“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்)
அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.
சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.
“இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”

அண்டைவீட்டாரின் உரிமைகள்

பக்கத்து வீட்டுகாரர்களிடம் பேண வேண்டிய பண்புகள்

ஓர் இறை நம்பிக்கையாளர் தனது அண்டை வீட்டாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும், அண்டை வீட்டாருக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகள் என்ன என்பதையும் பார்ப்போம்.

தொல்லை தருதல்

வீட்டில் ரேடியோ, டேப் ரிக்கார்டர், டி.வி. போன்றவற்றை வைத்துக் கொண்டு இரவு நேரங்களில் அல்லது ஓய்வு நேரங்களில் அண்டை வீட்டாருக்குக் கடும் சப்தத்தை ஏற்படுத்தித் தொல்லை தருவது, அல்லது சண்டையிட்டுக் கொண்டு  அடுத்தவர் உறக்கத்தைக் கெடுப்பது என்று எந்த வகையிலும் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரக்கூடாது.

“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர், தன் அண்டை வீட்டாருக்குத் தொந்தரவு தர வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரீ 5187


அண்டை வீட்டாருக்குத் தொல்லை தருபவன் உண்மையான முஃமினாக இருக்க மாட்டான் என்பதை இந்த நபிமொழி மிகத் தெளிவாக விளக்குகிறது.

“அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்” என்று (மூன்று முறை) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அவன் யார்? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “எவனுடைய நாச வேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன் தான்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஷுரைஹ் (ரலி)
நூல்: புகாரீ 6016


அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன் என்று மூன்று தடவை நபிகளார் கூறியது, அண்டை வீட்டாருக்குத் தொல்லை தருவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை விளக்குகிறது. அண்டை வீட்டாருடன் தொடர்ந்து பகைமைப் போக்கைக் கடைப்பிடிப்பவர்கள் இந்த ஹதீஸை ஆழமாகச் சிந்திக்கட்டும். அண்டை வீட்டாருக்குத் தொல்லைகள் தருபவன் சுவர்க்கம் புக முடியாது என்ற கடுமையான எச்சரிக்கையையும் நபிகளார் செய்துள்ளார்கள்.

“எவனுடைய நாச வேலைகளில் இருந்து அண்டை வீட்டார் பாதுகாப்பு பெறவில்லையோ அவர் சுவர்க்கம் செல்ல முடியாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 73


நல்லறங்கள் பல புரிந்தும் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தந்தால் அவரும் நரகம் புகுவார் என்பதை விளக்கும் இன்னொரு நபிமொழி.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “ஒரு பெண்மணி அதிகம் தொழுகை, நோன்பு, தர்மம் செய்பவளாகக் கருதப்படுகிறாள்; ஆனால் அவள் அண்டை வீட்டாருக்குத் தன் நாவால் தொல்லை தருகிறாள். (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இவள் நரகில் இருப்பாள்’ என்றார்கள். இன்னொரு பெண்மணி குறைந்த நோன்பு, தர்மம், தொழுகை உடையவளாக இருக்கிறாள் என்று கருதப்படுகிறாள். அவள் தர்மம் செய்தால் வெண்ணைத் துண்டுகளைத் தான் தர்மம் செய்வாள். ஆனால் அவள் அண்டை வீட்டாருக்கு நாவால் தொல்லை தருவதில்லை. (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இவள் சுவர்க்கத்தில் இருப்பாள்’ என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அஹ்மத் 9298


“ஒரு அடியானின் உள்ளம் சரியாகும் வரை அவனுடைய ஈமான் சரியாகாது. அவனுடைய நாவு சீராகும் வரை அவனுடைய உள்ளம் சரியாகாது. யாருடைய அண்டை வீட்டார் அவனின் நாச வேலையிலிருந்து பாதுகாப்பு பெறவில்லையோ அந்த மனிதன் சுவர்க்கம்  போக முடியாது” என்று நபிகளார் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: அஹ்மத் 12575


மாபெரும் குற்றம்

அண்டை வீட்டாருக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் அவரது நம்பிக்கைக்குரியவராகத் திகழ்வது அவசியமாகும். பக்கத்து வீட்டில் இருக்கிறார்; அவர் நல்லவர் என்று நம்பி வெளியூர் செல்லும் போது அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாக அவர் நடந்து கொள்ள வேண்டும். அண்டை வீட்டார் வெளியூர் சென்று விட்டார்; எனவே நாம் அங்கு சென்று திருடலாம், விபச்சாரம் செய்யலாம் என்று எண்ணி தவறான காரியங்களில் ஈடுபட்டால் அது மிகப்பெரிய குற்றமாகக் கருதப்படும். அதற்குக் கடுமையான தண்டனையும் வழங்கப்படும்.
நான் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப்பெரியது எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க அவனுக்கு நீ இணை கற்பிப்பது” என்று சொன்னார்கள். நான், “நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம் தான்” என்று சொல்லி விட்டு “பிறகு எது?” என்று கேட்டேன். “உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்கு போட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது” என்று சொன்னார்கள். “பிறகு எது?” என்று நான் கேட்க, அவர்கள், “உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: புகாரீ 4477


பொதுவாக விபச்சாரம் செய்தல் ஒரு குற்றம்; நம்பியவர்களுக்குத் துரோகம் செய்தல் இன்னொரு குற்றம்; இந்த இரண்டும் சேர்ந்து பெரும் பாவமாக மாறி விடுகிறது.

