“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்)
அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.
சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.
“இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”

உடல் அவயவங்கள் அனைத்தும் அவசியமே!

நமக்கு அல்லாஹ் அருளியிருக்கும் அருட்கொடைகளில் உடல் ஆரோக்கியம் என்பது மிக மிக அவசியமானது. அதிலும் குறைபாடுகள் இல்லாத உடல் அவயவங்கள் மைந்திருப்பதும் அல்லாஹ்வின் மகத்தான அருட்கொடைதான். அதற்காக நாம் ஆயுள் பூராவும் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினாலும் அவன் புரிந்த அனைத்து அருட்கொடைகளுக்கும் அவை ஈடாக மாட்டாது. எந்த விடயமானாலும் அது நம்மிடம் இருக்கும் போது தெரியாத அருமையும், அவசியமும் அதனை இழந்தால் தான் புரியும்.

இதற்கு சான்றாக 2008 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வேச மாநாட்டு மண்டபத்தில் சமீதா சமன்மலி எனும் மருத்துவ கல்லூரி மாணவிக்கு எதிர்பாராத விதமாக நடந்த அசம்பாவிதத்தைக் கூறலாம். தற்போது அவர் மருத்துவ பட்டப்படிப்பை பூர்த்தி செய்து விட்டு மருத்துவ பயிற்சியில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஈடுபட்டிருக்கிறார்.
2008 ஆம் ஆண்டு பெப்ரவரி 15 ஆம் திகதி மருத்துவ கல்லூரி மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட “Medex 2008” என்ற கண்காட்சிக்கான ஏற்பாட்டு வேலைகளை கண்காணிப்பதற்காக தனது சக தோழர்களோடு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வேச மாநாட்டு மண்டபத்திற்கு சென்றிருந்த வேளையில் அங்கு வைக்கப்பட்டிருந்த கூடாரத்தின் இரும்புக் கம்பி இவரது தலையில் விழுந்தமையால் முதுகெலும்பு பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் ஊனமுற்ற நிலைக்கு ஆளாகியிருக்கிறார். அதற்காக நஷ்டஈடு கேட்டு போட்ட வழக்கு விசாரணையில் அவர் கூறிய விடயங்களை அல்லாஹ்வின் வல்லமையை பறைசாற்றுவதற்காக இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
பாடசாலைக் கல்வியை மிகவும் சிறந்த முறையில் கற்று பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்துக்கும் தெரிவாகிய இவர் பல கனவுகளோடு மருத்துவத்துறைக்கு காலடி எடுத்து வைத்த பின்னர் இந்த அசம்பாவிதத்தால் தன் கனவுகள் அனைத்தும் சுக்கு நூறாகியது. ஏனெனில், இவரது நெஞ்சுப் பகுதியிலிருந்து கால் வரை பூரணமாக உணர்வு இல்லாமல் உள்ளது. அதனால் கத்தியால் உடலைக் குத்தினாலும் வலியை உணர முடியாதது மட்டுமல்லாமல் சிறுநீர், மலம் வெளியேறினாலும் கூட தெரியாத நிலையில் உள்ளார். இதனால் பலர் முன்னிலையில் தன்னை அறியாமல் சிறுநீர், மலம் வெளியேறிய சந்தர்ப்பம் ஏராளம் நிகழ்ந்துள்ளது என்று கண்ணீர் விட்டு அழுத வண்ணம் வழக்கு விசாரனையின் போது கூறியுள்ளார்.

