“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்)
அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.
சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.
“இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”

“ ஈ ” யின் மூலம் இரு அறிவியல் உண்மைகள்

உலக மக்கள் உண்மையை உணர்ந்து நேர் வழி பெறவேண்டும் என்பதற்காக, ஏராளமான உதாரணங்களை அல்லாஹ் அல் குர்ஆனில் கூறி மனிதனை சிந்திக்க தூண்டுகிறான். நாம் அற்பமாக கருதும் கொசு, ஈக்கள், சிலந்தி போன்ற சிறு உயிர்களை உதாரணமாக கூறி தன் வல்லமையை அறிவுறுத்துகிறான். அவ்வகையில் வரும் ஒரு வசனம்தான்,
“ மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவி தாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூட படைக்க முடியாது; இன்னும் அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக்கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடமிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும்,தேடப்படுவோனும் பலஹீனர்களே!”  அல் குர்ஆன்.22:73.
இவ்வசனத்தில் நம்மோடு ஒன்றாய் வாழும் ஈயைப் பற்றி அல்லாஹ் சொல்லிக்காட்டுகிறான். எளிய உடலமைப்புக் கொண்ட ஈயைப் பற்றிய விபரம் அல் குர்ஆன் இறங்கிய ஆறாம் நூற்றாண்டு மக்களுக்கு நிச்சயமாக தெரிய வாய்ப்பில்லை. அது எவ்வாறு உணவு உட்கொள்கிறது என்பதும் எவருக்கும் தெரியாது. இந்த ஈக்களில் சுமார் 30,000 வகைகள் உள்ளன. மனிதன் படைக்கப்படுவதற்கு முன்பிருந்தே 65 மில்லியன் வருடங்களுக்கு முன்பிருந்தே ஈக்கள் உலகில் நடமாடுகின்றன.
ஒரு ஜோடி இறக்கைகொண்ட ஈயானது நொடிக்கு 1000 தடவை தன் சிறகை அடிக்கும் தன்மை கொண்டது. மணிக்கு 5 கி.மீ. பறக்கும் திறனுடையது. அதன் ஒவ்வொரு கூட்டுக் கண்களிலும் சுமார் 4000 லென்ஸ்கள் உள்ளன. தன்னுடைய நுகரும் தன்மையைக்கொண்டே உணவுகளைத் தேடுகின்றன. ஈக்களுக்கு உணவை மென்று அரைத்துத் தின்னும் பற்கள் கிடையாது. ஆகவே ஈயானது திட உணவுப்பொருள்களை நேரடியாக வாயில் வைத்து மென்று தின்ன முடியாது.
திரவ நிலையில் உள்ள உணவுகளை தனது வாயில் உள்ள  (Proboscis) ஸ்பான்ஜ் போன்ற உறுப்பால் ஒற்றி உருஞ்சிக்கொள்ளும். திட உணவாக இருப்பின் தனது உமிழ்நீரை அப்பொருளில் உமிழ்ந்து அதைக்கரைத்து நீர்ம நிலையில் உறுஞ்சி நேரடியாக வயிற்றுக்குள் அனுப்புகிறது. இந்த அறிவியல் உண்மைகள் எல்லாம் பொருள்களை பெரிதாக்கிக்காட்டும் மைக்ராஸ்கோப் சுமார் 500 ஆண்டுகளுக்கு பின்பு கண்டுபிடித்ததன் பின்னரே அறிய முடிந்தது.
“அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக்கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடமிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது;”
ஈ எவ்வாறு திட உணவுப் பொருள் திரவமாக மாற்றி எடுத்துக்கொள்கிறது என்பதை இன்றைய அறிவியல் நமக்கு தெளிவாக விளக்குகிறது. ஈ ஒரு உணவுப்பொருளில் அமர்ந்து ஒரு வித (நொதியை) எச்சிலை உமிழ்ந்து திடப்பொருளை திரவமாக்கி உறுஞ்சி, நேரடியாக வயிற்றுக்கு அனுப்பி விட்டால் நாம் அப்பொருளை மீண்டும் கைப்பற்ற முடியாது. இதைத்தான் அல்லாஹ் ஆயிரத்து நானூறு  வருடங்களுக்கு முன்பு “ஒரு பொருளை எடுத்துக்கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடமிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது;” என்று கூறுகிறான்.
House fly eats sugary liquids and different kinds of organic waste. All food needs to be turned into liquid before ingestion because fly does not have teeth and ability to chew food. House fly spits digestive juices on the food to decompose it before swallowing.
நோயும், மருந்தும் ஈயில் இருக்கு!ஈயைப்பற்றிய அடுத்த அறிவியல் உண்மையையை நபி (ஸல்) அவர்கள் அறிவித்த ஒரு ஹதீஸின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
“ உங்களில் ஒருவரது பாத்திரத்தில் ஈ விழுந்து விட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே) முக்கி அமிழ்த்தட்டும் பிறகு அதை வெளியில் எடுத்துப் போட்டு விடவும்; ஏனெனில் ஈயின் இரண்டு இறக்கைகளில் ஒன்றில் நோயும், மற்றொன்றில் நிவாரணமும் உள்ளது.”  -அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி). புஹாரி.3320.
பொதுவாக ஈயானது அசிங்கமான, சுகாதாரக்கேடான இடங்களிலும் கழிவுப் பொருள்கள் தேங்கும் இடங்களிலும் அதிகம் இருக்கும். கிருமி தாக்குதலுக்குறிய இடங்களில் வசித்தாலும் அவைகளினால் ஈக்கள் இறப்பதில்லை. மேலும் ஈயினால் சுமார் 100 வகையான நோய்கள்  (Pathogens) பரவுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.ஆனாலும் ஈக்களின் உடலிலேயே அல்லாஹ் அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை வைத்திருப்பதால் அவைகள் பாக்டீரியா, மற்றும் வைரஸ் கிருமிகளால் தாக்கப்படுவதில்லை.
ஆக, ஈயானது நோயை கொண்டு செல்லும் அதே நேரத்தில் அந்நோய்க்கான பரிகார நிவாரணத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதைத்தான் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் வஹியின் மூலம் அன்றே குறிப்பிட்டுள்ளார்கள். இவ்வுண்மையை இன்றைய நவீன அறிவியல் ஆய்வுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. இந்த வார அறிவியல் (22,oct.2014) இதழ்களில் ஒரு ஆய்வுச் செய்தியை வெளியிட்டனர். அதாவது ஈயின் மரபணு முழுவதையும் ஆராய்ந்து பார்த்ததில் மனிதர்களை நோய் தாக்குவதிலிருந்து காப்பாற்றும் நோய் எதிர்ப்பு வழிமுறை ஈயின் மரபணுவில் இருப்பதாக அறிவித்தனர்.
“House fly genome offers clue to human sickness”-By Michelle Roberts Health editor, BBC News online-16 oct.2014.
“House fly genome reveals expanded immune system”- By Krishna Ramanujan
CORNEL CHRONOCLE-Cornel University. October 22, 2014
இதுவரை அறியப்பட்டுள்ள மனித நோய்களின் மரபணுகளில் நான்கில் மூன்று பங்கு மரபணுக்கள் இந்த ஈயின் மரபணுக்களுடன் ஒத்துள்ளன. இந்த ஈக்கள் ஒவ்வொரு நாள் இரவிலும் உறங்கச் செல்கின்றன; மயக்க மருந்துக்கு மனிதர்களைப் போலவே எதிர்வினையாற்றுகின்றன. அனைத்துக்கும் மேலாக மிக விரைவாக இனப்பெருக்கம் செய்கிறது. ஒரு பதினைந்து நாட்களுக்குள் முற்றிலும் புதியதொரு தலைமுறையை உருவாக்குகிறது. எனவே,
அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகம், ஆறு பெண் ஈக்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு அவைகளின் 15345 ஜீன்களை பிரித்து வகைப்படுத்தினார். இவற்றுள் நோயை பரப்பும் ஜீன்கள் (animal pathogens) மற்றும் நோய் எதிர்ப்பு ஜீன்களை (Immune system & Detoxification genes) ஆய்வு செய்தனர். வீட்டு ஈயின் குடும்பத்தைச் சார்ந்த பழ ஈ (Fruit Fly) ன் நோய் எதிர்ப்பு ஜீன்களைக்காட்டிலும் வீட்டு ஈயின் நோய் எதிர்ப்பு ஜீன்கள் மிக அதிகளவில் இருப்பது ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தியது.
Detoxification என்று சொள்ளப்படும் (cytochrome P450 genes) ஜீன்கள் பழ ஈயில் 85 மட்டுமே உள்ளது. நமது வீட்டு ஈயில் இந்த ஜீன்கள் 146 உள்ளது. அது மட்டுமல்லாமல் அளவில் ஐந்து மடங்கு மிகப்பெரியதாகவும் இருந்தது. ஈயின் நோய் எதிர்ப்பு ஜீன் மற்றும் விஷமுறிவு ஜீன்களை தனியாக பிரித்தெடுப்பதன் மூலம் மனிதர்களுக்கு வரக்கூடிய நோய்களை தடுப்பதற்கும் மற்றும் சுகாதாரக் கேடான இடங்களில் உருவாகும் கிருமிகளை கட்டுப்படுத்தவும் இவை பெரிதும் பயன்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
The availability of the house fly genome should accelerate the pace of research on this important vector of human and animal diseases. The house fly genome provides a rich resource for enabling work on innovative methods of insect control, for understanding the mechanisms of insecticide resistance, genetic adaptation to high pathogen loads, host parasitoid interactions, and for exploring the basic biology of this important pest. The genome of this species will also serve as a close out-group to G. morsitans in comparative genomic studies.
அல்லாஹ்வின் தூதர் அன்று சொன்னது இன்று அறிவியல் அறிஞர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. 1400 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறு ஈ உண்ணும் முறையை அதாவது உணவுப்பொருளை நீர்ம கூழாக்கி நேரடியாக வயிற்றுக்கு அனுப்பும் செய்தியையும், அதன் உடலில் நோய் எதிர்ப்பு மற்றும் விஷமுறிவு நிவாரணியும் உள்ளது என்பதை படைத்த இறைவனைத் தவிர வேறு எவரும் அறிவிக்க முடியாது.
“நிச்சயமாக இரவும்,பகலும் மாறி வருவதிலும், வானங்களிலும்,பூமியிலும் அல்லாஹ் படைத்துள்ள அனைத்திலும் பயபக்தியுள்ள மக்களுக்கு (நிரம்ப) அத்தாட்சிகள் இருக்கின்றன.”   -அல் குர்ஆன்.10:6.

செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்


அல்லாஹ் இப்பூவுலகில் மனிதனையும், இன்னும் ஏராளமான ஜீவராசிகளையும் படைத்து பரவ விட்டுள்ளான். இவ்வுயிரினங்கள் தங்கள் முழு ஆற்றலை பயன்படுத்தி பயனடைவதற்காக ஐம்புலன்களையும் கொடுத்துள்ளான். தன் படைப்பினங்களில் சிறந்ததாக மனிதனை படைத்து அவனுக்கு ஆறாவது புலன் என்னும் பகுத்தறிவு பண்பையும் கொடுத்துள்ளான்.
