“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்)
அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.
சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.
“இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”

மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டானா?

இவ்வசனங்கள் (6:2, 7:12, 15:26, 15:28, 15:33, 17:61, 23:12, 32:7, 37:11, 38:71, 38:76, 55:14) மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டான் எனக் கூறுகின்றன.
மனிதன் மண் என்று சொல்ல முடியாத கோலத்தைப் பெற்றுள்ளதால் முதல் மனிதன் மண்ணால் படைக்கப்பட்டான் என்பதை மறுக்க முடியாது.
சிந்தித்துப் பார்க்கும்போது முதல் மனிதன் மட்டுமின்றி விந்துத் துளி மூலம் உருவான முதல் மனிதனின் வழித்தோன்றல்களும் உண்மையில் மண்ணாகவே இருக்கின்றனர்.
 
இப்போது உலகில் 700 கோடிப் பேர் இருக்கிறோம். ஒவ்வொருவரும் தலா 50 கிலோ என்று வைத்துக் கொள்வோம். 35,000 கோடி கிலோ மொத்த எடையாகிறது.
 
ஒரு மனிதனும் இல்லாதபோது பூமியின் மொத்த எடை எவ்வளவோ அதே அளவு எடை தான் 700 கோடி மக்கள் அதில் வசிக்கும் காலத்திலும் இருக்கிறது.
700 கோடி மக்கள் இப்பூமியில் அதிகமானபோதும் 35 ஆயிரம் கோடி கிலோ எடை அதிகமாகவில்லை. 700 கோடி மக்களையும் சேர்த்து பூமியின் எடை எவ்வளவோ அதே எடை தான் ஒரு மனிதனும் படைக்கப்படாத காலத்தில் பூமிக்கு இருந்தது. அதாவது பூமி, தன்னில் 35 ஆயிரம் கோடி கிலோவை மனிதனாக மாற்றியுள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.
நாம் உண்ணுகிற உணவுகள், மண்ணின் சத்தினால் உருவானதாகும். எனவே நாம் உண்மையில் மண்ணைத் தின்று தான் உடல் வளர்க்கிறோம். இதனால் தான் நம்மால் பூமியின் எடை அதிகரிக்கவில்லை.
 
ஒவ்வொரு மனிதன் பிறக்கும்போதும் 50 கிலோ எடை பூமிக்கு அதிகமானால் பூமியின் எடை அதிகரித்து வேறு கோள்களுடன் மோதி பூமி சிதறிப் போய் விடும்.
 
நமது முப்பாட்டன்மார்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தைத் தோண்டிப்பார்த்தால் எதிலிருந்து அவர்கள் படைக்கப்பட்டார்களோ அதுவாகவே அவர்கள் மாறியிருப்பதைக் காணலாம்!
ஈரக் களிமண்ணால் படைக்கப்பட்டவன் தான் முதல் மனிதன். அதாவது மண்ணும், தண்ணீரும் கலந்து படைக்கப்பட்டவன். நம் உடம்பில் இவை தாம் உள்ளன. பல வகையாக வகைப்படுத்தினாலும் அதன் முடிவும் மண் தான். நாம் மரணித்த பின் மண்ணாகவும், தண்ணீராகவும் ஆகி விடுவோம்.
முதல் மனிதன் நேரடியாக மண்ணிலிருந்தே படைக்கப்பட்டான் என்பதும் அவனது வழித்தோன்றல்கள் மறைமுகமாக மண்ணிலிருந்து தான் வளர்கிறார்கள் என்பதும் தான் மண்ணால் படைக்கப்பட்டான் என்பதன் பொருள்.
 
மண்ணால் ஆனவன் மனிதன் என்பதற்கு மனித உடலில் அங்கம் வகிக்கும் மண்ணின் மூலச்சத்துகள் சான்றாக உள்ளன. 70 கிலோ கிராம் எடையுள்ள சராசரி மனித உடலை விஞ்ஞான முறையில் பகுப்பாய்வு செய்தபோது, உடலின் மூலப்பொருட்கள் துல்லியமாகக் கண்டறியப்பட்டன. மண்ணால் படைக்கப்பட்டவன் மனிதன் என்ற திருக்குர்ஆனின் வசனத்தை அறிவியல் உலகம் மெய்ப்பித்தது.
 
