உலகத்தில் வாழக்கூடிய மக்களுக்கு வழி காட்டும் நெறிமறையாக அல்குர்ஆன் அமைந்துள்ளது. 1431 ஆண்டுகளுக்கு முன் அல்லாஹ் வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருளப்பட்ட இந்த புனித குர்ஆன், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களையும், நிகழ்ந்த சம்பவங்களையும் வரலாறாக தந்ததுடன் வாழுகின்ற மக்களுக்கு இது சட்ட நூலாகவும், விண்ணியல், மண்ணியல், தாவரவியல், கருவியல், சமுத்திரவியல், விலங்கியல் என்று பல தரப்பட்ட விஞ்ஞானங்களை எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கிறது.
அன்றைய காலகட்டத்தில் நவீன விஞ்ஞான வளர்ச்சிகளே இல்லாத காலத்தில் இறக்கி அருளப்பட்ட இந்த குர்ஆன் இன்று விஞ்ஞானம் வளர்ச்சியடைந்த காலத்தைப் பேசுவது பலதரப்பட்ட மக்களையும் வியப்பில் ஆழ்த்துகிறது. பல அறிஞர்களை ஆராய்ச்சி பண்ண தூண்டுகிறது.
“இந்த குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? (அல்குர்ஆன் 47:24) “ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா?’ (அல்குர்ஆன் 4 : 82) என்று அல்லாஹ் கேட்கிறான்.
“நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா? இன்னும் மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?’ (அல்குர்ஆன் 78 : 6, 7)
“இன்னும் இப்பூமி சாயாமலிக்கும் பொருட்டு நாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம். அவர்கள் நேரான வழியில் செல்லும் பொருட்டு நாம் விசாலமான பாதைகளையும் அமைத்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 21 : 31)
நாம் வாழுகின்ற இந்த பூமியின் மேற்பகுதி கடினமாக அமைந்துள்ளது. இதில்தான் உயிரினங்கள் வாழ முடியும். ஆனால் பூமியில் ஆழத்தின் உள்ளே உள்ள கீழடுக்குகளோ, மிகவும் வெப்பம் நிறைந்ததாகவும், திரவ நிலையிலும் உள்ளது. எனவேதான் பூமியின் கீழ் பகுதியில் எந்த உயிரினமும் வாழ முடியாது. ஆதலால் தான் அல்லாஹ் பூமியை உருண்டை வடிவில் படைத்த போதிலும், உயிரினங்கள் வாழும் பகுதியை குறிப்பிடும் வகையில்தான் இப் பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா? என்று வினா எழுப்பியுள்ளான்.
பூமியில் வாழும் உயிரினங்கள் ஆடி சாயாமலிருக்கவே மலைகளை உருவாக்கி அவற்றின் வேர்கள் பூமிக்குள் ஆழமாக ஊடுருவி நிற்பதாகவும் அல்குர்ஆன் கூறியதை ஆராய்ந்து பார்த்த அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ஃபிராங் பிரஸ்லின் என்பவர் தனது நூலில் அல்குர் ஆனின் கூற்றை உறுதிப்படுத்திக் கூறியுள்ளார்.
“இந்த பூமியை வசிக்கத்தக்க இடமாக ஆக்கியவனும் அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும், அதற்காக மலைகளை உண்டாக்கிய வனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் வேறு நாயன் இருக்கின்றானா? இல்லை எனினும் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர்.
“கடல்களை பற்றி அல்லாஹ் கூறுகையில் இர ண்டு கடல்கள் அவற்றிற்கு இடையில் ஒரு தடுப்பு இருக்கிறது’ என்றும் கூறுகிறான். (அல்குர்ஆன் 55 : 19, 20)
“மேலும், ஒன்று மிக்க இனிமையும், சுவையுமுள்ளது. மற்றொன்று உப்பும், கசப்புமானது. இவ்விரண்டிற்குமிடையே வரம்பை மீற முடியாத ஒரு தடையை ஏற்படுத்தியிருக்கின்றான். (அல்குர்ஆன் 25 : 53)
அல்குர்ஆனின் கடலியல் வசனங்களை ஆராய்ச்சி செய்த கடலியல் நிபுணர் டாக்டர் ஜான்கூஸ்தோ எனும் அறிஞர் அதனை உறுதிப்படுத்துகின்ற வகையில் அது எந்தப் பகுதியில் உள்ள கடல் என்ற விபரங்களைச் சேகரித்து எடுத்துக் காட்டியுள்ளார். மேலும் அமெரிக்கா வின் கொலரடோ பல்கலை கழகத்தில் மண்ணியல் துறை பேராசிரியராக உள்ள டாக்டர் வில்லியம் ஹை என்ற அறிஞரும் ஆராய்ச்சி மூலம் உறுதிப்படுத்தி இந்த விந்தைமிகு நிகழ்வு மத்திய தரைக் கடலுக்கும் ஜிப்ரால்டரில் உள்ள அட்லாண்டிக் சமுத்திரத்திற்கும் இடையே உள்ள தடுப்பு உட்பட பல்வேறு இடங்களில் இந்த அற்புத நிகழ்வு ஏற்படுகிறது என்று தெரிவித்து உள்ளனர்.