பார்த்தல்,கேட்டல்,சுவைத்தல்,முகர்தல்,தொடுதல் என்ற ஐந்து புலன்களிலும் எது மனிதனுக்கு மிக அவசியமானது என்ற கேள்வியை எவரிடம் கேட்டாலும், குறிப்பாக குருடராக இருப்பதா? அல்லது செவிடராக இருப்பதா? என்று இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கச்சொன்னால், அனைவரும் பார்வையுடையவராக இருக்கவே விரும்புவர். குருட்டுத்தன்மையை எவரும் விரும்பார். செவிடனானலும் பரவாயில்லை என்றே கூறுவார்கள்.
அமெரிக்க பிரௌன் பல்கலைகழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் SETH HOROWITZ அவர்கள் எழுதிய “THE UNIVERSAL SENSE: HOW HEARING SHAPE THE MIND” என்ற ஆய்வு நூல் கடந்த மாதம் வெளியாகி அறிஞர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதில் என்ன கூறுகிறார் என்றால் மனிதனின் பார்வை புலனை விட செவிப்புலனே மிக மிக முக்கியமானது. அதன் செயல்பாடுகள் பார்வைத் திறனை விட பல மடங்கு சிறப்பிற்குரியது என்று அறிவியல் ரீதியாக ஏராளமான சான்றுகளை காட்டி நிரூபிக்கிறார். பார்வையை விட செவி ஒரு மனிதனுக்கு மிக மிக முக்கியம் என்று ஆய்வு செய்து கூறுகிறார். எந்தளவு என்றால், தான் செவிடனாக இருப்பதை விட குருடனாக இருப்பதையே விரும்புவதாக கூறுகிறார்.
இந்த அறிவியல் செய்தி உண்மைதானா என்று, அன்று இறங்கிய அல்குர்ஆன், ஹதீஸ் ஒளியில் ஆய்வு செய்யும் பொழுது, உண்மை நம்மை ஆச்சரியமூட்டுகிறது. ஆம்! அல்லாஹ் பார்வையை காட்டிலும் செவிக்கு முதன்மை ஸ்தானம் கொடுத்துள்ளான் என்று அறியலாம்.
அல்குர்ஆனில் குறைந்தது 20 இடங்களுக்கு மேல் செவியையும் பார்வையையும் குறித்து கூறுகிறான். நமது அறிவின்படி பார்வையைத்தான் அல்லாஹ் முதலில் சொல்லுவான் என்று நினைப்போம். படைத்த ரப்புல் ஆலமீன் முதலில் செவிக்கு முதல் இடம் கொடுக்கின்றான்.
இன்னும் அல்லாஹ் விரும்பினால் இவர்களுடைய   கேள்விப்புலனையும், பார்வைகளையும் போக்கிவிடுவான். – அல்குர்ஆன்.2:20
அல்லாஹ் உங்கள் கேள்விப்புலனையும்,   பார்வைகளையும் எடுத்துவிட்டு உங்கள் உள்ளங்களில் முத்திரை வைத்து விட்டால்….. -அல்குர்ஆன்.   6:46.
உங்கள் செவிக்கும், பார்வைக்கும் உரிமையாளன் யார்? – –   அல்குர்ஆன்.10:31
உங்களுக்கு செவிகளையும், கண்களையும், அறிவையும்   கொடுத்தவன் அவன்தான். –16:78
நிச்சயமாக காது, கண், உள்ளம் ஆகிய இவை   ஒவ்வொன்றுமே மறுமையில் கேள்வி கேட்கப்படும். -அல்குர்ஆன் .17:36.
அவன் தான் உங்களுக்கு செவி, பார்வை, உள்ளம்   ஆகியவைகளை கொடுத்தான். -23:78
தன்னுடைய ரூஹை அதில் புகுத்தி, உங்களுக்கு காதுகள்,   கண்கள், உள்ளம் ஆகியவற்றையும் அவனே அமைக்கிறான். –அல்குர்ஆன்.32:9
அச்சமயம் (பாவம் செய்த) அவர்களுக்கு விரோதமாக அவர்களுடைய   செவிகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய தோல்களும், அவைகள்   செய்தவைகள் பற்றி சாட்சி கூறும். -அல்குர்ஆன்.41:20,22
(இந்த குர்ஆன்)   எவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுடைய காதுகளுக்கு   செவிடாகவும், அவர்களுடைய பார்வையை போக்க கூடியதாகவும் இருக்கிறது.   –அல்குர்ஆன்.41:44
(அவனது பாவத்தின் காரணமாக) அல்லாஹ் அவனை தவறான வழியில் விட்டு,   அவனுடைய செவியின்மீதும், உள்ளத்தின் மீதும் முத்திரையிட்டு   விட்டான். அவனது பார்வையின் மீதும் திரையை அமைத்து விட்டான். -அல்குர்ஆன். 45:23
நீங்கள் செவிடனை கேட்கும்படி செய்துவிடுவீர்களா?   அல்லது குருடனை நேரான வழியில் செலுத்தி விடுவீர்களா? -அல்குர்ஆன். 43:40.
நாம் அவர்களுக்கு செவியையும் கண்களையும்   கொடுத்தோம், சிந்திக்கக் கூடிய உள்ளத்தையும் கொடுத்தோம். -அல்குர்ஆன்.46:26.
பூமியில் விஷமம் செய்து இரத்த பந்தத்தை துண்டித்துவிடப்   பார்க்கிறீர்களா? இத்தகையவர்களை அல்லாஹ் சபித்து அவர்களை செவிடர்களாக்கி,   அவர்களுடைய பார்வையை போக்கி குருடர்களாக்கி விட்டான். -அல்குர்ஆன். 47:23
( நபியே) நீங்கள் கூறுங்கள் அவன்தான் உங்களைப் படைத்து உங்களுக்கு   செவியையும், கண்களையும் கொடுத்தவன். –அல் குர்ஆன்.67:23
ஓர் இந்திரியத் துளியைக் கொண்டு நிச்சயமாக நாம் தான் மனிதனைப்   படைத்தோம். அவனை சோதிப்பதற்காகவே செவியுடைவர்களாகவும்,   பார்வையுடையவர்களாகவும் ….-அல் குர்ஆன்.76:2
     ஒன்றையுமே நீங்கள் அறியாதவர்களாக இருந்த நிலையில், உங்கள்     தாய்மார்களின் வயிற்றிலிருந்து அல்லாஹ்தான் உங்களை வெளிப்படுத்தினான். அன்றி     உங்களுக்கு              செவியையும், கண்களையும், அறிவையும் கொடுத்தவன் அவனே தான். -அல்     குர்ஆன் .16:78
இதுபோல் ஏராளமான வசனங்களில் அல்லாஹ் காதுக்கு முதல் இடம் கொடுத்துவிட்டு இரண்டாவதாகத்தான் கண்களைப்பற்றிக் கூறுகிறான். ஐம்புலன்களையும் படைத்தளித்த அல்லாஹ்விற்கே அதன் சிறப்பும் முக்கியத்துவமும் முழுமையாகத்தெரியும்.
நமது பார்வையில் கண்ணின் தேவை முதலிடத்தில் இருந்தாலும் அனைத்தும் அறிந்த நுண்ணறிவாளன் அல்லாஹ் காதுக்கே முன்னுரிமை கொடுக்கின்றான்.இதைவிடப்பெரிய ஆச்சரியம் என்ன தெரியுமா? படைத்த மனிதனின் புலன்களில் செவிக்கு முக்கியத்துவம் கொடுத்த அல்லாஹ், தன்னைப்பற்றிக் கூறும்போதும் செவியையே முன் நிறுத்துவது சிந்திக்கத்தக்கது. செவியின் உயர் அந்தஸ்தை அறிந்து கொள்ள இதுவே போதுமானது.
குர்ஆனில் 48 வசனங்களில் 49 இடங்களில் “அல்லாஹ் அனைத்தையும் செவியுறுவோனும், அறிபவனுமாயிருக்கிறான்.” என்று கூறுகிறான். அதில் 8 இடங்களில் “அல்லாஹ் அனைத்தையும் செவியுறுவோனும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்.” என்று கூறுகின்றான். எல்லா வசனங்களிலும் அல்லாஹ் தன்னை செவியுறுவோன் என்று செவிக்கு முதல் இடம் கொடுத்துள்ளான். அதன் உண்மைக்காரணம் நம் அற்ப அறிவுக்கு எட்டாத ஒன்று. அல்லாஹ் கூறுவதை அப்படியே சொல்வதுதான் நமது கடமை.
அதேசமயம், இவ்வுலகில் நற்செய்தியை செவியுராமல் குர் ஆன் வசனங்களை காதில் வாங்காமல் செவிடர்கள் போல் வாழ்ந்து நரகம் செல்லும் நிராகரிப்பவர்களை குறிப்பிடும்போது கண்ணுக்கே முதலிடம் கொடுத்து, செவியை இரண்டாவதாக குறிப்பிடுகிறான். காரணம் அவர்கள் குர்ஆன் வசனத்தை காதில் வாங்க மறுத்து கண்ணில் காணும் பொய் தெய்வங்களை பார்த்து ஏமாந்ததால், அவர்களைப் பார்த்து,
“அவர்களுக்கு கண்களுமுண்டு, எனினும் அவற்றைக்கொண்டு (அல்லாஹ்வின் அத்தாட்சிகளை)பார்க்கமாட்டார்கள். அவர்களுக்கு செவிகளுமுண்டு, எனினும் இவற்றைக்கொண்டு நல்லுபதேசங்களுக்கு செவி சாய்க்க மாட்டார்கள். இவர்கள் மிருகங்களைப்போல அல்லது அவற்றை விட வழி கேட்டவர்கள்.” –அல் குர் ஆன்.7:179,25:44.
இதுபோல் உயிர் இல்லா போலித்தெய்வங்களை குறிப்பிடும்பொழுதும் கண்களை முதலிலும்,செவியை இரண்டாவதாகவும் குறிப்பிடுகிறான்.
“இனைவைப்பவர்களே! நீங்கள் வணங்கும் (சிலைகளுக்கு) கண்கள் இருக்கின்றனவா அவைகளைக்கொண்டு பார்க்கின்றனவா? அவைகளுக்கு காதுகள் இருக்கின்றனவா? அவைகளைக்கொண்டு கேட்கின்றனவா?” –அல்குர்ஆன். 7:195.
இப்ராஹீம்(அலை)அவர்கள், “ என் தந்தையே! யாதொன்றையும் பார்க்கவும்,கேட்கவும் யாதொரு தீங்கை தடைசெய்யவும் சக்தியற்ற தெய்வங்களை ஏன் வணங்குகிறீர்கள்? “—அல்குர்ஆன்.19:42.