“நீங்கள் விபச்சாரத்தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?” என்று தம் தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். “அல்லாஹ்வும் அவன் தூதரும் தடை செய்த ஒன்றாகும். இது மறுமை நாள் வரை ஹராமாகும்” என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், “ஒருவன் தன் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் விபச்சாரம் செய்வதை விட (மற்ற) பத்துப் பெண்களிடம் விபச்சாரம் செய்வது (தண்டனையில்) இலேசானதாகும்” என்று கூறினார்கள். “திருட்டைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, “அதை அல்லாஹ்வும் அவன் தூதரும் தடை செய்துள்ளார்கள். எனவே அது ஹராமாகும்” என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஒருவன் பக்கத்து வீட்டில் திருடுவதை விட (மற்ற) பத்து வீட்டில் திருடுவது (தண்டனையில்) இலேசானதாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அல்மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி)
நூல்: அஹ்மத் 22734


அதாவது ஒருவர் பக்க வீட்டுப் பெண்ணிடம் விபச்சாரம் செய்வது, மற்ற பத்து பெண்களை விபச்சாரம் செய்தால் கிடைக்கும் தண்டனையை விட மிகக் கடுமையானதாகும்.

ஒருவர் பக்கத்து வீட்டில் திருடுவது, மற்ற பத்து வீட்டில் திருடுவதால் கிடைக்கும் தண்டனையை விட மிகக் கடுமையானதாகும்.
மறுமையில் முறையிடுதல்

அண்டை வீட்டாருக்கு நலம் நாடாமல் தான் மட்டும் நன்றாக இருந்தவனுக்கு எதிராக அவனது அண்டை வீட்டான் அல்லாஹ்விடம் முறையிட்டு நீதி கேட்பான்.

தன் அண்டை வீட்டாருடன் தொடர்புள்ள எத்தனையோ பேர், அல்லாஹ்விடம், “என் இறைவா! இவன் என்னை (வீட்டுக்குள்) விடாமல் கதவை தாளிட்டுக் கொண்டான்; நல்லதை (எனக்கு தராமல்) தடுத்தான்” என்று மறுமை நாளில் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: அதபுல் முஃப்ரத் 111


நன்மையான காரியங்களில் கூட்டாகுதல் மார்க்கம் தொடர்பான மற்றும் நல்ல காரியங்களில் கூட்டாக செயல்படும் போது கூடுதல் நன்மைகள் கிடைக்கின்றன. அண்டை வீட்டாருக்கு நன்மையான காரிங்களை எடுத்துச் சொல்லுதல், தீமையான காரியங்களைச் செய்தால் அதைத் தடுத்தல், நற்காரியங்கள் நடக்கும் சபைகளுக்கு அழைத்துச் செல்லுதல், தவறும் பட்சத்தில் கேட்ட நல்ல செய்திகளை அண்டை வீட்டாருக்குச் சொல்லுதல் என்று நற்காரியங்களில் கூட்டாக செயல்பட்டு நன்மைகளை அள்ளிச் செல்ல வேண்டும். நபித்தோழர்கள் இவ்வாறு நற்காரியங்களில் கூட்டாகச் செயல்பட்டுள்ளனர்.
நானும் அன்சாரித் தோழர்களில் ஒருவரான எனது அண்டை வீட்டுக்காரரும், உமைய்யா பின் ஜைத் என்பாரின் சந்ததிகள் வசித்து வந்த இடத்தில் வாழ்ந்து வந்தோம். அது மதீனாவின் உயரமான இடங்களில் ஒன்றாகும். நபி (ஸல்) அவர்களுடைய அவைக்கு நாங்கள் முறை வைத்துச் சென்று வந்தோம். ஒரு நாள் அவர் செல்வார்; ஒரு நாள் நான் செல்வேன்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)
நூல்: புகாரீ 89


திருக்குர்ஆன் அறிவுரைகள், நபிகளாரின் விளக்கங்களை முறை வைத்துக் கற்று வந்த நபித்தோழர்களைப் போல் அண்டை வீட்டார்கள் சேர்ந்து போக முடியாத நேரங்களில் ஒருவர் சென்று நல்ல செய்திகளைக் கேட்டறிந்து தம் அண்டை வீட்டாருக்கும் எடுத்துச் சொல்லி நன்மையில் கூட்டாக வேண்டும்.

அல்லாஹ்விடம் சிறந்தவர்

“நண்பர்களில் அல்லாஹ்விடம் சிறந்தவர் தம் நண்பர்களிடம் சிறந்தவர்களாக இருப்பவர்களே! பக்கத்து வீட்டாரில் அல்லாஹ்விடம் சிறந்தவர், தம் பக்கத்து வீட்டாரிடம் சிறந்தவராக இருப்பவரே!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி)
நூல்: திர்மிதீ 1867)


நல்ல அண்டை வீட்டார்

“நல்ல அண்டை வீட்டார் அமைவது, நல்ல வாகனம் கிடைப்பது, விசாலமான வீடு இருப்பது ஆகியவை ஒரு மனிதனின் நற்பேறில் உள்ளதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: அஹ்மத் 14830


தொல்லையைப் பொறுத்துக் கொள்ளுதல்

அண்டை வீட்டார் என்று வரும் போது சில பிரச்சனைகள் ஏற்படத் தான் செய்யும். அதைப் பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு, வாழ்நாள் பகைவர்களாக மாறி விடாதீர்கள்.
அவர்கள் தரும் சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு அவருக்குச் சரியான அறிவுரைகளைக் கூறி திருத்தினால் இறைவனின் பேரருள் கிடைக்கும்.