ஜான் நம்ஸ்லே எழுதியுள்ள க்ளாரென்டன் பதிப்பகம், ஆக்ஸ்போர்ட் வெளியிட்டுள்ள தி எமண்ட்ஸ் (மூன்றாம் பதிப்பு-1998) புத்தகத்திலிருந்து மனித உடலின் மூலப் பொருட்கள் பற்றிய ஆய்வுத் தகவலைப் பாருங்கள்.
 
70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடல் உள்ள மூலப் பொருள்கள்:
 
1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம்
2. கார்பன் 16 கிலோ கிராம்
3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம்
4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம்
5. கால்சியம் 1.0 கிலோ கிராம்
6. பாஸ்பரஸ் 780 கிராம்
7. பொட்டாசியம் 140 கிராம்
8. சோடியம் 100 கிராம்
9. குளோரின் 95 கிராம்
10. மக்னீசியம் 19 கிராம்
11. இரும்பு 4.2. கிராம்
12. ஃப்ளூரின் 2.6 கிராம்
13. துத்தநாகம் 2.3 கிராம்
14. சிலிக்கன் 1.0 கிராம்
15. ருபீடியம் 0.68 கிராம்
16. ஸ்ட்ரோன்ட்டியம் 0.32 கிராம்
17. ப்ரோமின் 0.26 கிராம்
18. ஈயம் 0.12 கிராம்
19. தாமிரம் 72 மில்லி கிராம்
20. அலுமினியம் 60 மில்லி கிராம்
21. காட்மியம் 50 மில்லி கிராம்
22. செரியம் 40 மில்லி கிராம்
23. பேரியம் 22 மில்லி கிராம்
24. அயோடின் 20 மில்லி கிராம்
25. தகரம் 20 மில்லி கிராம்
26. டைட்டானியம் 20 மில்லி கிராம்
27. போரான் 18 மில்லி கிராம்
28. நிக்கல் 15 மில்லி கிராம்
29. செனியம் 15 மில்லிகிராம்
30. குரோமியம் 14 மில்லி கிராம்
31. மக்னீசியம் 12 மில்லி கிராம்
32. ஆர்சனிக் 7 மில்லி கிராம்
33. லித்தியம் 7 மில்லி கிராம்
34. செஸியம் 6 மில்லி கிராம்
35. பாதரசம் 6 மில்லி கிராம்
36. ஜெர்மானியம் 5 மில்லி கிராம்
37. மாலிப்டினம் 5 மில்லி கிராம்
38. கோபால்ட் 3 மில்லி கிராம்
39 . ஆண்டிமணி 2 மில்லி கிராம்
40. வெள்ளி 2 மில்லி கிராம்
41. நியோபியம் 1.5 மில்லி கிராம்
42. ஸிர்கோனியம் 1 மில்லி கிராம்
43. லத்தானியம் 0.8 மில்லி கிராம்
44. கால்ஷியம் 0.7 மில்லி கிராம்
45. டெல்லூரியம் 0.7 மில்லி கிராம்
46. இட்ரீயம் 0.6 மில்லி கிராம்
47. பிஸ்மத் 0.5 மில்லி கிராம்
48. தால்வியம் 0.5 மில்லி கிராம்
49. இண்டியம் 0.4 மில்லி கிராம்
50. தங்கம் 0.4 மில்லி கிராம்
51. ஸ்காண்டியம் 0.2 மில்லி கிராம்
52. தண்தாளம் 0.2 மில்லி கிராம்
53. வாளடியம் 0.11 மில்லி கிராம்
54. தோரியம் 0.1 மில்லி கிராம்
55. யுரேனியம் 0.1 மில்லி கிராம்
56. சமாரியம் 50 மில்லி கிராம்
57. பெல்யம் 36 மில்லி கிராம்
58. டங்ஸ்டன் 20 மில்லி கிராம்.
 
மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற்கண்ட 58 தனிமங்களில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர, மற்ற தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை. மண்ணோடு மீண்டும் கலப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.

மீன் வயிற்றில் மனிதன் உயிருடன் இருக்க முடியுமா?

திரு குர்ஆனில் இவ்வசனங்கள் (37:142, 21:87, 68:48) யூனுஸ் நபி அவர்கள் சில நாட்கள் மீன் வயிற்றில் சிறைவைக்கப்பட்டதாகக் கூறுகின்றன.

மீன் வயிற்றுக்குள் மனிதன் எப்படி உயிருடன் இருக்க முடியும்? ஆக்ஸிஜன் இல்லாமல் மனிதன் செத்துவிடுவானே என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
 
இறைவன் நாடினால் இது போன்ற அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்றாலும் மீன் வயிற்றில் யூனுஸ் நபியவர்கள் உயிருடன் இருந்ததற்கு அறிவியல் சாத்தியம் உள்ளது என்பதைக் கூடுதல் தகவலாகத் தருகிறோம்.
மனிதனை விழுங்கும் அளவில் கடலில் ஒரு மீன் உள்ளது என்றால் அது திமிங்கலம் என்ற மீன்தான்.
 
கடலில் உள்ள பல்வேறு திமிங்கலங்களில் நீலத் திமிங்கலம் என்ற ஒரு வகை உண்டு. இத்திமிங்கிலத்தின் நாக்கில் 50 பேர் உட்காரக்கூடிய அளவு இடமிருக்கும். இத்தகைய திமிங்கிலத்திடம் மூர்க்கமான குணங்கள் கிடையாது. இவை மிகவும் சாதுவானவை ஆகும்.
நாக்கில் மட்டும் ஐம்பது பேர் அமர முடியும் என்றால் அதன் வயிற்றுப் பகுதி எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என்று நாம் ஊகம் செய்து கொள்ளலாம்.
திமிங்கலம் மற்ற மீன்களில் இருந்து மாறுபட்ட படைப்பாகும். இது மீன் இனமாக இருந்தாலும் இது விலங்கினங்களைப் போல் தனது குட்டிகளுக்குப் பாலூட்டக் கூடிய உயிரினமாகும்.
மேலும் மீன்கள் தமது செவுள்களால் சுவாசிக்கின்றன. ஆனால் திமிங்கலங்கள் மனிதனைப் போன்ற நுரையீரல்களைக் கொண்டுள்ளதால் தமது நுரையீரல்களால் சுவாசிக்கக் கூடியவை. நீரின் மேல்மட்டத்துக்கு வந்து தேவையான காற்றை உள் இழுத்துக் கொள்ளும். நீருக்கு அடியில் மூச்சுவிடாமல் இரண்டு மணி நேரம் கூட மூச்சடக்கிக் கொள்ளும். மனிதர்கள் சுவாசிக்கும்போது காற்றில் இருந்து 15 சதம் ஆக்ஸிஜனை உள் இழுக்கிறோம், ஆனால் திமிங்கலங்கள் காற்றில் இருந்து 90 சதம் ஆக்ஸிஜனை உள் இழுத்துக் கொள்வதால் 7000 அடி ஆழம் சென்றாலும் இவற்றால் நீண்ட நேரம் மூச்சடக்க முடிகிறது.
 
திமிங்கலத்தின் இந்த தனித்தன்மையைக் கவனத்தில் கொண்டால் அவை சுவாசித்து உள்ளே சேமித்துக் கொள்ளும் ஆக்ஸிஜன் அதன் வயிற்றுக்குள் இருந்த யூனுஸ் நபி சுவாசிக்க போதுமானதாகும். ஆக்ஸிஜன் முடியும் நேரத்தில் அவை நீருக்கு மேல் தலையை நீட்டி காற்றை உள் இழுத்துக் கொள்ளும் அவசியம் உள்ளதால் யூனுஸ் நபிக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட வழியில்லை.
 