அடுத்து இப்ராஹீம்(அலை) அவர்கள் கேட்ட முதல் கேள்வி,
“ அவைகளை நீங்கள் அழைத்தால் உங்களுக்கு செவி கொடுக்கின்றனவா? “—அல்குர்ஆன்.26:72.
பொதுவாக கண் பார்த்தல் என்பது காட்சிகளை பதிவு செய்து மூளைக்கு அனுப்பிவைப்பதோடு முடிந்துவிடும் ஒருவழி தொடர்புதான். ஆனால் செவியானது பேசுபவரின் ஒலியை வாங்கி மூளைக்கு அனுப்பி, அக்கேள்விக்குரிய பதிலை நாவின் மூலம் சொல்ல வைக்கும் இருவழி தொடர்பாக உள்ளது.மக்களிடையே பல மொழிகளை படைத்து (அல் குர்ஆன்.30:22) செவியால் கேட்டு உள்ளத்தால் சிந்தித்து நாவால் பேசும் பெரும் பாக்கியத்தை மனிதர்களுக்கு மட்டுமே அல்லாஹ் கொடுத்துள்ளான்.
செவிக்கு அல்லாஹ் கொடுத்த மற்றொரு சிறப்பு.!
இவ்வுலகில் உள்ள மனு,ஜின், எவருமே அல்லாஹ்வை நேரில் பார்க்க முடியாது. அந்த ஆற்றல் நமது கண்களுக்கு கிடையாது. “பார்வைகள் அவனை அடைய முடியாது..” -அல் குர்ஆன். 6:103. என்றே அல்லாஹ் கூறுகிறான். நபிமார்களுக்குக்கூட அல்லாஹ்வை கண்ணால் காணும் பேறு கிட்டவில்லை. மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வை பார்க்க விரும்பியபோது “ அம் மலையைப் பார் அது அவ்விடத்தில் இருந்தால் என்னை காணலாம் என்றான். ஆனால் மலை சுக்குநூறாக நொறுங்கி விட்டது. அல்குர்ஆன். 7:143
அதேசமயம் அல்லாஹ்வின் பேச்சை கேட்கும் பாக்கியத்தை மூஸா(அலை) அவர்களின் செவிக்கு கொடுத்தான். “கலீமுல்லாஹ்” என்று அவரை சிறப்பித்து கூறுகிறான். எல்லா நபிமார்களுக்கும் அல்லாஹ்வின் வஹி இறங்கியதே செவி வழியாகத்தான், அதை உள்ளத்தில் ஏற்றி ஈமானை அதிகப்படித்தி உயர்ந்தார்கள். கண்ணால் கண்டால்தான் விசுவாசிப்பேன் என்று கூறியவர்கள்,அற்புதங்களை கண்டபின்னும் நம்பாமல் காபிர்களாக நரகம் போனார்கள்.
“ நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக காணும் வரையில் உங்களை நம்பமாட்டோம் “ -அல்குர்ஆன்.2:55
“அல்லாஹ்வையும் மலக்குகளையும் நம் முன் கொண்டுவந்தாலன்றி நம்பிக்கை….”…-அல்குர்ஆன்.17:92
இன்று உலகில் பெருவாரியான இணைவைப்பவர்கள்,இந்து,கிறிஸ்துவ புத்த, ஜைன மதங்களில் உள்ள சிலைகளையும் சிலுவைகளையும் கண்ணால் கண்டு வணங்கி வழிபட்டு வழிகெட்டார்கள். இன்றும் புதியதாய் மதம் மாறிய கிறிஸ்துவர்களை காரணம் கேட்டால், அவர்கள் சொல்லும் பதில் இதுதான். “ இயேசு எனக்கு தரிசனம் தந்தார். “ சாட்சி அளித்தார் “ ஷைத்தானின் காட்சிக்கு சாட்சியாளர்களாக மாறியதற்கு கண்ணால் கண்டதே காரணம். ஆனால் அல்லாஹ் கூறுகிறான்,
“(நபியே!) நீங்கள் நம்முடைய அடியார்களுக்கு நற்செய்தி சொல்லுங்கள், அவர்கள் எத்தகையவர்கள் என்றால் பேச்சை செவியுற்று அதில் மிக அழகியதை பின்பற்றி நடக்கின்றவர்கள். இத்தகையவர்களையே அல்லாஹ் நேரான பாதையில் செலுத்துகின்றான். இவர்கள்தாம் உண்மையில் அறிவுடையவர்கள் ஆவார்கள்.” –அல்குர்ஆன். 39:18.
இந்த நல்லடியார்களைப்பற்றி அல்லாஹ் ஹதீஸ் குத்ஸியில் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள்,
“நபிலான வணக்கங்கள் செய்வதன் மூலம் என்னிடம் நெருங்குவதில் என் அடியான் தொடர்ந்திருப்பான். இதனால் அவனை நான் பிரியம் கொள்வேன். அவனை நான் பிரியம் கொண்டு விட்டால், அவன் கேட்கும் அவனது செவியாகவும்,அவன் பார்க்கும் பார்வையாகவும்,அவன் பிடிக்கும் கையாகவும், அவன் நடக்கும் காலாகவும் நான் ஆவேன்.” -அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி). – புகாரி.
இந்த ஹதீஸ் குத்ஸியிலும் அல்லாஹ் செவிப்புலனிற்க்கே முன்னுரிமை கொடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.நபி(ஸல்) அவர்களின் துவாவிலும் செவிச்சிறப்பை காணலாம்.
“யா அல்லாஹ்! என்னை கடன் தொல்லை மற்றும் வறுமையிலிருந்தும் நீக்குவாயாக! எனது கேட்கும் திறனையும்,பார்க்கும் திறனையும் உன் வழியில் அதிகப்படுத்துவாயாக!”
அறிவிப்பவர்: யஹ்யா இபின் ஸாத் (ரலி) – மு அத்தா.
செவிப்புலன் ஏன் சிறப்பு பெறுகிறது, என்று ஆய்வு செய்தால் ஓர் உண்மை விளங்கும். பொதுவாக கண்களால் பார்க்கும் சக்தியை அல்லாஹ் எல்லா ஜீவராசிகளுக்கும் கொடுத்துள்ளான். ஆனால் செவி ஒன்றுதான் ஐந்தறிவு என்ற மிருக நிலையில் உள்ளவனை செவியால் மொழிகளைக்கேட்டு உள்ளத்துள் அனுப்பி நன்மை தீமைகளை பிரித்தறிந்து சுவனம் செல்லும் நேர்வழிக்கு துணையாக உள்ளது.
அறிவியல் ரீதியாகவே செவிப்புலனிற்கு பார்வையை விட அதி முக்கியத்துவம் உள்ளதை அறியலாம்.
அல்லாஹ் மனிதனை (காய்ந்தால் “கன்” “கன்”) என்று சப்தம் கொடுக்கக்கூடிய பிசுபிசுப்பான களிமண்ணால் படைத்திருக்கிறான். செவித்திறனுக்கு ஆதாரமான ஒலி அலைகளை எழுப்பும் (சப்தமிடும்) களிமண் நிலையிலேயே மனிதனை அல்லாஹ் படைத்திருக்கிறான்.
கரு வளர்ச்சி நிலையில் கர்ப்பத்தில் 13 வது வாரத்தில் செவி உருவாக ஆரம்பித்து 20 வது வாரத்தில் முழு வளர்ச்சி பெற்றுவிடுகிறது. கர்ப்பத்திலேயே கேட்கும் திறனை அடைந்துவிடுகிறது. தாயின் இதயத்துடிப்பு, இரத்த ஓட்டத்தின் ஒலிகளை சிசு கேட்கிறது. வெளி உலகில் தாய் பேசும் குரலையும் இசையையும் கர்ப்பத்திலுள்ள சிசு கேட்பதாக நவீன ஆய்வுகள் கூறுகின்றன.
அதேசமயம் பார்வைப்புலனான கண்கள் சிசு வளர்ச்சியின் 26 வது வாரத்திலேயே உருவாக ஆரம்பிக்கிறது.
இன்றைய நவீன அறிவியல் உண்மைகளை ஆயிரத்து நாநூறு ஆண்டுகளுக்குமுன்பே அல்லாஹ் கூறிவிட்டான்.நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்,
“கர்ப்பத்தில் இந்திரியம் சேர்ந்த நாற்பதாம் நாளுக்கு பிறகு, அல்லாஹ் மலக்கை அனுப்பி உருவத்தை கொடுக்கின்றான். பிறகு செவிப்புலனையும், பார்க்கும் புலனையும், தோல்,சதை, எலும்பையும் வளரச்செயகிறான். “ அறிவிப்பவர் :அப்துல்லாஹ் இப்ன் மஸ்வூத்(ரலி) –நூல்: முஸ்லிம்.
ஆக கண்ணுக்கு முன் உருவாகும் உறுப்பு செவிப்புலனே!
ஒளியின் வேகம்,ஒலியின் வேகத்தைவிட பலமடங்கு அதிகம். ஆனாலும் நமது செவியானது பார்வை ஒளி அலைகளை விட அதிகளவில் சுமார் மூன்று லட்சம் ஒலி அலைகளை மூளைக்கு அனுப்புகிறது.மூளையானது பார்வை ஒளி அலைகளைவிட ஓசை ஒலி அலைகளை ஆயிரக்கணக்கான மடங்கு அதி வேகத்தில் இனம் பிரித்து அடையாளம் காட்டுகிறது.
அல்லாஹ்வின் தூதர் அன்று கூறிய உண்மைகளை இன்றைய அறிவியல் உலகம் மெய்ப்பித்து வருகிறது. ஆக செவிபுலனே பார்வையைவிட எதிலும் முன் நிற்கிறது. மேலும் குழந்தை மண்ணில் பிறந்தவுடன் செயல்படும் முதல் உறுப்பு செவிதான். ஆம்! வெளி உலக சூழலை கேட்டு அதன் தாக்கத்தினால் குழந்தை கத்துகிறது. ஷைத்தான் கிள்ளி விடுவதாக நபி(ஸல்) கூறியிருக்கிறார்கள். குழந்தை கண்கள் திறந்து வெளி உலகைப்பார்ப்பது பின்புதான் கர்ப்பத்திலே செயல்பட்ட செவியானது குழந்தை பிறந்த பின்னர் இருபத்திநான்கு மணி நேரமும் தொடர்ந்து செயல் படுகிறது. தூங்கினாலும் காது விழிப்பாகவே இருக்கிறது. இரைச்சல் இருக்கும் இடத்தில் தூக்கம் வருவதில்லை. அலாரம் அடித்ததும் காது நம்மை விழிக்க வைக்கிறது. தூக்கத்திற்கும் செவிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
ஆனால் கண்கள் தொடர்ந்து செயல்படுவதில்லை. நாம் கண்ணை மூடி தூங்கிவிட்டால் அது செயல்படாது. சிலர் தூங்கும்போது கண்திறந்த நிலையில் இருந்தாலும் காட்சிகள் காணமாட்டா. மேலும் பார்ப்பதற்கு ஒளி வேண்டும் விழித்திருந்தாலும் இருட்டில் கண்ணால் காண முடியாது. குகைவாசிகளைப்பற்றி அல்லாஹ் கூறும்போது அவர்கள் முன்னூறு வருடங்களுக்குமேல் உறங்கியதாகவும்,.அப்படி உறங்குவதற்கு காது மடலை தட்டிக்கொடுத்ததாகவும் கூறுகின்றான். அதே சமயம் அவர்கள் கண் திறந்தநிலையில் உள்ளது. ஆனால் பார்வை செயல்படவில்லை.விழித்திருக்கும் செவியை மட்டும் தட்டிக்கொடுத்து அல்லாஹ் அமைதிப்படுத்துகின்றான். தூக்கத்தில் விழித்து அழும் குழந்தைகளை தாய்மார்கள் தட்டிக்கொடுத்து உறங்கவைப்பதை அனைவரும் அறிவோம்.