ஒரு மனிதனுக்குத் தொல்லை தரும் அண்டை வீட்டார் இருக்கிறார்கள். அவரோ அவரின் தொல்லைகளைப் பொறுத்துக் கொண்டால் அல்லாஹ் அவரின் வாழ்வு, சாவுக்குப் போதுமானவனாக இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: ஹாகிம் 2446)

-அபூ ஹாரிஸ்

நோன்பின் நிய்யத்

எல்லா வணக்கங்களும் நிய்யத்தைப்பொறுத்தே! என்று நபிகள்நாயகம்(ஸல்)
அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல்:புகாரி 1
தொழுகையானாலும்,
நோன்பானாலும்,இன்ன பிற வணக்கங்களானாலும்
நிய்யத் மிகவும் அவசியமாகும்.
நிய்யத்என்றால் என்ன?
இதைப் பற்றியும்
பெரும்பாலான மக்கள்
அறியாதவர்களாகவே
உள்ளனர். குறிப்பிட்ட சில வாசகங்களை வாயால் மொழிவது தான்
நிய்யத் என இவர்கள் நினைக்கின்றனர். பல
காரணங்களால்
இவர்களது நினைப்பு தவறானதாகும்.
நிய்யத் என்ற வார்த்தைக்கு மனதால்
எண்ணுதல், தீர்மானம் செய்தல் என்பது
பொருளாகும். வாயால் மொழிவது என்ற
அர்த்தம் இந்த வார்த்தைக்கு இல்லை.
ஒருவருக்குக் காலையில் எழுந்தது முதல், இரவு வரை ஒரு சொட்டு தண்ணீர் கூட
கிடைக்கவில்லை. நோன்பைக்கடைப்பிடிக்க வேண்டிய நேரம்
முழுவதும் எதையும்
உண்ணாமல் பருகாமல் குடும்ப வாழக்கையில் ஈடுபடாமல் இருந்துள்ளார்.
ஆனால் நோன்பு வைப்பதாக இவர்
எண்ணவில்லை. ஏதாவது கிடைத்தால்
சாப்பிடிருப்பார்.
நோன்பாளியைப் போலவே இவர் எதையும் உட்கொள்ளாவிட்டாலும்
நோன்பு நோற்கும்
தீர்மானம் எடுக்காததால் இவர் நோன்பு வைக்கவில்லை.
இவ்வாறு மனதால் முடிவு செய்வது தான் நிய்யத் எனப்படுகிறது.
ஒருவர் ரமளான்
மாதத்தில் வழக்கத்திற்கு மாறாக நான்கு மணிக்கு எழுகிறார். வழக்கத்திற்கு மாறாக இந்த நேரத்தில் சாப்பிடுகிறார்.
நோன்பு நோற்கும் எண்ணம் அவரது
உள்ளத்தில் இருப்பதன்
காரணமாகவே இவர்
இப்படி நடந்து கொள்கிறார். எனவே
இவர் நிய்யத் செய்து விட்டார்.
இன்னும் சொல்வதாக இருந்தால் இரவில்
படுக்கும் போதே ஸஹருக்கு எழ
வேண்டும் என்ற எண்ணத்தில் தான்
படுக்கிறார். இது தான் நிய்யத்! இதற்கு மேல் வேறு ஒன்றும் தேவையில்லை.
நோன்பு நோற்பதாக
மனதால் உறுதி செய்ய வேண்டும் என்பதே சரியானதாகும். ஆனால் ஒரு குறிப்பிட்ட வாசகத்தைக்
கூறுவதற்கு நிய்யத் என்ற நம்பிக்கை நடைமுறையில்
உள்ளது.
நவைத்து ஸவ்ம கதின்
அன்அதாயி பர்ளி ரமளானி ஹாதிஹிஸ்
ஸனதி லில்லாஹி தஆலா என்பது தான்
அந்தக் குறிப்பிட்ட வாசகம்.
இந்த வருடத்தின்
ரமளான் மாதத்தின் பர்லான நோன்பை அதாவாக நாளைப் பிடிக்க நிய்யத்
செய்கிறேன் என்று தமிழாக்கம் வேறு செய்து அதையும் கூற
வேண்டும் என்று
நினைக்கின்றார்கள்.
இந்த வாசகத்தைக்
கூற வேண்டுமென்று அல்லாஹ் கூறினானா?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதைக் கூறினார்களா?
அதுவுமில்லை.
அவர்களிடம் பாடம் கற்ற
நான்கு கலீபாக்களோ, ஏனைய நபித்தோழர்களோ
இவ்வாசகத்தைக் கூறினார்களா?
என்றால் அதுவும் இல்லை.
நான்கு இமாம்களாவது
இவ்வாறு கூறியுள்ளார்களா?
என்றால் அது கூட இல்லை.
உலகில் எல்லா
நாடுகளிலும் முஸ்லிம்கள்
வாழ்கின்றனர். எங்கேயும் இந்த
வழக்கம் இல்லை.
இந்தியாவிலும், இந்தியர்கள் போய்க்
கெடுத்த நாடுகளிலும்
தவிர வேறு எங்கும் இந்த வழக்கம்
இல்லை.
நிய்யத் என்பதன் பொருள் மனதால்
நினைத்தல் என்பதாலும் நபிகள்நாயகம்(ஸல்) அவர்கள் இதைக்
கற்றுத்தராததாலும் இதை விடடொழிக்க
வேண்டும்.
யாரேனும் நமது கட்டளை இல்லாமல் ஒரு அமலைச் செய்வாரேயானால்
அது நிராகரிக்கப்படும் என நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்:முஸ்லிம் 3243
மேலும் நிய்யத் என்ற பெயரில் சொல்லித் தரப்படும் வாசகத்தின்
பொருளைச்சிந்தித்தால் கூட அது இஸ்லாமிய
நடைமுறைக்கு எதிரானதாகவே உள்ளது.
ரமாளன் மாதத்தின் பர்லான நோன்பை அதாவாக நாளை பிடிக்க நிய்யத் செய்கிறேன்
என்பது இதன் பொருள்.
இஸ்லாமிய அடிப்படையில் ஒரு நாள் என்பது மஃக்ரிபிலிருந்து
ஆரம்பமாகிறது. இஸ்லாம் பற்றிய
அறிவு பெரிய அளவில்
இல்லாதவர்கள் கூட நாளை வெள்ளிக்கிழமை என்றால் வியாழன்
பின் நேரத்தை வெள்ளி இரவு என்றே கூறும்
வழக்கமுடையவர்களாக உள்ளனர்.
ஒருவர் ஸஹர் நேரத்தில் நாளை பிடிப்பதாக நிய்யத் செய்கிறார். ஆனால்
உண்மையில் இன்று தான் நோன்பு நோற்கிறாரே தவிர
நாளை அல்ல!
ஏனெனில் ஸஹரைத்
தொடர்ந்து வரக் கூடிய சுபுஹ் இன்று தானே தவிர நாளை அல்ல! இதைச் சிந்தித்தால்
கூட இது மார்க்கத்தில் உள்ளது அல்ல
என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
எனவே இது போன்ற நவீன கண்டுபிடிப்புகளை
விட்டுவிட்டு அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டித் தந்த
முறைப்படி மனதால் நோன்பு நோற்பதாக
உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே நிய்யத் எனப்படும்.

