“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்)
அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.
சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.
“இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”

படைப்புக் கொள்கை

'வானங்களையும் பூமியையும் படைப்பது மனிதர்களைப் படைப்பதை விடப் பெரியது. எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்'
-குர்ஆன் 40:57

'படைக்கப்படுவதில் நீங்கள் கடினமானவர்களா? அல்லது வானமா? அதை அவன் நிறுவினான்'
-குர்ஆன் 79:27


வானங்களையும் கோள்களையும் உள்ளடக்கிய இம் மாபெரும் பேரண்டத்தை இறைவன் 'ஆகு' என்ற ஒரு வார்த்தையில் உண்டாக்கினான் என்பதை குர்ஆனின் துணை கொண்டு முன்பு பார்த்தோம். அறிவியல் அறிஞர் ஹாக்கிங் அவர்களின் ஆராய்ச்சியின் வழியாக அறிவியல் பூர்வமாகவும் குர்ஆனின் வார்த்தை உண்மையானது என்பதை தெளிவாக அறிந்து கொண்டோம். அதன் பிறகு படைப்புக் கொள்கைக்கு வருவோம்.

இம்மாபெரும் பேரண்டத்தைப் படைத்த எனக்கு மனிதர்களாகிய உங்களை படைப்பது எனக்கு வெகு சுலபமே என்று மனிதர்களைப் பார்த்து இறைவன் குர்ஆனில் கூறுகிறான். பேரண்டத்தைப் படைக்க இறைவனின் ஆற்றல் அவசியம் என்பது போல் மனிதனைப் படைப்பதற்கும் இறைவனின் ஆற்றல் இங்கு அவசியமாகிறது. (ஒரு செல் உயிரி பரிணாமம் அடைந்து குரங்கு வரை வந்து பிறகு மனிதனானது என்ற வாதம் நாத்திகத்தை கொண்டு செல்ல டார்வினால் வைக்கப்பட்டது. ஆனால் இன்றைய கால கட்டம் வரை அறிஞர்களால் அதனை நிரூபிக்க முடியவில்லை. உலக முடிவு நாள் வரையில் அவர்களால் நிரூபிக்கவும் முடியாது.)

'பூமியில் உங்களை அதிகாரத்துடன் வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வாழ்க்கைக்குரிய வசதி வாய்ப்புகளையும் இதில் ஏற்படுத்தியுள்ளோம். இருப்பினும் நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்'
-குர்ஆன் 7:10

'நீங்கள் எவைகளை எல்லாம் இறைவனுக்கு இணை கற்ப்பித்தீர்களோ அவைகள் சிறந்தவையா? அல்லது பூமியை வசிப்பிடமாக்கி அவற்றிற்கிடையே ஆறுகளை உருவாக்கி அவற்றுக்கு முளைகளையும் அமைத்து இரண்ட கடல்களுக்கு இடையே தடுப்பையும் ஏற்படுத்தியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்.'
-குர்ஆன் 27:61


மேற்கண்ட இரண்டு வசனங்களின் மூலம் இந்த பூமியை மனிதர்களுக்காக பிரத்யேகமாக இறைவன் உண்டாக்கியுள்ளான் என்பதை அறிகிறோம். இந்த பூமியானது தானாகவே மனிதர்களுக்கு எற்றவாறு மாற வில்லை என்பதும் இறைவன் அத்தகைய ஏற்பாட்டை கொண்டு வந்தான் என்பதையும் விளங்குகிறோம். பிரபஞ்சத்தின் வேறு எந்த கோள்களிலும் மனிதன் வாழ முடியாது என்பதையும் இதிலிருந்து விளங்குகிறோம்.


பெரு வெடிப்பிலிருந்து படிப்படியாக உருவாகி வரும் ஒரு நட்சத்திரக் குடும்பத்திலுள்ள ஒரு கோள் நம் போன்ற உயிரினங்கள் வாழும் வாழ்விடமாக மாற்றுதல் என்பது இறைவனின் ஆற்றலுக்கு மிக எளிதானது. இதையே நாம் அறிவியல் பார்வையில் பார்க்க வேண்டுமானால் மிக மிக மிக கடினமான காரியமாகும். 

இந்த பிரபஞ்சத்தில் எந்த ஒரு கோளுமே மனிதன் வாழ தகுதியுடையதாக இல்லை பூமியைத் தவிர. பூமியைப் படைத்த இறைவன் அதை மனிதனுக்காக பிரத்யேகமாக படைத்ததாகவும் கூறுகிறான். இந்த பூமியை மனிதனுக்காக படைக்கவில்லை என்றால் மற்ற உயிரினங்களைப் போலவே எந்த சட்ட திட்டங்களும் இல்லாமல் சாதாரணமாக இருந்திருப்பான். ஆடு மாடுகளைப் போல் எப்படி வேண்டுமானாலும் மனிதனும் இருந்து கொள்ளலாம். நன்மை தீமைகளை பிரித்தறியும் கடமையும் அவனக்கு இருந்திருக்காது. இத்தனை வசதி வாய்ப்புகளை நமக்காக ஏற்படுத்திய இறைவன் அவன் சொல்படி நாம் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். இந்த எதிர்பார்ப்பும் நியாயமான ஒன்றே!

பூமியைப் போன்ற ஒரு கோள் அல்லது துணைக்கோள் உயிரின வாழ்க்கைக்கு ஏற்றதாக இருக்க வேண்டுமானால் அது பிரதானமாக கீழ்காணும் ஆறு சிறப்பம்சங்களைப் பெற்றிருக்க வேண்டும் என அறிவியலார் ஷெப்லி அவர்கள் கூறுகின்றார். அது என்னவென்று பார்ப்போம்:

1. அந்தக்கோள் நட்சத்திரங்களிலிருந்து சரியான தூரத்தில் நிலைபெற்றிருக்க வேண்டும். 