.”அக்குகையில் பலவருடங்கள் (நித்திரை) செய்யும்படி அவர்களுடைய காதுகளை தட்டிக்கொடுத்தோம்.”-அல்குர்ஆன்.18:11.
(அக்குகையிலுள்ள) அவர்கள் நித்திரை செய்துகொண்டிருந்தபோதிலும் அவர்கள் விழித்துக்கொண்டிருப்பதாகவே நீங்கள் எண்ணுவீர்கள்.”  -அல்குர்ஆன்.18:18.
பிறந்த குழந்தை கண் விழித்து உலகத்தைப்பார்ப்பது அதிசயமோ அற்புதமோ அல்ல.ஆனால் பிறந்த குழந்தை, பேசுகிறவர்கள் பேச்சை செவியில் கேட்டு அதற்க்கு பதில் சொல்வதுதான் அற்புதம்.
மரியம் (அலை) அவர்கள் குழந்தையைப் பெற்று சுமந்து வந்தபோது மக்கள் அவரை நிந்தித்தனர்.அவர் குழந்தையிடம் பேசும்படி ஜாடை செய்தார். அதற்கவர்கள்.
“மடியிருக்ககூடிய குழந்தையிடம் நாங்கள் எவ்வாறு பேசுவோம்.” என்று கூறினார்கள். (இதனை செவியுற்ற அக்குழந்தை அவர்களை நோக்கிக்) கூறியதாவது: “நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடிமை அவன் எனக்கு வேதத்தைக்கொடுத்து நபியாகவும் என்னை ஆக்குவான்…….” -அல்குர்ஆன்.19:30.
ஈசா(அலை) அவர்கள் குழந்தையாக இருக்கும்போதே அவர்கள் செவியையும் பேச்சையும் அல்லாஹ் அற்புதமாக்கிவிட்டான்.
மண்ணறையிலும் செயல்படும் செவிப்புலன்கள்
மனிதன் இறந்து அவன் உயிர் உடலைவிட்டு பிரிந்து மேலே செல்லும் காட்சியை கடைசியாக பார்க்கும் உறுப்பு கண்கள்தான். ஆகவேதான் கண்கள் நிலைகுத்தி நிற்கின்றன என்று இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினர். –அறிவிப்பவர்: உம்மு சலமா(ரலி). நூல்:முஸ்லிம்.
ஆனாலும்,ஜனாஸாவை தோளில் வைத்து தூக்கி செல்லும்போது, “அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்ததாக இருக்குமானால், என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால், கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள், என்று கூறும். இவ்வாறு கூறப்படும் சப்தத்தை மனிதனைத்தவிர அனைத்தும் செவியுறும்.மனிதன் அதை செவியுற்றால் மயங்கி விழுந்துவிடுவான்.” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். அறிவிப்பவர்:அபு சயீத் அல்குத்ரீ (ரலி) -புகாரி.
நபி(ஸல்) அவர்கள் கூறினர், “ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை மய்யத் செவியுறும்….அவன் நிராகரிப்பவனாகவோ, நயவஞ்சகனாகவோ இருந்தால், இரும்பாலான சுத்தியால் இரண்டு காதுகளுக்குமிடையே ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்கள் தவிர மற்ற அனைத்தும் செவியேற்கும் அளவிற்கு அவன் கத்துவான்.” அறிவிப்பவர்: அனஸ் (ரலி) -புகாரி.
இறந்த உடல் தூக்கி செல்லும்போதும் அவன் பேசுகிறான். உடலை குழியில் வைத்து மண்ணைப்போட்டு மூடிய பிறகும் நடந்து செல்லும் காலடி ஓசையை அவன் செவி கேட்கிறது. அந்த கப்ரில் நடக்கும் வேதனை ஓலங்களை வெளியில் உள்ள மிருகங்கள் செவியுருகின்றன.
“பர்ஸாக்” என்னும் மறைவான நிலையிலும் செவிப்புலனானது மண்ணுக்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்பு சாதனமாக உள்ளது. இறந்த உடல் பேசுவதை கேட்கும் சக்தியை மனிதனை தவிர்த்த ஜீவராசிகளுக்கு அல்லாஹ் கொடுத்துள்ளான்.
மண்ணில் நடமாடும் மலக்குகளையும், ஜின் ஷைத்தான்களையும் பார்க்கக்கூடிய ஆற்றல மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் அல்லாஹ் கொடுத்துள்ளான்.
“சேவல் கூவுவதை கேட்டால் அது மலக்கை பார்த்துவிட்டது, கழுதை கத்துவதை கேட்டால் அது ஜின்னை பார்த்துவிட்டது”. என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா(ரலி௦). நூல்: புகாரி.
இருப்பினும் மண்ணுக்கு மேல் நடப்பவைகளையே ஜீவராசிகளின் கண்கள் பார்க்கின்றன. ஆனால் மண்ணுக்கு கீழே நடக்கும் சப்தங்களை அறியும் ஆற்றலை செவிப்புலனிற்கே அல்லாஹ் கொடுத்துள்ளான்.
20 HZ ஹெர்ட்ஸ் க்கு குறைந்த ஒலியலைகளை (Infrasonic) இன்ப்ரா சோனிக் என்றும் 20,000 ஹெர்ட்ஸ் க்கு மேல் உள்ள அதிர்வெண் ஒலியலைகளை (Ultrasonic) அல்ட்ரா சோனிக் என்றும் அழைக்கிறார்கள். மனிதர்களுக்கு கேட்கக்கூடிய ஒலி அளவு 20 Hz – 20,000 Hz .Frequency. இதற்க்கு மேலோ அல்லது கீழோ நம்மால் செவியேற்க்க முடியாது. சில மிருகங்கள் குறைந்த அதிர்வெண் ஒலிகளையும் செவியுற முடியும்.
உதாரணமாக யானைகள் மிகக்குறைந்த அதிர்வெண் ஒலியலைகளை 5 Hz—12,000 Hz கேட்கமுடியும். புறாவால் மிக மிக குறைந்த 1 Hz ஒலியலைகளையும் கேட்க முடியும். நாய் 50—45,000 Hz, பூனை 45—65,000 Hz அதிர்வெண் ஒலியலைகளை கேட்க முடியும்.
நிலநடுக்கம்,சுனாமி போன்ற பேரழிவு ஏற்படுவதற்கு முன்பு பூமிக்கு கீழ் உள்ள தட்டு நகரும் (Tectonic plate movement) மெல்லிய அதிர்வு (5 Hz—20Hz) அலைகளை மனிதர்களால் உணர்ந்து கொள்ள முடியாது. நவீன கருவிகளாலும் முன் அறிவிக்க முடியாது. பூகம்பம் நடந்த பின்னர் தான் அதன் தாக்கத்தை ரிக்டர் கருவி மூலம் அறியமுடியும்.
ஆனால் மற்ற ஜீவராசிகளுக்கு, பூமிக்கு கீழ் ஏற்படும் மாற்றங்களை முன்னரே உணரக்கூடிய செவியுணர்வை அல்லாஹ் கொடுத்துள்ளான். கடந்த சுனாமியின் போது ஏராளமான மக்கள் ஆபத்து வருவதை அறியாது இறந்தனர். இலங்கை, அந்தமான், இந்தோனேசிய கடலோர காடுகளில் வசிக்கும் மிருகங்கள், பறவைகள் ஒன்று கூட இறக்கவில்லை. காரணம் சுனாமி வருவதை அறிந்து அவை அனைத்தும் மேட்டுப்பாங்கான இடங்களுக்கு ஓடி விட்டன.
“நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மிருகங்களிளெல்லாம் மிக கெட்ட மிருகங்கள் நிராகரிப்பவர்கள்தாம்.”
“நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் கால் நடைகளில் மிகக்கேவலமானவை (எவைஎன்றால் சத்தியத்தை) அறிந்து கொள்ள முடியாத செவிடர்களும் ஊமையர்களும்தான். –அல் குர்ஆன்.8:55,8:22
மனிதனாக பிறந்தவன் நேர்வழியை புறக்கணித்து நிராகரிப்பவனாகி மிருக வாழ்க்கை வாழ்கிறான். அந்நிலையிலேயே மரணிக்கிறான். கப்ரில் மலக்குகள் வேதனை செய்யும்பொழுது அவன் எழுப்பும் மிருக ஓலங்களின் அதிர்வெண் ஒலியலைகள், (Frequency) சக மிருகங்கள் கேட்டு உணரும் வகையில் இருப்பதால் அவைகள் செவியுருகின்றன. மனிதர்களால் செவியேற்க இயலாத பூமித்தட்டு நகர்வுகளின் மெல்லிய பூகம்ப சப்தத்தை மிருகங்கள் கேட்பதுபோல் மண்ணறையில் நடக்கும் மனித மிருகங்களின் வேதனைக் குரல்களையும் மண்ணுக்குமேல் உள்ள விலங்குகள் செவியுகின்றன. நல்லடியார்களுக்கு வேதனை இல்லை,அவர்கள் ஆழ்ந்து உறங்குகிறார்கள். அல்லாஹ் அறிந்தவன்!
இரண்டு கண்கள் ஒரே செவி
அனைவருக்கும் இரண்டு கண்கள், இரண்டு காதுகள் உள்ளன. அல்லாஹ் குர் ஆனில் கண்ணைப்பற்றி குறிப்பிடும்போது பன்மையில் கண்கள் என்கிறான். ஆனால் காதைப்பற்றி கூறும்போது காதுகள் என்று பன்மையில் கூறாமல் காது,செவி என்று ஒருமையிலேயே அழைக்கிறான்.
“அல்லாஹ் உங்களுடைய செவிப்புலனையும், பார்வைகளையும் பறித்துவிட்டு ……” அல்குர்ஆன்.6:46
“அவர்களுக்கு செவிப்புலனையும், பார்வைகளையும், உள்ளத்தையும் கொடுத்தோம்.”அல்குர்ஆன்.46:26.
இரண்டு காதுகள் இருப்பதால் இரு வெவ்வேறு ஒலிகளை கேட்பதற்காக அல்ல. ஒலி எங்கிருந்து வருகிறது என்று மூளை கணித்து அதன்பக்கம் கவனம் செலுத்தவே இரு காதுகள்.