சுபுஹூத் தொழுகையின் முன் சுன்னத்

சுபுஹூத் தொழுகையின் முன் சுன்னத் சம்பந்தமாக சில முஸ்லிம்கள் செய்யும் தவறு :
நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய ஸுன்னத் அளவிற்கு வேறு எந்த உபரித் தொழுகைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை.
அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி)
நூல்: புகாரி 1169
இதிலிருந்து சுபுஹின் முன் சுன்னத் முக்கியமானது என்பதை அறியலாம். ஆனால் சில முஸ்லிம்கள் பள்ளிவாசலில் சுபுஹூ பர்ளு தொழுகை நடக்கும் போது தாமதமாக வந்து முன் சுன்னத் தொழுது விட்டு பின்பு ஜமாஅத்தில் கலந்து கொள்வார்கள். ஆனால் இவ்வாறு செய்வதற்கு நபி(ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளார்கள் என்பதை பின்வரும் ஹதீஸ்களிலிருந்து அறியலாம்.
‘(கடமையான) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் அந்தக் கடமையான தொழுகை தவிர வேறு தொழுகை இல்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1281,1282
அப்துல்லாஹ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
சுப்ஹுத் தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட பின் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுது கொண்டிருந்த ஒரு மனிதரைக் கடந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றார்கள். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதோ சொன்னார்கள்; என்ன சொன்னார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை. தொழுது முடித்ததும் நாங்கள் அந்த மனிதரைச் சூழ்ந்துகொண்டு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மிடம் என்ன சொன்னார்கள்?” என்று கேட்டோம். அவர், “உங்களில் ஒருவர் சுப்ஹுத் தொழுகையை நான்கு ரக்அத்களாக்கிவிடப் பார்க்கிறார்’ என்று கூறினார்கள் என்றார்.
நூல்: முஸ்லிம் 1283
இப்னு புஹைனா (அப்துல்லாஹ் பின் மாலிக் -ரலி) அவர்கள் கூறியதாவது:
சுப்ஹுத் தொழுகைக்கு இகாமத் சொல்லப் பட்டது; அப்போது ஒரு மனிதர் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுதுகொண்டிருப்பதை அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டார்கள்; முஅத்தின் இகாமத் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த மனிதரிடம்), “சுப்ஹை நான்கு ரக்அத்களாகத் தொழப்போகிறீரா?” என்று கேட்டார்கள்.
நூல்: முஸ்லிம் 1284
அப்துல்லாஹ் பின் சர்ஜிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வைகறைத் தொழுகை (சுப்ஹுத்) தொழுவித்துக் கொண்டிருந்தபோது ஒரு மனிதர் பள்ளி வாசலுக்குள் நுழைந்தார்; பள்ளிவாசலின் ஒரு மூலையில் (சுப்ஹுடைய சுன்னத்) இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டுப் பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (தொழுகையில்) சேர்ந்துகொண்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்ததும், “இன்னாரே! இவ்விரு தொழுகைகளில் எதைக் கருதி வந்தீர்? நீர் தனியாகத் தொழுவதற்கா? அல்லது எம்முடன் சேர்ந்து தொழுவதற்கா?” என்று கேட்டார்கள்.
நூல்: முஸ்லிம் 1285
அப்துல்லாஹ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட பின்னர் ஒரு மனிதர் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுது கொண்டிருப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் மக்கள் அந்த மனிதரை சூழ்ந்துவிட்டனர். அப்போது அந்த மனிதரிடம் நபி (ஸல்) அவர்கள், சுப்ஹு (என்ன) நான்கு ரக்அத்களா? சுப்ஹு (என்ன) நான்கு ரக்அத்களா? என்று (கடிந்தவாறு) கேட்டார்கள்.
நூல்: புகாரி 663
சுபுஹின் ஜமாஅத் நடக்கும் போது ஜமாஅத் தொழுகையை தொழுது விட்டு பின்பு விடுபட்ட முன்சுன்னத்தை பின்பு தொழலாம் என்பதை பின்வரும் ஹதீஸ்களிலிருந்து அறியலாம்.
நபி (ஸல்) அவர்களுடன் நான் சுப்ஹு தொழுதேன். ஆனால் சுப்ஹுடைய (முன் சுன்னத்) இரண்டு ரக்அத்கள் நான் தொழவில்லை. எனவே நபி (ஸல்) அவர்கள் ஸலாம் சொன்ன பிறகு நான் எழுந்து (விடுபட்ட முன் சுன்னத்தான) பஜ்ருடைய இரண்டு ரக்அத்துகளைத் தொழுதேன். நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.
அறிவிப்பவர்: கைஸ் (ரலி)
நூல்: இப்னுஹிப்பான் 2471
“இறைவனின் தூதர்(ஸல்) அவர்கள் ஒருவரை ஸுப்ஹுக்குப் பின் இரண்டு ரக்அத்கள் தொழக் கண்டார்கள். அப்போது அவர்கள், “ஸுப்ஹுத் தொழுகை இரண்டு ரக்அத்கள்” என்று சொன்னார்கள். அதற்கவர், “ஸுப்ஹுக்கு முந்திய இரண்டு ரக்அத்களைத் தொழவில்லை. அவ்விரண்டையும் இப்போது தொழுதேன்” என்று பதிலளித்ததும் நபி (ஸல்) அவர்கள் மவுனமாகி விட்டார்கள்.”
அறிவிப்பவர்: கைஸ் பின் அம்ர் (ரலி)
நூல்: திர்மிதீ 387
நபிவழிப் படி நம் தொழுகைகளை அமைத்துக் கொள்வோம்.