இந்த அசம்பாவிதத்தின் பின்னர் படுத்த படுக்கையாக கிடந்த இவரை சீனாவில் உள்ள ஒரு வைத்தியசாலைக்கு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு சென்றும் பலனளிக்காமல் போகவே அங்குள்ள மருத்துவர்களின் சிபார்சின் மூலம் சிங்கப்பூர் புனர்வாழ்வு வைத்தியசாலைக்கு சென்ற இவர் தனக்கு குறைந்தது உட்கார்ந்து கொள்ள முடியுமான அளவுக்கு மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்று எதிர்ப்பார்த்திருந்தார். அல்லாஹ்வின் கிருபையால் உட்கார்ந்திருக்கும் அளவுக்கு அவர்களுடைய சிகிச்சை முறைகள் அமைந்திருந்தன. ஆனாலும், அவரது உடம்பு உணர்வற்ற நிலையில் தான் இன்று வரை உள்ளது. அதிலும் 1/5 பகுதி மாத்திரமே இயங்கக் கூடியதாகவும் உள்ளது. அதிநவீன தொழிநுட்ப வசதியுடைய சர்க்கர நாற்காலி ஒன்றின் மூலம் தற்போது தனது மருத்துவ உள்ளகப் பயிற்சியை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொண்டு வருகிறார்.
இன்னும் நுரையீரல் செயற்பாடு இன்மையால் விரைவாக நியூமோனியா நோய் ஏற்படவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. நுரையீரலில் ஏற்படும் சளியை இருமுவதன் மூலம் வெளியேற்றலாம். ஆனால், இவருக்கு இருமுவதற்கு கூட முடியாத படியால் சளியை வெளியேற்ற முடியாது. அதனால் நியூமோனியா நோய் ஏற்பட்டால் அதனை குணப்படுத்த முடியாது. அப்படி நியூமோனியா நோய் ஏற்பட்டால் அது எனது வாழ்வின் முடிவாகத் தான் இருக்கும் என்று கூறுகிறார். தொடர்ந்து உட்கார்ந்து கொண்டு இருப்பதால் இவரது உடல் சர்க்கர நாற்காலியில் உராயப்படுவதால் உடம்பில் புண்கள் ஏற்படலாம். அதுவும் எந்த ஒரு வலியும் உணரப்படாமையினால் புண் ஏற்பட்டாலும் தெரியாது. அவ்வாறு புண்கள் ஏற்பட்டு அதன் மூலம் கிருமித் தொற்று ஏற்பட்டால் அதுவும் தனது மரணம் நிகழ ஒரு காரணமாகும் என்கிறார்.
அது மாத்திரமன்றி வைத்தியசாலையில் மருத்துவ பயிற்சியில் ஈடுபட்டிருப்பதால் கிருமித்தொற்றுக்கு ஆளாகவும் நேரிடும். அத்தோடு காச நோய் உள்ள நோயாளிகளைப் பரீட்சிப்பதாலும் தொற்றுகள் ஏற்படலாம். அதனால் இவரது சக மருத்துவ தோழர்கள் தொற்று நோயாளிகளிடத்தில் இவரைக் கொண்டு செல்லாது தாமே பரீட்சிக்க செல்கின்றனர். எதிர்ப்பாராத விதமாக இவருக்கு காசநோய் ஏற்படின் அதன் முடிவும் மரணம் தான்.
உணர்வற்ற உடலுடன் வாழும் இவருக்கு பசி கூட உணரப்படுவது இல்லை. ஆனால்ää சாப்பிடாமல் இருந்தால் வாயுத் தொல்லை மூலம் இரைப்பை அழற்சி ஏற்படும். அதனால் வேளாவேளைக்கு சாப்பிடுகிறார். ஆனால் சாதாரண மனிதரைப் போல் இவருக்கு சமிபாடு அடைவது கிடையாது. எனவே, அதுவும் கூட மருந்துகளால் தான் நடக்கின்றது.
தனது இயற்கைத் தேவைகளை கூட கெதீட்டர் (catheter) மற்றும் பெம்பஸ் (papas) மூலம் நிறைவு செய்து கொள்கிறார். ஆக மொத்தத்தில் தனது கட்டுப்பாட்டில் மலசல தேவையைக் கூட செய்து கொள்ள முடியாத ஒரு இக்கட்டான நிலையில் இவர் இருப்பது அல்லாஹ்வின் சோதனை தான்.
மேற்கூறப்பட்ட அனைத்து விடயங்களையும் அவதானிக்குமிடத்து நமக்கு அல்லாஹ்வின் அருளால் இப்படியான ஒரு இக்கட்டான சூழ்நிலை கிடையாது. ஆனால், சின்னதொரு வலியோ அல்லது கவலையோ ஏற்படின் அதனை தாங்க முடியாதவர்களாக பொறுமையிழந்து புலம்புகிறோம். அல்லாஹ் நமக்கு அளித்த அருட்கொடைகளை எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள் மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!         அல்குர்ஆன் (2 : 155)
எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.      திருக்குர்ஆன் (2 : 286)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இறைநம்பிக்கையாளருக்கு ஏற்படும் வலி, துன்பம், நோய், கவலை, அவர் உணரும் சிறு மனவேதனை உள்பட எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களில் சில மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.                   
நூல் : முஸ்லிம் 5030

“ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும், அது அல்லாத வேறு எந்தத் துன்பமாயினும் (அதற்கு ஈடாக), மரம் தன் இலைகளை உதிர்த்துவிடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் இருப்பதில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.              
நூல் : முஸ்லிம் 5023
ஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி),                       
நூல்: திர்மிதீ 2319
எனவே, அல்லாஹ்வின் சோதனையை பொறுமையுடன் எதிர்கொண்டு ஈருலகிலும் வெற்றி பெறுவோமாக! அவனது அருள்களுக்காய் அனுதினமும் நன்றியுடைய அடியார்களாய் வாழ்வோமாக!

No comments:

Post a Comment