இரு காதுகளிலும் ஒலி அலைகள் நுழைந்தாலும், எந்தப்பக்கம் உள்ள காது ஒலிக்கு அருகில் உள்ளதோ, அது முதலில் ஒலி அலைகளை மூளைக்கு அனுப்பும். மறு பக்கம் உள்ள காது அடுத்ததாக அனுப்பும். இரு காதுகளில் இருந்து வந்த ஒலியின் முன் பின் நேரத்தை மூளை கணக்கிட்டு, ஒலி வந்த திசையை நோக்கி திரும்ப கட்டளையிடும். ஆக ஒலி வரும் இடத்தை மூளை அறிந்து கட்டளை இடைவே இரு காதுகள்.
ஆனால் நமது இரு கண்களும் ஒரே நேரத்தில் பல காட்சிகளை தொடர்ச்சியாக பார்த்துக்கொண்டிருக்க முடியும். உதாரணமாக, ஒரு பொதுக்கூட்டத்தில் ஒருவர் பேசுவதை இரண்டு காதுகளும் கூர்ந்து கேட்டுக்கொண்டிருக்கும். அதே நேரத்தில் அவரது அலைபாயும் கண்கள் அக்கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை நோட்டமிடும். அலைபாயும் கண்கள் (Saccades) வினாடிக்கு 30-70 தடவை பல காட்சிகளை படம் பிடித்துக்கொண்டிருக்கும். கண்களை பன்மையாகவும்,செவியை ஒருமையாகவும் குர் ஆன் குறிப்பிடுவதற்கு இதை விட வேறு பல காரணங்களும் இருக்கலாம். அல்லாஹ் அறிந்தவன்!
களிமண்-கர்ப்பம்-உலகம்-மண்ணறை –மஹ்ஷர்-சுவனம்-நரகம்
காய்ந்தால் சப்தமிடும் களிமண்ணில் உருவான மனிதன், பெண்ணின் கர்ப்ப அறையில் சிசுவிலே செவியேற்று, மண்ணுலகில் பிறந்தபின்பு இறக்கும்வரை செயல்புரிந்து, இறந்த பின்பும் மண்ணறையில் செவியேற்று, இறுதி நாள் மஹ்ஷர் வரை காத்திருந்து சூர் ஊதப்பட்டதும் கபுராளிகளை எழுப்பி விடுவதும்,இறுதியில் நிரந்தர தங்குமிடம்வரை சென்று செயல்படுவதும் செவிப்புலனே!
“சூர்” ஊதப்பட்டால் உடனே அவர்கள் சமாதிகளிளிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவாக வருவார்கள். அன்றி “ எங்களுடைய துக்கமே! எங்களை நித்திரையில் இருந்து எழுப்பியவர் யார்? என்று கேட்பார்கள்.” -அல்குர்ஆன்.36:51,52.
“நீங்கள் செவிமடுத்து கேளுங்கள் (சமாதிகளின்)சமீபத்திலிருந்து (கொண்டு) மரணித்தவர்களே! எழும்புங்கள் என்று அழைப்பவர் அழைக்கும் நாளில் பெரும் சப்தத்தை அவர்கள் மெய்யாகவே கேட்பார்கள். அதுதான் சமாதியிலிருந்து வெளிப்படும் நாள்.” -அல்குர்ஆன்.50:42
உயிப்பித்தல் நிகழ்ச்சியை அல்லாஹ் ஓர் உதாரணம் மூலம் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு காட்டுகிறான். “ நான்கு பறவைகளைப் பிடித்து பழக்கி, பின்னர் அவைகளை துண்டு துண்டாக்கி அவற்றில் ஒவ்வொரு பாகத்தை ஒவ்வொரு மலையின் மீதும் வைத்து விட்டு பின்பு அவைகளை நீங்கள் கூப்பிடுங்கள்.அவை உங்களிடம் பறந்து வந்து சேரும்.” -அல்குர்ஆன். 2:260.
நன்கு பழக்கிய பறவைகளை மாமிச துண்டாக்கி நான்கு மலையில் வைத்து அழைத்தபோது அவை செவி ஏற்று பறந்து வந்ததுபோல், மண்ணறை மனிதர்களும் சூர் ஒலி செவியேற்று எழும்புகின்றனர்.
மஹ்ஷரை நோக்கி நடக்கும்போது அணைத்து சப்தங்களும் அடங்கி விடுகின்றன. ஆனால் அவர்கள் காலடி ஓசை மட்டும் கேட்கின்றது..
“அந்நாளில் அழைப்பவனின் சப்தத்தையே பின்பற்றி செல்வார்கள். அதில் தவறு ஏற்படாது. ரஹ்மானுக்குப்பயந்து எல்லா சப்தங்களும் தணிந்து விடும். (மெதுவான அவர்களின்) காலடி சப்தத்தை தவிர (வேறு எதனையும்) நீங்கள் கேட்க மாட்டீர்கள்.” அல்குர்ஆன்.20:108
மஹ்ஷர் மைதானத்திற்கு அவர்கள், செவிப்புலன் சப்தத்தை பின்பற்றியே செல்வார்கள். “அதில் தவறு ஒன்றும் ஏற்படாது” என்றும் அல்லாஹ் கூறுகிறான். மறுமை நாளில் அநேகரை குருடனாக எழுப்புவதாக அல்லாஹ் கூறுகிறான். உலகில் பார்வை உள்ளவனாக இருந்தேனே என்று கேட்பார்கள், அதற்கு அல்லாஹ்,
“இவ்வாறே நம் வசனங்கள் உம்மிடம் வந்தன, (குருடனைப்போல் உன் காரியங்கள் இருந்தன) நீ அவைகளை மறந்து விட்டாய்.அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப்பட்டு விட்டாய்!” என்று கூறுவான். அல் குஆன். 20:106.
அல்லாஹ் இவர்களின் பார்வைப்புலனை பறித்தாலும் செவிப்புலனை எடுப்பதில்லை.காரணம், நரகத்தின் சப்தத்தை பாவிகளான நரகவாசிகள் கேட்பதற்கே!
“எவர்கள் விசாரணை காலத்தை பொய்யாக்குகிறார்களோ, அவர்களுக்கு கடுமையான பற்றி எரியும் நரகத்தைதான் நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம். அது இவர்களை கண்ட மாத்திரத்தில் சப்தமிட்டு ஆர்ப்பரிப்பதை இவர்கள் வெகு தூரத்திலிருந்தே செவிமடுத்துக்கொள்வார்கள்.” -அல் குர்ஆன்.25:12.
சுவனவாசிகளான நல்லடியார்களும் சுபசோபன நற்செய்தியை சுவனத்தில் கேட்பார்கள்.
(அந்நாளில்) “இறை அச்சமுடையவர்களுக்கு சுவனபதி மிக்க சமீபமாக கொண்டு வரப்படும்.” -50:31
“ பூமியில் நீங்கள் செய்துகொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே இந்த சுவனபதிக்கு நீங்கள் வாரிசாக ஆக்கப்பட்டுள்ளீர்கள்.” என்ற சப்தத்தை அவர்கள் கேட்பார்கள்.” –அல் குர்ஆன். 7:43.
செல்போன் ஷைத்தான்
அன்புச்சகோதர,சகோதரிகளே! அல்லாஹ் அளித்த மிகச்சிறப்பு வாய்ந்த செவிச்செல்வத்தை நாம் எப்படி பயன் படுத்துகிறோம்? சற்று சிந்திப்போமா! பகல் பொழுது முழுவதும் வீணாய்ப்போன ஒலி,ஒளி சினிமாப்பாடல்களே நம் காதை அடைக்கிறது. எப் எம் ரேடியோக்கள் காதை தின்று தீர்க்கின்றன. மிச்ச சொச்ச நேரத்தில் பாழாய்ப்போன செல்போன் வெட்டி அரட்டையில் காதை மந்தமாக்கி வருகின்றோம்.
“ஒரு ஆணும் பெண்ணும் தனித்திருக்கும்போது மூன்றாவதாக அங்கு ஷைத்தான் இருக்கின்றான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆம்! இன்று ஆணும், பெண்ணும், இளைஞனும், இளைஞியும் மாணவனும் மாணவியும் ஓரிடத்தில் ஒன்றாக இல்லாமல் தனித்தனியாகவே இருக்கின்றனர். மூன்றாவதான செல்போன் ஷைத்தான் இவர்களை ஒன்றிணைத்து பின்னி பிணைத்து விடுகிறான்.
விடிய விடிய பேசுகிறார்கள், பேசுகிறார்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆம்! பேசக்கூடாததை பேசியே நாசமாய் போகிறார்கள். இவர்கள் வாயும் காதும் விபச்சாரம் செய்யவிட்டு ஷைத்தான் வேடிக்கை பார்த்து வாடிக்கை பிடிக்கின்றான். இவர்கள் ஒரு கட்டத்தில் தனிமையில் சந்திக்க வாய்ப்பு கிட்டும்போது இன உறுப்பு விபச்சாரத்தை உண்மையாக்கி விடும். செல் ஷைத்தான் நரகிற்கு செல்ல வைத்து விடுவான்.
இன்னும் சில சகோதரர்களுக்கு, இரவில் படுக்கும்போது ஹெட்போன் காதில் வைத்து பாட்டு கேட்டால்தான் உறக்கம் வரும். பெரும்பாலோர், நடு இரவுவரை தொல்லை காட்சியை பார்த்துவிட்டுத்தான் படுப்பார்கள். பஜ்ரு தொழுகைக்கு எழ விடாமல் ஷைத்தான் காதை தட்டிக்கொடுத்து தூங்கச்செய்வான்.
நபி(ஸல்)அவர்களிடம், ஒருவர் விடியும் வரை தூங்கிகிக்கொண்டே இருக்கிறார். தொழுகைக்கு எழுவதில்லை என்று கூறப்பட்டது. அதற்க்கு நபி(ஸல்) அவர்கள், “ ஷைத்தான் அவர் காதில் சிறுநீர் கழித்து விட்டான்.” என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்(ரலி) நூல்: புகாரி.
அருட்பெரும் செல்வமான செவிச்செல்வத்தை ஷைத்தான் சிறுநீர் கழிக்கும் கழிப்பறையாக்கிய பிறகு அதில் ஏதேனும் நற்செய்திகள் நுழைய முடியுமா? இறுதியில் அந்த காது நரகின் ஆர்ப்பரிக்கும் இரைச்லையே கேட்கும். அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!
நாம் கருவறையில் சிசுவாக இருந்தபோது செவியுற்ற நமது காதுகள், ஒலிமயமான இவ்வுலகில் உரையாட துணை நின்றது. மண்ணறையிலிருந்து மஹ்ஷர் வரை உதவப்போகிறது. இன்ஷா அல்லாஹ்! சுவனத்தின் சுபசோபன நற்செய்தியை கேட்பதற்கு நாம் நல் அமல் செய்வோம்! நற்செய்தியை கேட்போம்!