2. அந்தக் கோள் சரியான வெப்ப நிலையை பெற்றிருக்கும் பொருட்டு அதன் சுற்றுப் பாதை (Orbit) அதற்க்கேற்ற விதத்தில் அமைந்திருக்க வேண்டும்.

3. அந்தக் கோளுக்கு விஷம் கலவாத ஒரு வளி மண்டலம் (Atmosphere) இருக்க வேண்டும்.

4. அந்தக் கோளிற்கு நஞ்சு கலவாத நீர் ஊற்றுகள் (Sources) இருக்க வேண்டும். 

5. காற்றும் நீரும் உயிரினங்களுக்குத் தகுதி வாய்ந்த இரசாயனக் கலவையாக (Chemical Composition) இருக்க வேண்டும்.

6. அந்தக் கோள் காற்று மண்டலத்தை நிலை நிறுத்தும் அளவிற்குப் பெரிதாகவும் இருக்க வேண்டும்.

ஆதாரம்: OF STARS AND MEN, PAGE 66-67.

மேற்கண்ட சிறப்பம்சங்கள் உயிரின வாழ்க்கைக்குப் பொதுவாக தேவைப்படும் அம்சங்களாகவே ஷேப்லி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நமது ஆய்வு குறிப்பாக மனித வாழ்க்கையின் தேவைகளை குறித்ததாக இருப்பதால் மேற்கண்ட அம்சங்களோடு மேலும் சில சிறப்பம்சங்களையும் மனிதன் வாழுகின்ற கோள் அல்லது துணைக் கோள் பெற்றிருக்க வேண்டும். அவற்றையும் பார்ப்போம்:

7. அந்தக் கோள் மனிதனின் உணவிற்க்கும் ஏனைய உபயோகங்களுக்கும் ஏற்ற தாவரம் மற்றும் விலங்கினங்களின் உற்பத்தியைப் பெற்றிருக்க வேண்டும். 

8. விவசாயம் செய்வதற்கேற்ற பருவ காலங்களை அக்கோள் பெற்றிருக்க வேண்டும். 

9. இரவு பகல் மாறி வருவதற்க்கேற்ப அக்கோள் சீரான அச்சின் சுழற்ச்சியைப் பெற்றிருக்க வேண்டும். 

10. மனிதனுக்கும் உயிரினங்களுக்கும் ஏற்ற விதத்திலான புவியீர்ப்பு விசையை அக்கோள் பெற்றிருக்க வேண்டும். 

இங்கு நாம் இந்த இடத்தில் நமது அறிவைக் கொண்டு சற்று சிந்திக்க வேண்டும். கோடிக்கணக்கான விண் மீன்கள் கோளகள் குறுங்கோள்களையுடைய இந்த பேரண்டத்தில் பூமியில் இத்தகைய வசதி வாய்ப்புகள் உருவானது எவ்வாறு? தானாகவே அசெம்பிள் பண்ணிக் கொண்டதா? அதை நமது அறிவு ஏற்கிறதா? 

மனிதனின் உடலமைப்பு நீரில் வாழ உகந்ததாக இல்லை. ஆனால் கடலில் வாழும் மீன்களே செல்ல முடியாத ஆழத்துக்கு சில உபகரணங்களின் துணையால் மனிதன் சென்று விடுகின்றான். தனக்கு இறக்கை இல்லாவிட்டாலும் பறவைகளே போக முடியாத தூரத்துக்கு வானத்தின் மேல் பறந்து காட்டுகிறான். காட்டுக்கே ராஜாவான சிங்கத்தை ஒரு கூண்டுக்குள் அடைத்து தான் சொல்வதை எல்லாம் கேட்கும்படி பழக்கி விடுகிறான். இந்த ஆற்றல் மனிதனுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கல்வித் திறனால் வந்தது. இல்லை என்றால் விலங்குகளைப் போலவே மரங்களிலும் குகைகளிலும் தனது வாழ்க்கையை இன்றும் கழித்து வந்திருப்பான் மனிதன். சிங்கம் புலி ஆடு மாடு போன்றவை தங்களது அறிவை மெருகேற்றி இன்று தங்களுக்கென்று ஒரு குடிலை அமைத்துக் கொள்வதில்லை. மனிதர்கள் அமைத்துக் கொடுத்தால் அதில் வந்து அமர்ந்து கொள்ளும். இல்லை என்றால் மரத்து நிழல்களிலோ காடுகளிலோ தங்களது இருப்பிடத்தை அமைத்து கொள்ளும்.

இவ்வளவு அறிவையும் ஆளும் திறனையும் மனிதனுக்கு அள்ளித் தந்த இறைவன் அந்த மனிதன் தனக்குக் கட்டுப்பட வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

அடுத்து இன்றைய அறிவியல் உலகம் மனிதனின் தோற்றத்திற்கோ அவனுடைய காலக்சியின் தோற்றத்திற்க்கோ இவ்வளவு பெரிய பேரண்டம் தேவையில்லை என சொல்லி வருகிறது. இப்பேரண்டம் இருப்பதால்தான் மனிதனின் சிந்தனை விரிவடைந்து மேலும் மேலும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை நாள் தோறும் வெளியிட்டு வருகிறான். மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு இப்பேரண்டம் அவசியம் என்பதும் இதிலிருந்து தெரிகிறது. பிற்காலத்தில் இன்னும் பல உண்மைகள் கண்டுபிடிக்கப்படும்போது இப்பேரண்டத்தின் முக்கியத்துவத்தை மனித குலம உணர்ந்து கொள்ளும். அதுவரை நாமும் பொறுப்போம்.

No comments:

Post a Comment