இந்த கடல் நீரில் ஒரு பகுதி சுவையாகவும் ஒரு பகுதி உப்பு நீராகவும் இருக்கும். ஆனால் கடல் ஒரே மாதிரியாகவே தெரியும். ஆனால் அல்லாஹ் அதனை சாய்வான அமைப்பில் கண் புலன்களுக்கு புலப்படாத வகையில் தடுப்புக் களை ஏற்படுத்தி அதன் வழியே ஒரு கடலின் நீர் மற்றொரு கடலுக்கு செல்கிறது என்பதனை தெளிவாக விளக்கி உள்ளார். ஆதாரம்: Principles of Oceonography Davis P.92
கடல்களின் தன்மைகளை ஆராய்ச்சி செய்யும் நிபுணர்கள் குர்ஆன் கூறும் வசனப்படி “ஆழ்கடல் பல இருள்களை போன்றதாகும்’ அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றொரு அலை. அதற்கு மேல் மேகம். இப்படி பல இருள்கள். சில, சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. “அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால் அதை பார்க்க முடியாது’ என்று அல்குர்ஆனின் அந்நூர் 24:40ல் கடலின் தன்மைகளை உவமையுடன் விளக்கி கூறியதை நவீன கருவிகளின் துணை கொண்டு கடல் விஞ்ஞானி பேராசிரியர் துர்காராவ் என்பவர் ஆராய்ந்து கூறுகிறார். இவர் ஜித்தாவில் மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலை கழகத்தில் பணியாற்றியவர்.
எந்த ஒரு பொருளின் துணையில்லாமல் 20 முதல், 30 மீட்டர் அளவுக்கு மேல் மனிதர்கள் கடலுக்குள் மூழ்குவது இயலாத காரியம். ஆழ்கடல்களில் இருள் திரைகள் அடுக்கடுக்காய் படிந்து இருக்கிறது. ஆனால் உள்ளே ஓர் ஒளிக்கதிர் ஏழு வர்ணங்களை கொண்டுள்ளது. 30 முதல் 50 மீட்டர் வரை ஆரஞ்சு நிறமும், 50 முதல் 100 மீட்டர் வரை மஞ்சள் நிறமும், 100 முதல் 200 மீட்டர் பச்சை நிறமும், 200 மீட்ட ருக்கு அப்பால் நீல நிறம், கருநீலம், ஊதா நிறங்களாக நீருக்குள் ஊடுருவிச் செல்கின்றன. அது முதல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. Ocean Eider and Pernetta P. 27
“ஆழ்கடலில் ஏற்படும் பல இருள்களைப் போன்றதாகும்’ என்ற குர்ஆனின் வசனத்தில் கூறப்பட்டவற்றை உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளார் பேராசிரியர் துர்காராவ். கடல்களை நாம் பல்வேறு பிரிவுகளாக பிரித்து பசுபிக்கடல் என்றும், அரபிக்கடல் என் றும் மத்திய தரைக்கடல் என்றும் அட்லாண்டிக் கடல் என்றும் பாக்ஜலசந்தி என்றும் மன்னார் வளைகுடா என்றும் பெயர் கூறி அழைக்கின்றோம்.
இந்தக் கடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பகுதிகளிலும் விதவிதமான அமைப்புகளும், அபூர்வங்களும் நிறைந்து காணப்படுகின்றன. வல்ல இறைவன் உலகத்தை படைத்து 3/4 பகுதி கடலின் பரப்பளவை நீட்டியும் 1/4 பகுதி மட்டுமே நிலப்பரப்பையும், அதில் மலைகளையும் ஏற்படுத்தி உள்ளான். நம் தமிழ்நாட்டில் பாக்ஜலசந்தியும், மன்னார் வளைகுடாவும் உள்ளது. இந்த மன்னார் வளை குடாவில் ஓர் அற்புதத்தை இறைவன் கடலுக்குள் ஏற்படுத்தி உள்ளான்.
கடலுக்குள் மிக அலங்காரமாகவும், பிரமிப்புவூட்டும் விதமாகவும் அழகிய வடிவங்களுடன் வித விதமான தோற்றத்தில் கோரல் எனும் பாற்கல்கள் (Corel Reef) வளர்ந்து இருக்கின்றன. இந்தக் கோரலை தற்போது பவளப்பாறைகள் என்று மிகக் கெளரவப்படுத்தி அழைக்கின்றனர். இதில் வளர்ந்து நிற்கும் பாசிகள் மீன்களுக்கு உணவாகவும் அமைந்துள்ளது. அதனை உட் கொள்ள வரும் மீன்கள் அந்த நிழல்களில் இருப்பிடத்தில் ஓய்வு பெறும் நிலையையும் அடைகிறது. மீன் இனத்தை பெருக்கும் நிலைகள் உருவாகிறது.