“அவனுடைய வசனங்களுக்கு செவி சாய்க்கும் மக்களுக்கு நிச்சயமாய் இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. “ —அல்குர்ஆன். 11:67

நாமே பூமியை விரித்தோம்!


Post image for அல் குர் ஆனின் வழியில் அறிவியல்……நாமே பூமியை விரித்தோம்!
“இன்னும் பூமியை நாம் அதனை விரித்தோம்”-அல் குர்ஆன்.51:48
அல்லாஹ் பல இடங்களில் அல்குர்ஆனில் இப்பூமியை விரித்ததாக குறிப்பிடுகிறான். ஆதியில் இப்பூமி படைக்கப்பட்டபோது இன்றிருப்பதுபோல் தனித் தனி கண்டங்களாக இல்லை.பெரும் ஒற்றை பாறைக் கோளமாகவே இருந்தது. இதனை “பாங்கியா’(Super Continent Pangaea) என்று அழைக்கின்றனர். பூமியின் நிலத்தட்டை அல்லாஹ் ஏன் விரிக்க  வேண்டும்? உயிர் ஜீவன்கள் வாழ்வதற்கு இவை அவசியம் என்று இன்றைய அறிவியல் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் கூறுவதைப் பார்ப்போம்.
Pangaea (sometimes spelled Pangea), the most recent of a series of supercontinents on Earth, formed about 270 million years ago and broke apart about 200 million years ago. At this time most of the dry land on Earth was joined into one huge landmass that covered nearly a third of the planet’s surface. The giant ocean that surrounded the continent is known as Panthalassa.
Artwork showing the Earth at the time Pangaea broke upநாம் அறிந்தபடி அடித்தட்டு பெயர்ச்சி (Tectonic Plate Movement) உயிரின பிறப்புகளுக்கு மிகவும் முக்கியமானது. பாறை கோள்களில் (Rocky Planets)  மனிதக் குடியேற்றம் பற்றி சொல்ல வந்தால், எண்ணிக்கையில் பேரளவு பெயர்ச்சிகள் நேர்வது பெரும் தேவை என்பது எங்கள் கணக்குப்படி தெரிய வருகிறது. சூரிய மண்டலத்தில் நமது பூமியே பெரும்பாறைக் கோள் என்பதும், உயிரினம் வாழ தகுதி உள்ள கோள் என்பதும் எதிர்பாராது நிகழ்ந்தவை அல்ல. மீள் சுற்று இயக்கங்கள் பாறைக்கோள்களில் உயிரினம் வசிக்க பெரும் பங்கு ஏற்கின்றன. அடித்தட்டுகள் நகர்வதாலும், பாறைகளுக்குள் அடைபட்ட ஆக்சிஜன், கார்பன் டைஆக்சைடு போன்ற சிக்கலான இரசாயன வாயுக்கள் வெளியேறி, மீள் சுற்று நிகழ்ச்சியில் சூழ்வெளியில் தொடர்ந்து பயணிக்கின்றன. -Diana Valencia, Harvard University.
கடலடி தட்டுகள் நகர்ச்சியின்றி உயிரினங்கள் விருத்தி நேர்ந்திருக்காது
நமது நீர்க்கோள் நம் கண்முன்பே மாறி வருகிறது. அதனால் அநேக உயிரினப் பிறப்புகள் விளிம்பு முனையில் உள்ளன. நாம் வாழும் பூகோளமானது நிறை குன்றிச் சிறிதளவு சிறுத்திருந்தால் கண்டங்களை நகர்த்தி, மலைகளை எழுப்பும் அடித்தட்டுப் பெயர்ச்சிகள் ( Plate Tectonics ) நேர்ந்திரிக்காது. அடித்தட்டு நகர்ச்சி இல்லையேல் வாயுச் சூழ்வெளி அமைப்பின்றி உயிரினங்கள் பூமியில் தடம் வைத்து நடமாடி இருக்க முடியாது.
புதிய ஆராய்ச்சியின்படி பூர்விகத்தில் பூமிக்கு நேர்ந்த பூதப்பளு தாக்குதலால், அடித்தட்டு நகர்ச்சியும் தொடங்கி நமது நீர்க்கோள் உயிரின வசிப்புக்கு ஏற்ற நட்புக்கோளாய் மாறியது என்று தெளிவாய் அறியப்படுகிறது. சுமார் 3.26 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னார், சுமாரி 25 மைல்  (60 கி.மீ) அகலமுள்ள விண்கல்  பூமியில் எங்கோ மோதி அதன் பூதள விளைவுச் சான்றுகள் தென் ஆப்பிரிக்கப் பகுதியில் இருந்தது தெரிகிறது. அந்த மோதலைப் பற்றி ஆராய்ச்சியாளர் டோனால்டு லவ்  2014 ஏப்ரல் Journal of Geochemistry,Geophysics & Geosystem ல் ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளார்.
அந்த யுகத்தில் உயிர் நுண்ணிகள் (Microbiological beings) மட்டும் இருந்ததாக அறியப்படுகிறது. அவை அந்த மோதலில் பெரிதும் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. சுமார் 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் அடித்தட்டுப் பெயர்ச்சியே ஆரம்பமானது என்றும் டொனால்டு லவ் கூறுகிறார். தோன்றிய பூகோள உயிரினங்கள் ஏற்ப்பட்ட அடித்தட்டு பெயர்ச்சி விளைவுகளுக்குத் தம்மை தகுதியாக்கிக் கொண்டன என்றும் கூறுகிறார்.
ஓய்வில்லாமல் விரியும் இன்றைய பூகோளம்
பல மில்லியன் ஆண்டுகளாக படிப்படியாக மிக மெதுவாக பூமியின் வடிவம் மாறி வருகிறது. 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன் தோன்றிய ஆரம்ப காலத்து விட்டம் 4000  மைல் (6600 கி.மீ) 3.5 பில்லியன் ஆண்டுகளில் 4800 மைலாக ( 8000 கி.மீ) விரிந்தது. 2.8 பில்லியன் ஆண்டுகளில் 5280 மைலாக ( 8800 கி.மீ)  600 மில்லியன் ஆண்டுகளில் 7200 மைல் ( 12000 கி.மீ) விட்டமும் இருந்தது. இப்போது 7850 மைல் ( 12750 கி.மீ) விட்டம் கொண்டுள்ளது.
பூமியின் உள்ளமைப்பில் உள்ள உலோகக் கனல் திரவம் கொந்தளிப்பதால் மேலேலுச்சி ஓட்டங்கள் (Convection Current) நிகழ்கின்றன. அந்த ஓட்டமே பூகோளத்தின் உந்து சக்தியாக (Driving Force) மலை மேடுகளை உண்டாக்கியும், கண்ட நகர்ச்சியைத் (Continental Movement ) தூண்டியும் வருகிறது.
“நமது பிரபஞ்ச விண்வெளியில் பூமியைப்போன்று கடினமான நிறையுடைய செவ்வாய், சந்திரன் போன்ற எத்தனையோ கோள்கள் உள்ளன. ஆனால் அக்கோள்களின் நில உள் அமைப்பில் அடித்தட்டு நகர்ச்சி (Tectonic Plate Movement) ஏற்படுவதில்லை. நமது பூமியில் மட்டுமே இச்செயல் நடக்கிறது. பூமியில் உள்ள 70% கடல் நீரானது பூமித்தட்டு நகர்வுக்கு மசகு எண்ணெய் போல் செயல் புரிகிறது. இம்மாதிரி உட்கருவின் வெப்பமும் இடையடுக்கு, மேலடுக்கு அமைப்புகளும் பூமியில் இல்லாவிட்டால் பூதட்டு நகர்ச்சி எழவே எழாது. பூமியில் உயிரினமும் நீடித்திருக்காது”
ஜொனாதன் லூனின்.Astronomy Magazine: The Solar System-What Makes Earth Right for Life? By:Jonathan Lunine (Dec.2008)
பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கு தகுந்த சூழல் ஏற்ப்பட அடித்தட்டு நகர்ச்சி அவசியம் என்று இன்றைய அறிவியல் கூறுவதை படைத்த ரப்புல் ஆலமீன் 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டான்.
“இன்னும், பூமியை படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான்.” -அல் குர்ஆன்.55:10.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்,
“பூமியை நாம் விரித்து அதில் உறுதியான மலைகளை நிலைப்படித்தினோ -அல் குர்ஆன்.15:19.
நாம் வாழும் பூமியின் மேலடுக்கு பல பிளேட்டுகளாக ஒன்றோடோண்டு இணைக்கப்பட்டுள்ளது. பூமியின் மையத்தில் கடும் வெப்ப நிலையில் பாகு போன்ற திரவத்தில் நமது பூமியின் மேலடுக்கு மிதந்து விரிந்து கொண்டே செல்கிறது. வருடத்திற்கு சுமார் 4 செ.மீ. அளவில் விரிகிறது. பூமியின் மேலடுக்கில் உள்ள கண்டங்களும், கடல்களும் சேர்ந்தே நகர்கின்றன.
இப்படி பூமிக்கு அடியில் இருக்கும் பாறை அடுக்குகள் நகரும்போது ஒரு அடித்தட்டு பிளேட் அடுத்த தட்டு பிளேட்டோடு சொருகும் போது மேல்தட்டு அடுக்கு உயர்ந்து மலைகள் உருவாகின்றன. உலகத்தில் உயர்ந்த இமயமலையானது இவ்விதம் உருவானதே. நவீன டெக்டோனிக் கொள்கையின்படி இமயமலை இந்திய ஆஸ்திரேலிய தட்டு மற்றும் யூரேசியன் கண்டங்களிடையே நிகழ்ந்த மோதலால் உருவாகியது.
பூமியில் மலைகள் ஏன்? எதற்கு?
உயிர் ஜீவன்கள் வாழ்வதற்கு தேவையான பிரதானமான நீர் மலையிலிருந்தே உருவாகின்றன. மிக உயர்ந்த இடத்தில் பனிக்கட்டி மற்றும் பனியாறு உருவாகிறது. இமயமலையில் மட்டும் சுமார் 15000 பனியாறுகள் உற்பத்தியாகின்றன. இத்தகைய உயர மாறுபாடு மழை அளவு மண்ணின் நிலை மற்றும் மிக அதிக பனிபொழிவு காரணமாக நிறைய தாவரங்களும் விலங்குகளும் உயிர் வாழ உதவுகிறது.