ஜுமுஆத் தொழுகை

ஜுமுஆத் தொழுகை சம்பந்தமாக :
நம்பிக்கை கொண்டோரே ! வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால்
அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்!
நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது.
தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத்
தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
திருக்குர்ஆன் 62:9,10
சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஜுமுஆ நாளில் சொல்லப்படும் முதல் தொழுகை அறிவிப்பு (பாங்கு) அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர் ( ரலி) உமர் (ரலி) ஆகியோரது
காலத்திலும் இமாம் (உரையாற்றுவதற்கு முன்) சொற்பொழிவு மேடை மீது
அமர்ந்ததுமே சொல்லப்பட்டுவந்தது. உஸ்மான் (ரலி) அவர்கள் ஆட்சி காலத்தின்
போது மக்கள் தொகை உயர்ந்து விட்ட போது உஸ்மான் (ரலி) அவர்கள் ஜுமுஆ
நாளில் மூன்றாவது தொழுகை அறிவிப்பு சொல்லும்படி கட்டளையிட் டார்கள்.
ஆகவே , ( மதீனாவின் கடைவீதியிலுள்ள) ஸவ்ரா எனுமிடத்தில் தொழுகை
அறிவிப்புச் சொல்லப்பட்டது. (தொழுகை அறிவிப்பு விஷயத்தில் இரண்டு பாங்கு
ஒரு இகாமத் எனும்) அந்த நிலை நிலைபெற்று விட்டது.
நூல்: புகாரி 916
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் கூறினார்கள்:
வெள்ளிக்கிழமை குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவர்மீதும் கடமையாகும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் 1535
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஜுமுஆ நாள் (வெள்ளிக் கிழமை) வந்து விட்டால் வானவர்கள் (ஜுமுஆத் தொழுகை
நடக்கும்) பள்ளிவாசலின் நுழைவாயிலில் நின்று கொண்டு முதன் முதலாக உள்ளே
நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்களின் பெயர்களை)
எழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். நேரத்தோடு (ஜுமுஆ வுக்கு)
வருபவரது நிலை ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவரது நிலைக்கு
ஒப்பானதாகும். அதற்கடுத்து வருபவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர்
போன்றவராவார். அதற்கடுத்து வருபவர் கொம்புள்ள ஓர் ஆட்டையும் அதற்கடுத்து
வருபவர் ஒரு கோழியையும் அதற்கடுத்து வருபவர் ஒரு முட்டையையும் தர்மம்
செய்தவர் போன்றாவார்கள். இமாம் ( உரையாற்றுவதற்காகப்) புறப்பட்டு வந்து
விட்டால் வானவர்கள் தங்கள் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி (வைத்து)
விட்டு (அவரது உபதேச) உரையைச் செவி தாழ்த்திக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி 929
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஜுமுஆ நாளில் ஒருவர் குளிக்கிறார். தம்மால் இயன்ற தூய்மைகள்
மேற்கொள்கிறார். தம்மிடமுள்ள எண்ணெயைத் தேய்த்துக் கொள்கிறார். அல்லது
தம் வீட்டிலுள்ள நறுமணத்தைத் தடவிக் கொள்கிறார். பிறகு புறப்பட்டு
(நெரிசலை உருவாக்கும் விதமாக) இருவரை பிரித்துக் கொண்டு வராமல்
(பள்ளிக்கு) வந்து தமக்கு விதியாக்கப்பட்டுள் ளதைத் தொழுகிறார். பிறகு
இமாம் உரையாற்றத் தொடங்கியதும் அமைதியாக அதைச் செவியேற்கிறார். எனில்
அவருக்கு அந்த ஜுமுஆவுக்கும் அடுத்த ஜுமுஆவுக்கும் இடையிலேற்படும்
பாவங்கள் மன்னிக்கப்பட்டே தீருகின்றன.
இதை சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி 883
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று
உரையாற்றிக்கொண்டிருக்கையில் ஒரு மனிதர் பள்ளிவாசலுக்குள்ளே வந்(து
தொழாமல் அமர்ந்)தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீர்
தொழுதுவிட்டீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் “இல்லை’ என்றார்.
“எழுந்து இரண்டு ரக்அத்கள் தொழுவீராக!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 1585
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் ஜுமுஆ தொழுத பின் நான்கு ரக்அத்கள் (சுன்னத்) தொழட்டும்!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் 1597
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆ தொழுத பின் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்.
இதை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் 1602

