீரில் மறைவது போன்ற காட்சி கடற்கரையில் நின்று பார்ப்பவர்களுக்கு ஏற்படும் அனுபவமாகும் என்பதும் நமக்கு தெரிந்ததே!
அக்கடற்கரையை ஒட்டி ஒரு நகரம் இருந்ததாகவும் அம்மக்களிடம் நீதியை நிலை நாட்டுவதற்காகவும் சில உத்தரவுகளை இட்டதாகவும் நாம் குர்ஆனில் பார்க்க கிடைக்கிறது. துல்கர்னைன் இந்த நீண்ட பயணத்தில் கடற்கரையில் அமைந்துள்ள நகரத்தை அடைந்தார் என்பதிலிருந்து அதுவரை அவர் செய்த பயணம் தரை வழிப் பயணமே என்றும் அறிய முடிகிறது.
மேற்கு கிழக்காகிப் போன அற்புதம்!
தன்னுடைய நீண்ட பயணத்தில் கடற்கரையை அடைந்த துல்கர்னைன் திசை மாறாமல் மேலும் பயணம் செய்ய வேண்டுமானால் அவர் அதற்கு மேல் கடல் வழிப் பயணமே செய்திருக்க வேண்டும்.
'பின்னர் ஒரு வழியில் சென்றார்' -குர்ஆன் 18:89
இந்த வசனத்தில் துல்கர்னைன் அவர்கள் தனது பயணத்தை மேலும் தொடர்ந்த செய்தி சொல்லப்பட்டுள்ளது.
'முடிவில் சூரியன் உதிக்கும் இடத்தை அவர் அடைந்தார். ஒரு சமுதாயத்தின் மீது அது உதிக்கக் கண்டார். அவர்களுக்கு அதிலிருந்து எந்தத் தடுப்பையும் நாம் ஏற்படுத்தவில்லை'
-குர்ஆன் 18:90
என்ன வியப்பு! மேற்கு திசையில் தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருந்த துல்கர்னைன் 'முடிவில் சூரியன் உதிக்கும் திசையை அடைந்தார்' இது எப்படி சாத்தியமாகும்? நாம் வாழும் இந்த பூமி தட்டையாக இருந்திருந்தால் இந்த பூமியில் மேற்கு நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவர் கிழக்கு திசையை அடைய முடியுமா? ஆனால் இந்த பூமியின் மீது மேற்குத் திசையில் சென்று கொண்டிருந்த ஒருவர் கிழக்குத் திசையை அடைந்ததாக குர்ஆன் சொல்வதிலிருந்து பூமியின் வடிவம் தட்டையானது இல்லை என்றும் பூமி உருண்டை வடிவம் கொண்டதே என்பதுமே திருக்குர்ஆனின் அறிவியலாகும் என்பது தெளிவு.
பூமி உருண்டையானது. இரவு பகல் மாறி மாறி வருவதற்கு இதன் சுழற்சி மிக அவசியம் என்பதை துல்கர்னைன் வரலாற்றின் நாம் அறிந்து கொண்டோம். இது போன்ற அறிவியலே அசந்து போகும் உண்மைகளை மிக சர்வ சாதாரணமாக குர்ஆன் சொல்லிச் செல்கிறது. இது இறை வேதம் என்பதால்தான் இது சாத்தியமாகிறது.
No comments:
Post a Comment