உலகில் ஆசியாவின் 64% நிலப்பகுதியும்; ஐரோப்பாவின் 25% நிலப்பகுதியும்; தென்னமெரிக்காவின் 22% உம்; ஆசுத்திரேலியா, ஆப்பிரிக்காக்கண்டங்களில் முறையே 17%, 3% ஆகிய பகுதிகளும் மலைகளினால் மூடப்பட்டுள்ளன. மொத்தமாக உலகின் 24% நிலப்பகுதி மலைகளாக உள்ளன. உலகின் 10% மக்கள் மலைப் பகுதிகளில் வாழ்கின்றனர். உலகின் 90% ஆறுகள் மலைப் பகுதிகளிலேயே உருவாகின்றன என்பதுடன் உலக மக்களில் 50% மக்களின் நீர் தேவையை இம்மலைகளே நிறைவு செய்கின்றன. http://www.fao.org/docrep/w9300e/w9300e03.htm
மழை பொழிவதற்கு மலைகள் அவசியம். உதாரணமாக கேரளா மாநிலத்தில் அதிக மழை பொழியக் காரணம் மேற்கு தொடர்ச்சி மலைகள் அங்கு இருப்பதே. மேற்குத் தொடர்ச்சி மலை (Western Ghats) இந்திய துணைக்கண்டத்தின் மேற்புறத்தில்அரபிக்கடலுக்கு இணையாக அமைந்துள்ள தொடர்மலையாகும். மேற்குத் தொடர்ச்சி மலை அரபிக்கடலில் இருந்து வரும் குளிர்ந்த காற்றைத் தடுத்து அதன் மேற்பகுதியில் அமைந்துள்ள கேரளா மற்றும் மேற்கு கடற்ரையில் நல்ல மழையைத் தருகின்றது. கடல் வெப்பம் ஆவியாகி மிக உயரம் சென்று மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் பட்டு குளிர்ந்து அங்கு தொடர் மழையைப் பொழிவிக்கிறது.மலை இன்றி மழை இல்லை.
அல்லாஹ் மலைகளைப் படைத்து அதில் ஆறுகளை உருவாக்கி சகல ஜீவராசிகளுக்கும் நீரை ஆதாரமாக்கியுள்ளான்.
99% ஆன பனியாறுகள் துருவப் பகுதிகளிலுள்ள பனிவிரிப்புகளில் காணப்படுகின்றது. மற்றவை ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள மலை குன்றுகளிலும் உயர் தீவுகளிலும் உள்ளன. புவியில் காணப்படும் நன்னீர் மூலங்களில் மிகப் பெரியதும் இந்த பனியாறுகளே. உலகத்தில் இருக்கும் மக்கள் தொகையின் ஒன்றில் மூன்று மடங்கு மக்களுக்கான நன்னீர்த் தேவை இந்த பனியாறுகளாலேயே பூர்த்தி செய்யப்படுகின்றது. தாவரங்கள், விலங்குகள் மனிதரின் நனீர்த் தேவையை ஈடுசெய்ய முக்கியமாக இந்த பனியாறுகள் பயன்படுகின்றன.  உலகின் நீளமான ஆறுகளில் ஒன்றான அமேசான் நதி பெரு நாட்டின் ஆண்டீஸ் மலைத்தொடரில் பணி ஆறாக உருவாகிறது.நமது இமயமலை பனிச் சிகரங்களில் சிந்து,கங்கை,கோதாவரி,பிரமபுத்ரா,போன்ற நதிகள் உற்பத்தியாகி பல்லுயிர் ஜீவன்களுக்கு பயன் தருகிறது. அத்துடன் ஆறுகளின் பயன்களை அல்லாஹ் கூறுகிறான்.
உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்க்காக, அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுத்தினான்; இன்னும் நீங்கள் சரியான வழியை அறிவதற்காக அவன் ஆறுகளையும், பாதைகளையும் அமைத்தான். –அல் குர்ஆன்.16:15
 
இன்று ஆறுகள் நீர்வழிப் போக்குவரத்திற்கு சிறந்த பாதையாக உள்ளன. நதி செல்லும் பாதையிலேயே மனித நாகரிகங்கள் பிறந்தன, வளர்ந்தன. மேலும்  நாடுகளுக்கிடையில் மலைகளும்,நதிகளும் எல்லைகளாக விளங்குகின்றன. குறிப்பாக ஐரோப்பாவில் ஓடும் நதிகள் இரு நாடுகளுக்கு குறுக்கே ஓடி எல்லைகளாக விளங்குகின்றன. நதியில் பாலம் அமைப்பதன் மூலம் தரை வழி பாதைகளை உருவாக்கி போக்குவரத்திற்கு பெரிதும் பயன்தருகின்றன.
அல்லாஹ் கூறுகிறான்,
 “மேலும் நாம் பூமியை நீட்டி விரிவாக்கி, அதில் உறுதியான மலைகளை அமைத்துள்ளோம்; மேலும் அதில் அழகிய புற்பூண்டுகளை (ஆண்,பெண்) ஜோடியாக முளைப்பிக்கவும் செய்திருக்கின்றோம்.” -அல் குர்ஆன்.50;7
தாவர புற்பூண்டு இனங்களில் ஆண்-பெண் ஜோடி உள்ளதா என்று கேள்விக்கு 17 ம் நூற்றாண்டு வரை எவருக்கும் தெரியாது. 1790 ம் ஆண்டு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த  கிருஸ்டியன் கொன்ராடு ஸ்பிரின்ஜெல் என்னும் ஆராய்ச்சியாளரே தாவரங்கள் ஆண்,பெண் ஜோடி,ஜோடியாக உள்ளன என்பதை கண்டு பிடித்து உலகிற்கு அறிவித்தார்.
“Christian Konrad Sprengel (22 September 1750 – 7 April 1816) was a German theologist, teacher and, most importantly, a naturalist. He discovered sexuality in the plant kingdom.”
“அவனே இரவைப் பகலால் மூடுகிறான்” –அல் குர்ஆன்.!3:3
இவ்வசனத்தின் மூலம் முதலில் இருளாக இருந்த பிரபஞ்சத்தில் சூரியனை படைத்த பின்னரே இரவு பகல் உண்டாகியது என்ற உண்மையையும் கோள்கள் அனைத்தும் உருண்டையாக சுழன்று செல்வதாலே இரவு பகல் மாறி மாறி வருகிறது என்ற தெளிவும் கிடைக்கிறது. ஒரே ஒரு வசனத்தில் ஏராளமான அறிவியல் உண்மைகளை அடைக்கி வைத்து நம்மை அல்லாஹ் சிந்திக்கச் சொல்கின்றான்.
“ அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து, அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனி வர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டு ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான்- நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.” -அல் குர்ஆன்.13:3

இட வலம் சுற்றி வரும்... இயற்கை மார்க்கம்!

ஆதி மனிதர் ஆதம்(அலை) முதல் இறுதிவரை உள்ள மனிதர்கள் வரை அனைவருக்கும் நல் வழி காட்டி நேர்வழிப்படுத்த எழுந்த மார்க்கமே இஸ்லாம். உலகில் எத்தனையோ மதங்கள் இருந்தாலும், படைத்த இறைவனால் கொடுக்கப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட  இயற்கை மார்க்கமே இஸ்லாம் என்பதற்கு ஏராளமான சான்றுகளை நாம் பார்க்க முடியும். அல்லாஹ் கூறுகிறான்.
எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதனைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ் படைத்ததில் மாற்றமில்லை; அதுவே நிலையான மார்க்கமாகும்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் இதை அறிய மாட்டார்கள்.   அல் குர்ஆன். 30:30.
இஸ்லாம் இயற்கையோட இயைந்த மார்க்கம். இயற்கைக்கு முரண்பட்ட எந்த சட்ட திட்டமும் இஸ்லாத்தில் பார்க்க முடியாது. அனைத்து உயிரினங்களையும் அரவணைத்து செல்லும் அழகிய மார்க்கம். இம்மாபெரும் பிரபஞ்சத்தை இயற்கையாக படைத்த இறைவனால் கொடுக்கப்பட்ட இஸ்லாமும் இயற்கையுடன் இணைந்து செல்கிறது.
படைக்கப்பட்ட முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களால் படைத்த இறைவனை வணங்க, உலகில் கட்டப்பட்ட முதல் இறை இல்லமான காபத்துல்லாஹ்வில் முதலில் செய்ய வேண்டிய வணக்க வழிபாடு; தவாப் என்னும் ஏழுமுறை இட வலமாக  (Anti-Clockwise) சுற்றி வருதலாகும்.அதைத் தொடர்ந்து ஸபா-மர்வாவையும்   ஏழு முறை இட வலம்  சுற்றி வருதலாகும். ஏன் இடம் சுற்றி வர வேண்டும்? வலது புறமாக சுற்றி (Clockwise) வருவதுதான் பொதுவாக எங்கும் உள்ள நடைமுறை.
படைப்பில் சிறந்தவனான மனிதன் தனது வலது புறத்தையே  முற்படுத்த வேண்டும் என்றும்; இடதை விட வலதே சிறந்தது என ஏராளமான வசனங்களில் அல்லாஹ் கூறியிருக்கிறான். நாளை மறுமையில் இடைக்கையில் பட்டோலை கொடுக்கப்படுபவர்கள் நஷ்டவாளிகள் என்றும் வலக்கையில் கொடுக்கப்படுபவரே சுவனவாசிகள் என்றும் அல் குர்ஆனில் (69:19,25,17:71) அல்லாஹ் கூறுகின்றான்.” இன்னும் கியாம நாளில், வானங்களனைத்தும் அவனுடைய வலக்கையால் சுருட்டப்பட்டதாக இருக்கும்.” (39:67) இது போன்று வலது புறத்தை  முற்படுத்தச் சொல்லும் நபிமொழிகளும் ஏராளமாக உள்ளன.
இப்படி வலது புறத்தை சிறப்பித்துக்கூறும் அல்லாஹ் தன்னை வணங்க வரும் அடியார்கள் தனது இறை இல்லத்தை இடது புறமாகவே சுற்றி வர வேண்டும் என்று கட்டளை இட என்ன காரணம்? உண்மையான காரணம் அல்லாஹ்வே அறிந்தவன்!  படைப்பினங்களுக்கு உள்ள சட்டம் படைத்தவனுக்கு இல்லை. அவன் தனித்தவன். இணை இல்லாதவன் பேரறிவாளன்.
பொதுவாக உலகில் உள்ள பெளத்த மதம்,ஹிந்து மதம்,யூத மதம், கிருஸ்துவ மதம்,மற்றும் சீக்கிய மதம் போன்ற அனைத்து மதங்களிலும் புனித இடங்களை வலம் சுற்றி வரும் வணக்க வழிபாடு கடைப்பிடிக்கப்படுகிறது. குறிப்பாக இந்து கோவில் பிரகாரங்களை சுற்றி வலம் வரும் “பிரதட்சனம்” உள்ளது. தரையில் படுத்து உருண்டு வலம் வரும் “அங்கப்பிரதட்சணம்” மற்றும் நவ கிரகத்தை சுற்றி வருதல். மலையை சுற்றிவரும் “கிரிவலம்” இன்றும் உள்ளது. கிரிவலம் என்பது மலையை வலம் வருதல் (மலைக்கு வலபக்கத்தில் தொடங்கி சுற்றி வழிபட்டு வருதல்) என்பதாகும்.