புறம் பேசுதல்

புறம் பேசுவது சம்பந்தமான குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள் :
குறை கூறிப் புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடு தான்.
திருக்குர்ஆன் 104:1
நம்பிக்கை கொண்டோரே ! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்!
சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர்
மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின்
மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை
அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
திருக்குர்ஆன் 49:12
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்) , ” புறம்
பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா ?” என்று
கேட்டார்கள். அதற்கு மக்கள் , ” அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே
நன்கறிந்தவர்கள் ” என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் , ” நீர் உம்முடைய சகோதரரைப் பற்றி அவர் விரும்பாத ஒன்றைக்
கூறுவதாகும் ” என்று பதிலளித்தார்கள். அப்போது , ” நான் சொல்லும் குறை என் சகோதரரிடம் இருந்தாலுமா ? ( புறம் பேசுதலாக ஆகும்) , கூறுங்கள் ” என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் , ” நீர்
சொல்லும் குறை உம்முடைய சகோதரரிடம் இருந்தால்தான் , நீர் அவரைப் பற்றிப்
புறம் பேசினீர் என்றாகும். நீர் சொன்ன குறை அவரிடம் இல்லாவிட்டாலோ ,
நீர் அவரைப் பற்றி அவதூறு சொன்னவராவீர் ” என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 5048
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் மிஃராஜிற்கு கொண்டு செல்லப்பட்ட போது ஒரு கூட்டத்தார்களை கடந்து
சென்றேன். அவர்களுக்கு செம்பு உலோகத்திலான நகங்கள் இருந்தன. அதன் மூலம்
தங்களுடைய முகங்களையும், நெஞ்சையும் பிளந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் யார் என்று ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் வினவினேன். அதற்கவர்கள் இவர்கள்
தான் (புறம் பேசி) மக்களுடைய இறைச்சியை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
இன்னும் இவர்கள் தான் மக்களின் மானங்களில் விளையாடிக்கொண்டிருந்தார்கள் என்று கூறினார்.
நூல்: அபூதாவூத் 4235
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
( ஆதாரமில்லாமல் பிறரைச்) சந்தேகிப்பது குறித்து உங்களை நான்
எச்சரிக்கிறேன். ஏனெனில் சந்தேகம் கொள்வது , பெரும் பொய்யாகும்.
(பிறரைப் பற்றித்) துருவித்துருவிக் கேட்காதீர்கள் ; ( அவர்களின்
அந்தரங்கம் பற்றி) ஆராயாதீர்கள். (நீங்கள் வாழ்வதற்காகப் பிறர் வீழ வேண்டுமெனப்) போட்டியிட்டுக்கொள்ளாதீர்கள் ; பொறாமை கொள்ளாதீர்கள் ;
கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக்கொள்ளாதீர்கள். (மாறாக) அல்லாஹ்வின்
அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் 5006
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு மண்ணறைகளை (கப்றுகளை)க்
கடந்து சென்றார்கள். அப்போது (மண்ணறை களிலுள்ள) இவ்விருவரும் வேதனை
செய்யப் படுகிறார்கள். ஆனால் மிகப்பெரும் (பாவச்) செயலுக்காக (இவர்கள்)
இருவரும் வேதனை செய்யப்படவில்லலை. இதோ! இவர் (தம் வாழ்நாளில்) சிறுநீர்
கழிக்கும் போது (தம் உடலை) மறைக்க மாட்டார். இதோ! இவர் (மக்களிடையே) கோள்
சொல்லி (புறம்பேசி)த் திரிந்து கொண்டிருந்தார் என்று கூறினார்கள். பிறகு பச்சைப் பேரீச்ச மட்டையொன்றைக் கொண்டுவரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து இவர் (மண்ணறை) மீது ஒன்றையும் அவர் (மண்ணறை) மீது ஒன்றையும் நட்டார்கள்.
பிறகு, இவ்விரண்டின் ஈரம் உலராதவரை இவர்களின் வேதனை குறைக்கப்படலாம் என்று சொன்னார்கள்.
நூல்: புகாரி 6052
ஒரு முஸ்லிமின் மானத்தில் உரிமையும் இல்லாமல் வரம்பு மீறுவதுதான்
தண்டனைகளிலே மிகப்பெரியது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: அபூதாவூத் 4233
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியார் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசிவிடுகிறார்.
அதன் காரணமாக அவர் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவைவிட
அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார்.
நூல்: புகாரி 6477
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக் குரிய ஓரு வார்த்தையை சர்வசாதாரணமாக
(அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக
அல்லாஹ் அவருடைய அந்தஸ்துகளை உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன்
பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி 6478
யார் ஒரு முஃமினிடம் இல்லாததை கூறுவாரோ அவரை அல்லாஹ், சகதியும், நரகவாசிகளின் சீலும் சலமும் கலந்திருக்கின்ற மலையில் தங்க வைப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: அபூதாவூத் 3123