இவற்றையயல்லாம் ஆராய்ச்சி செய்து வரும் விஞ்ஞானிகள் வளரும் பாசியினை ஆராய்ந்து பார்த்தார்கள். அந்த பாசியில் தாது உப்புகள், விட்டமின்கள், அயோடின், அமீனோ அமிலங்கள் புரோத சத்து, கொழுப்பு சத்து மற்றும் ஹார்போ ஹைட்ரேட் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது என்றும் கண்டு பிடித்தார்கள்.
உலகம் வெப்பமாகக் கூடிய காலமாக மாறி வருவதாலும் விளை நிலங்கள் விலைபோகக் கூடிய நிலையில் இருப்பதாலும் வரும் காலங்களில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் உணவு பஞ்சத்தில் சிக்கும் நிலை ஏற்படும் என்று அறிஞர்கள் அஞ்சுகின்றனர். ஆனால் மனிதனை படைத்த அல்லாஹ் அல்குர்ஆனிலே கல்லுக்குள் இருக்கும் உயிரினங்களுக்கும் உணவளிக்கிறோம் என்று சொன்ன வசனத்திற்கு ஒப்ப உலகம் முடியும் வரை வரக்கூடிய மக்களுக்கும் உணவளிப்பான்.
கல்லுக்குள் உள்ள பாசியை மீன்கள் உணவாக உட்கொள்வதை சுட்டிக்காட்டியுள்ள வசனத்தின்படி இந்த வகை பாசிகளை ஆராய்ந்த மண்டபம் முகாம் மத்திய கடல் ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI) மண்டபம் மத்திய மண் பரி சோதனை நிலையம், மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (Central All Research Centre) போன்றவை கடல் பாசிகளை வரும் காலத்தில் மனிதன் உணவாக உட்கொள்ளக்கூடிய காலம் வரும் என்று கூறி தற்போது இந்த கடல் பாசியை ஜெல்லி, ஜாம், சூப் பவுடர், ஊறுகாய், பிரியாணி போன்ற உணவு வகைகள் வெளி நாடுகளில் தயாரிக்கப்பட்டு உணவாக உட்கொண்டு வருகின்றனர். மருந்துக்கும், வேளாண்மை உரம் இவைகளுக்கும் பயன்படுத்துகின்றனர்.
இது மேலும் விரிவாகி பல்வேறு உணவு வகைகள் தயாரிக்க கூடும் என்றும் ஆராய்ச்சி வல்லுநர்கள் கருத்துக் கூறியுள்ளனர். எதிர் காலத்தில் உணவு பற்றாக் குறைக்கு ஓர் முற்றுப் புள்ளியாக திகழும் என்றும் நம்புகின்றனர். ஆதலால்தான் தற்போது இந்த பாசிகளை வளர்ப்பதற்கு தமிழக அரசு மீன்துறை மூலமாக பயிற்சி அளித்து கடலில் பாசி வளர்க்க ஊக்குவித்துள்ளனர். தற்போது நமது கிழக்கு கடல் பகுதிகளை தேர்வு செய்து 500 குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பாசி வளர்ப்பினால் பிராண வாயுவும் பவளப் பாறையின் நுண்ணுயிர்களும், கடல் வாழ் உயிரினங்கள் வளர்ச்சியாகி சுற்றுச்சூழல் வெப்பம் தணிந்து குறித்த காலங்களில் மழை பொழியவும் செய்கிறது என்பதையும் விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வில் தெளிவு படுத்துகின்றனர். கல்லுக்குள் உள்ளவைகளுக்கும் உணவளிப்பதை கூறிய வல்ல இறைவன் அந்த கல்லுக்குள் வளரும் பாசிகள் மனிதனின் தேவைகளை பூர்த்தி செய்ய இன்றைய காலமும், வரும் காலமும், பயனளிக்கிறது என்று உணர்ந்த விஞ்ஞானிகள் குர்ஆனின் கடலியல் வசனத்தை ஆராய்ந்து பார்த்து வியந்து போய் உள்ளனர்.
அல்லாஹ்வின் நெறிநூலில் புதைந்து கிடக்கும் இந்த சமுத்திரவியல் உலக மக்களுக்கு வழி காட்டும் நூலாகவும், வாழ்வளிக்கும் ஒளிச் சுடராகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறதிலிருந்து அறிந்து கொண்டோம்.
No comments:
Post a Comment