கிருஸ்துவ தேவாலயத்தில் திருப்பலி பீடத்தை சுற்றி வந்து தூப ஆராதனை செய்யப்படுகிறது. இப்படி எல்லா மதங்களிலும் புனித இடங்களை வலது புறமாக சுற்றி வரும் நடை முறை வழக்கத்தில் உள்ளது.
அறிவியல் ரீதியாக, படைக்கப்பட்டு  சுழன்று வரும் அனைத்து பிரபஞ்சம், (Galaxies) சூரியன், பூமி, சந்திரன், கோள்கள் அனைத்துமே இயற்கையாகவே இடது புறமாக ( Prograde Rotation) சுழன்று செல்கின்றன. இந்த இயற்கையின் விதிப்படியே படைப்பினங்களாகிய பிரபஞ்ச, சூரிய, பூமி, சந்திர, கோள்களுடன் படைக்கப்பட்ட மனிதனும் இடஞ் சுழியாக இறை இல்லமான காபத்துல்லாஹ்வை சுற்றி வருகின்றான். இஸ்லாம் ஒரு இயற்கை மார்க்கம் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு பூமி, சூரிய சந்திர பிரபஞ்ச சுழற்சியை பற்றி எவரும் கற்பனைகூட செய்திருக்க முடியாது. படைத்த இறைவனுக்கு மட்டுமே இவ்வுண்மை தெரியும்.
 வானங்களிலும், பூமியிலும் இருப்பவை எல்லாம், விரும்பியோ, விரும்பாமலோ அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்கின்றன; அவற்றின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் (அவ்வாறே சஜ்தா செய்கின்றன.)  அல் குர்ஆன்.13:15.
அவற்றின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் சிரம்(ஸஜ்தா) பணிகின்றன. என்ற வசனத்தின் மூலம் பூமி சுழல்கிறது. இதுபோல் வானத்தில் உள்ள சூரிய, சந்திர, பிரபஞ்சங்கள் (Galaxies), கோள்கள் சுழன்று செல்லும் உண்மையை அல்லாஹ் கூறுகின்றான். இன்றைய நவீன அறிவியல் இவை அனைத்தும் இடது புறமாகவே  (Anti-Clockwise)  சுழன்று செல்வதை உண்மைப்படுத்தி  உள்ளது.
 ஓர்  பொருளின் கண்ணுக்குத் தெரியாத மிகச்சிறிய துகளை அணு (Atom) என்கிறோம். இந்த அணுக்கருவை சுற்றி வரும் எலக்ட்ரான்களும் இடஞ் சுழியாகவே சுழல்கின்றன. பூமியின் நடுவில் உள்ள உட்கரு (Core) இடது புறமாகவே சுழன்று வருவது குறிப்பிடத்தக்கது. இயற்கை மார்க்கமான இஸ்லாத்தை ஒட்டியே அணு முதல் அண்டம் வரை அனைத்தும் இடது புறமாகவே சுழன்று செல்வது ஒரு அறிவியல் விந்தை.
இயற்கையான ஒளி அலைகள் இடைஞ்சுழியாக செல்லுகின்றன. பூமியின் மின்காந்த அலைகளும் இடஞ்சுழியாகவே (Anti Clockwise) பயணப்படுகின்றன. பெரும்பாலான கடல் நீரோட்டங்கள் இடம் வலமாகவே ஓடுகின்றன. இயற்கையான தாவரங்களில், கொடியில் சுற்றிப்  உயரும் செடி கொடிகள் 90% இடம் வலமாகவே (Anti clockwise) சுற்றிப் பின்னிப் பிணைந்து படர்கின்றன. நீரில் உருவாகும் சுழல் நீரோட்டமும் (Whirlpool) இடம் வலமாகவே சுழன்று செல்கிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் உருவாகும் புயல்களின் சுழற்சி பெரும்பாலும் இட வலமாகவே உள்ளது.
இப்படி ஏராளமான இயற்கை விந்தைகள் இடம் வலமாகவே பெரும்பான்மையாக சுழல்கின்றன. இயற்கையுடன் இயைந்த யதார்த்த உண்மைகளில் சில விதி விலக்குகளும் இல்லாமல் இல்லை. உதாரணமாக சூரியனை இடம் வலமாக அனைத்துக் கோள்களும் சுற்றும்போது இதற்கு மாற்றமாக வீனஸ், மற்றும் சில குறுங்கோள்கள், சில காலக்ஸ்சிகள் வலம் இடமாக சுழல்கின்றன. இது போன்ற விதி விலக்குகள் எங்கும் உள்ளன.
உதாரணமாக,அல்லாஹ் ஆண்,பெண், விலங்குகள், மற்றும் தாவரங்களை ஜோடி ஜோடியாகப் படைத்து பல்கிப்பெருகச் செய்துள்ளான். அதேசமயம் விதி விலக்காக இனப்பெருக்கம் செய்ய முடியாத மூன்றாம் பாலினமும் உலகில் இருக்கத்தான் செய்கிறது.
(“அல்லாஹ்) அவர்களுக்கு அவன் ஆண் மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான்; அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கிறான்- நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன்; பேராற்றலுடையவன்.”    அல் குர்ஆன்.42:50.
ஆணுக்கு கரு அணு மற்றும் பெண்ணுக்கு கரு முட்டை வளர்சசி இல்லையேல் அவர்கள் குழந்தை பாக்கியம் இன்றி மலடாக ஆவதுபோல் குழந்தையை பெற்றெடுக்க தகுதி இல்லாத மூன்றாம் பாலினமும் மலடாகவே இருக்கிறார்கள். ஆயினும் இந்த விதி விலக்குகள் விகிதாச்சாரத்தில் மிகக்குறைந்த அளவிலே உள்ளது. ஆகவே விதிவிலக்குகளை நாம் விதியாக எடுக்கத்தேவையில்லை.
இஸ்லாம் ஒரு இயற்கை மார்க்கம் என்பதை ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறிய செய்தியை ஹதீஸ்களில் பார்க்கலாம்.
(நபி (ஸல்) அவர்கள்) மிஹ்ராஜ் விண்ணக பயணத்தின் போது ஏழாவது வானத்தில் உள்ள “அல் பைத்துல் மஹ்மூர்’ எனும் இறை இல்லம் காட்டப்பட்டது. பிறகு என்னிடம் ஒரு பாத்திரத்தில் மதுவும், ஒரு பாத்திரத்தில் பாலும், இன்னொரு பாத்திரத்தில் தேனும்  கொண்டு வரப்பட்டது. நான் பாலைத் தேர்ந்தெடுத்தேன். (பிறகு அதைக் குடித்தேன்.) அப்போது ஜிப்ரீல், “இதுதான் நீங்களும் உங்கள் சமூதாயத்தாரும் இருக்கும் (இஸ்லாம் எனும்) இயற்கை நெறியாகும்.” என்று கூறினார்கள்.
 அறிவிப்பாளர்: அப்பாஸ் இப்ன் மாலிக் (ரலி)   நூல்:புஹாரி.3887.
 மது,பால்,தேன் இம்மூன்று பானங்களிலும் பால் மட்டுமே கால்நடைகளிலிருந்து எந்த ஒரு மாற்றமுமின்றி நேரடியாக இயற்கையாக குடிக்க கிடைக்கிறது.ஆனால் அறிவியல் ரீதியாக தேன் உருவாவது அப்படியல்ல.தேனீக்கள் பூவில் உள்ள மகரந்த பூந்தாதுகளை உண்டு;அதன் வயிற்றில் உருவாகும் இன்வர்டஸ் என்னும் நொதியினால் குளுகோஸ் ஆக மாற்றி (The main enzymes in honey are invertase (saccharase) diastase (amylase) which are introduced to honey by bees, வெளியேற்றி தனது கூட்டில் சேகரிக்கிறது. பூவிலிருந்து நேரடியாக கொண்டு வந்து சேர்த்த தேன் அல்ல. தேனீக்களின் வயிற்றில் என்சைமங்களால் நொதிக்கப்பட்டு (Fermentation) உடைக்கப்பட்ட எளிய சர்க்கரையே (Glucose) தேனாகும்.
இது போல் மதுவும் இயற்கையாக உருவாவதில்லை. கனிந்த பழங்களை, தானியங்களை செயற்கையாக ஊறல் போட்டு புளிக்க வைத்து சாறாக்குகின்றனர். சாற்றை மதுவாக மாற்றும் நுண்ணுயிர் ஈஸ்டின் அறிவியல் பெயர் “சாக்கரோ மைசெஸ் செர்விசெஸ்” (Saccharomyces cerevisiae)  இவை பழச்சாறிலுள்ள  இனிப்பில் பல மடங்காக பெருகி சைமாஸ் எனும் நொதிகளை வெளிவிடுகின்றன. இந்த என்சைமே (Zymase) சர்க்கரையை சிதைத்து எத்தனால்(Ethanol) என்னும் (Alcohol) மதுவாக மாற்றுகிறது. இரசாயன மாற்றமடைந்து போதை தருவதே மது பானம்.
தேனும், மதுவும் இயற்கையாக, நேரடியாக கிடைப்பதில்லை. தேனீயின் Invertase Enzyme ஆல் தேன் உருவாகிறது. பழச்சாறானது Saccharomyces cerevisiae என்னும் நுண்ணுயிர் பாக்டிரீயாக்களால் நொதிக்க வைக்கப்பட்டு (Fermentation) மதுவாக மாறுகிறது. ஆனால் தூய பாலானது தேனீ, நுண்ணுயிர்கள் போன்ற (இடைத்தரகர்) என்சைம்களால் நொதிக்க வைக்கப் படாமல் நேரிடையாக  இயற்கையாகப் பருகக்கிடைகிறது. ஆகவே இஸ்லாம் என்பது அல்லாஹ்வால் கொடுக்கப்பட்ட இயற்கை மார்க்கம், நபி (ஸல்) அவர்கள் தேர்ந்தெடுத்த பாலைப்போன்ற இயற்கையான இனிய மார்க்கம்.
தேனும், மதுவும் எப்படி உருவாகிறது என்று 1400 ஆண்டுகளுக்கு முன்னால் எந்த ஒரு  மனிதராலும் சொல்ல முடியுமா? இந்த அறிவியல் உண்மைகள் கடந்த இரு நுற்றாண்டுகளில்தான் ஆய்வு ரீதியாக அறியப்பட்டது. தேனீக்களையும், பாக்டீரிய நுண்ணுயிர்களையும், மனிதனையும் படைத்த அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த உண்மையை தனது தூதர் நபி(ஸல்) அவர்கள் மூலம் அன்றே வெளிப்படுத்தியுள்ளான்.
இஸ்லாம் ஒரு இயற்கை மார்க்கம் மட்டுமல்ல, ஓர் இறைவனின் மார்க்கம் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.அல்ஹம்துலில்லாஹ்!
 இது (குர்ஆன்) மனிதர்களுக்கு தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டதாகவும், உறுதியான நம்பிக்கையுடைய சமூகத்தாருக்கு  நேர்வழியாகவும், அருட்கொடையாகவும்  இருக்கிறது.   –அல் குர்ஆன். 45:20