சகுனம் பார்த்தல்

ஜோதிடம் , நல்லநாள் , கெட்டநாள் , நட்சத்திரம் பார்த்தல் , சகுனம்
பார்த்தல் ஆகியவற்றை இஸ்லாம் முழுமையாகத் தடை செய்கின்றது.
நாட்களிலோ,நேரங்களிலோ முற்றிலும் நன்மை பயக்கக் கூடியதும்
கிடையாது. முற்றிலும்
தீமை பயக்கக் கூடியதும் கிடையாது.
எந்த நேரமானாலும் அதில் சிலர் நன்மையை
அடைவார்கள். மற்றும் சிலர் கேடுகளை அடைவார்கள்.
ஒரு குறிப்பிட்ட நாள்
நல்ல நாள் என்றால் அந்நாளில் யாரும்
சாகக் கூடாது. யாருக்கும் நோய் ஏற்படக் கூடாது. அந்நாளில் கவலையோ ,
துக்கமோ நிம்மதியின்மையோ ஏற்படக்கூடாது. இப்படி ஒரு நாள் கிடையாது என்பது சாதாரண உண்மை.
எந்த நாள் கெட்டநாள் என்று சிலரால்
ஒதுக்கப்படுகின்றதோ அந்நாளில் குழந்தை பாக்கியம்பெற்றவர்கள் , பொருள்
வசதியடைந்தவர்கள் இருக்கிறார்கள்.
இஸ்லாமிய
வரலாற்றிலிருந்து கூட
இதற்கொரு உதாரணத்தைக் கூறலாம்.
முஹர்ரம் மாதம்
பத்தாம் நாள் ஃபிர்அவ்ன்
அழிக்கப்பட்டு , மூஸா (அலை) அவர்கள்
காப்பாற்றப்பட்டனர்.
அதே முஹர்ரம் பத்தாம் நாளில் ஹுஸைன் (ரலி)
படுகொலை
செய்யப்பட்டார்கள்.
மூஸா நபி காப்பாற்றப்பட்டதால்
அதை நல்ல நாள் என்பதா ?
ஹுஸைன் (ரலி) கொல்லப்பட்டதால்
அதைக் கெட்ட நாள் என்பதா ?
நாட்களுக்கும் , நல்லது கெட்டது ஏற்படுவதற்கும்
எந்தச்சம்மந்தமுமில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.
‘ இந்தக் காலங்களை மக்களிடையே நாம்
சுழலச் செய்கிறோம் ‘.
அல்குர்ஆன் 3 :140
சுழலும் சக்கரத்தின் கீழ்ப்பகுதி மேலே வரும் , மேல்பகுதி கீழே செல்லும். இவ்வாறே காலத்தைச் சுழலவிட்டு
சிலரை மேலாகவும் சிலரைக்கீழாகவும் ஆக்கிக் கொண்டிருப்போம் என்று இங்கே அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
முஸ்லிம்கள் நம்பிக்கை கொள்ள வேண்டியவற்றில் விதியும் ஒன்றாகும்.
‘ நன்மை தீமை யாவும்
அல்லாஹ்விடமிருந்தே ஏற்படுகின்றன என்ற விதியையும் நான் நம்புகிறேன் ‘ என்ற உறுதி மொழி எடுத்த முஸ்லிம் நாள் நட்சத்திரம் பார்ப்பது அந்த உறுதிமொழிக்கு முரணாகும்.
ஒரு நாள் , நல்ல நாள் என்றோ கெட்ட நாள் என்றோ இருக்குமானால் அதை அல்லாஹ்
தான் அறிவான். அவன் அறிவித்தால் தவிர
எவராலும் அறிய முடியாது.
அல்லாஹ் திருக்குர்ஆனில் இன்னின்ன நாட்கள் நல்லநாட்கள் என்று கூறவில்லை.
அல்லாஹ்வின் தூதரும்
கூறவில்லை.
அல்லாஹ்வும் , அவனது தூதரும் கூறாததை மற்றவர்களால்எப்படி அறிய முடியும் ?
இன்னின்ன நாட்கள் இன்னின்ன நபர்களுக்கு நல்லநாட்கள் என்று நம்மைப் போன்ற ஒரு
மனிதன் தான் முடிவு செய்கிறான். அவனிடம் சென்று அல்லது அவன்
எழுதியதைப்பார்த்து நல்ல நாட்களைத்
தீர்மானிக்கிறோம்.
நம்மைப் போன்ற ஒரு மனிதன் எப்படி இது நல்ல நாள் தான்
என்று அறிந்து கொண்டான் ? இதைச்
சிந்திக்க வேண்டாமா ?
வருங்காலத்தில்
நடப்பதை அறிவிப்பதாகக் கூறுவதும் சோதிடமும்
ஒன்று தான்.
ஒரு மந்திரவாதியிடம்(?) ஹஜ்ரத்திடம் சென்று எனக்கு நல்லநாள் ஒன்றைக் கூறுங்கள்
என்று கேட்கின்றனர். அவரும் ஏதோ ஒரு நாளைக் கணித்துக் கூறுகிறார். அதை நம்பி தமது காரியங்களை நடத்துகின்றனர்.
யாரேனும் சோதிடனிடம் சென்று அவன் கூறுவதை நம்பினால்
அவனது நாற்பது
நாட்களின் தொழுகை ஏற்கப்படாது என்பது நபிமொழி.
நூல் : முஸ்லிம் 4137
யாரேனும் சோதிடனிடம் சென்று அவன்
கூறுவதை நம்பினால் முஹம்மதுக்கு
அருளப்பட்ட மார்க்கத்தை அவன்
நிராகரித்து விட்டான் என்பதும் நபிமொழி.
நூல் : அஹ்மத் 9171
இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும்.
உலகத்துக்கெல்லாம் நல்லநாள் கணித்துக் கூறக்கூடியவகளின் நிலைமையைப்
பாருங்கள்!
வறுமையிலும் , தரித்திரத்திலும் வீழ்ந்து கிடப்பதையும் , மக்களிடம் யாசித்து உண்பதையும் நாம்
காணலாம்.
இவர்கள் தங்களுக்கு என்று விஷேசமான
நல்லநாளைத் தேர்வு செய்து தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்ள
முடிந்ததா ? இது ஒரு பித்தலாட்டம் என்பது இதிருந்தே தெளிவாகவில்லையா ?
முஸ்லிம்கள் எந்த நாளிலும் எந்த நேரத்திலும் எந்த நல்ல
காரியங்களையும்
செய்யலாம். நாள் நட்சத்திரம் , சகுனம் , ஜோதிடம் ஆகிய
அனைத்திலிருந்தும் விலகிக்கொள்வது அவசியமாகும்.

திருமண துஆ

நமது நாட்டில் வழக்கமாக
திருமணத்தின் போது ஒரு துஆ ஓதி வருகின்றனர்.
அல்லாஹும்ம அல்லிப் பைனஹுமா….. என்று ஓதப்படும் அந்த துஆ நபிகள்நாயகம்(ஸல்)
காலத்திலோ ஸஹாபாக்கள் காலத்திலோ,
தாபியீன்கள் காலத்திலோ, நான்கு இமாம்களின்
காலத்திலோ நடைமுறையில்
இருந்ததில்லை.
தமிழகத்தைச் சேர்ந்த
சிலரது கண்டுபிடிப்பாகும் இது.
ஆதம்-ஹவ்வா போல் வாழ்க! அய்யூப்-
ரஹிமா போல் வாழ்க! என்ற கருத்தில்
பல நபிமார்களின் இல்லறம் போல்
வாழுமாறு பிரார்த்திக்கும் விதமாக
இந்த துஆ அமைந்துள்ளது.
அந்த நபிமார்களும் அவர்களின்
மனைவியரும் எப்படி இல்லறம் நடத்தினார்கள் என்ற விபரமோ,
அவர்களின் மனைவியர்
அவர்களுக்கு எந்த அளவு கட்டுப்பட்டு நடந்தனர் என்ற விபரமோ நமக்குத் தெரியாது.
அவர்களின் இல்லறம்
எப்படி இருந்தது என்பது தெரியாமல் அது போன்ற வாழ்க்கையைக்
கேட்பது அர்த்தமற்றதாகும்.
” உனக்கு அறிவில்லாத விஷயங்களை நீ
பின்பற்ற வேண்டாம் ”
அல்குர்ஆன் 7:38

எனவே இது போன்ற துஆக்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் கூட்டாக துஆக்களை ஓதுவதற்கும் ஆதாரம் இல்லை.
மணமக்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல துஆக்களைச்
செய்துள்ளனர்.
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) தமக்குத் திருமணம் நடந்த
செய்தியை நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களிடம் கூறிய போது ‘பாரகல்லாஹு லக’ (அல்லாஹ்
உனக்கு பரகத் – புலனுக்கு எட்டாத
பேரருள் – செய்வானாக) எனக் கூறினார்கள்.
நூல்:புகாரி 5155,6386
இதை ஆதாரமாகக்
கொண்டு பாரகல்லாஹு லக’ என்று கூறி வாழ்த்தலாம்.
‘பாரகல்லாஹு லகும், வபாரக அலைகும்’ என்று கூறுமாறு நபிகள்
நாயகம் (ஸல்) கற்றுத் தந்ததாகவும் ஹதீஸ் உள்ளது.
நூல்:அஹ்மத் 15181
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணத்தில் மணமக்களை வாழ்த்தும்
போது ‘பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கைர்’ என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ 1011, அபூதாவூத் 1819, அஹ்மத் 8599

‘அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக. நல்ல விஷயங்களில்
உங்கள் இருவரையும்
ஒன்று சேர்ப்பானாக’ என்பது இதன்
பொருள்.
ஒவ்வொருவரும் இந்த
துஆவை வாழ்த்தைக் கூற வேண்டும்.