ஒரு கண்ணாடி அறையில் வெளிக்காற்று புகாமல் அடைத்து ஒருவரை உள்ளே வைத்தால் அந்த அறைக்குள் இருக்கும் காற்றே சில மணி நேரங்கள் அந்த மனிதன் சுவாசிக்கப் போதுமானதாகும். திமிங்கலம் உள்ளிழுக்கும் காற்றில் அதிக ஆக்ஸிஜன் இருப்பதால் யூனுஸ் நபி மீன் வயிற்றில் உயிருடன் இருந்தது அறிவியலுக்கு உடன்பாடானது தான். இதில் அறிவியல் பூர்வமாக கேள்வி கேட்க வழியில்லை. இன்னும் சொல்வதாக இருந்தால் கடலில் இது போன்ற தனித்தன்மை வாய்ந்த மீங்களும் உள்ளன என்ற அறிவியல் முன்னறிவிப்பாக இதை எடுத்துக் கொள்ளலாம்.

அபாய உலகில் ஓர் அபய பூமி

இன்று உலகெங்கிலும் கொலைகள், கொள்ளைகள், கடத்தல்கள், கற்பழிப்புக்கள் அன்றாடம் நடந்து கொண்டிருக்கின்றன.
 
அத்துடன் உலக நாடுகள் புரட்சிகளையும் போராட்டங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக, டிசம்பர் 2010ல் துனிசியாவில் ஒரு முஸ்லிம் வியாபாரி தற்கொலை செய்து கொண்டது அந்நாட்டில் ஒரு புரட்சியைத் தோற்றுவித்தது.
அந்தப் புரட்சி அக்கம்பக்கத்து நாடுகளான எகிப்து, சிரியா, யமன், லிபியா என்று பற்றிக் கொண்டது. அந்தக் கொடிய, கோரத் தீயில் ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சி இரையானது. லிபியாவில் கதாபியையும் அவரது ஆட்சியையும் பலியாக்கியது. இப்போது சிரியாவும் சீக்கிரத்தில் பலியாக உள்ளது. ஏற்கனவே இராக் எரிந்து கொண்டிருக்கின்றது. பஹ்ரைனும் இதன் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றது.
 
சுற்றியும் சூழவும் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது. ஆனால் மக்கா நகரம் மட்டும் அமைதி, அபய நகரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றது. ஏன்? இதற்கு அல்லாஹ்வே பதிலளிக்கின்றான்.
 
இவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில் (இவர்களுக்கு) அபயமளிக்கும் புனிதத் தலத்தை நாம் ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? வீணானதை நம்பி, அல்லாஹ்வின் அருளுக்கு நன்றி மறக்கிறார்களா?
அல்குர்ஆன் 29:67
 
இந்த அற்புத உண்மையை உற்று நோக்குமாறு உலக மக்களை அல்குர்ஆன் கூறுகின்றது. இதன் மூலம் தன்னை ஓர் இறைவேதம் என்றும் தன்னையே வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்ளுமாறும் மக்களுக்கு இந்தக் குர்ஆன் அறிவுறுத்துகின்றது.
 
தனது அழைப்பின் பேரில் ஆண்டுதோறும் பல மில்லியன் கணக்கில் மக்கள் கூடுகின்ற ஹஜ் என்ற மாநாட்டையும், அந்த மாநாடு நடைபெறும் ஆலயத்தையும், அந்த ஆலயம் அமைந்துள்ள மக்கா நகரையும் உற்று நோக்குமாறு திருக்குர்ஆன் கூறுகின்றது.
 
முஸ்லிம்களானாலும் சரி! முஸ்லிமல்லாதவர்களானாலும் சரி! இந்தத் திருக்குர்ஆன் வழி நடந்தால் அவர்களுக்கு மத்தியில் பிரச்சனைகள் இல்லை என்ற பாடத்தைப் போதிக்கின்றது. வெள்ளையர்கள், கறுப்பர்கள் அனைவரையும் அரஃபா எனும் ஒரு வெட்டவெளியில் ஒன்று திரட்டி, மனித குலத்திற்கு இடையே இன, மொழி, நிற, நாடு பாகுபாடுகள், வேறுபாடுகள் இல்லை என்ற உண்மையை ஹஜ் எனும் இந்த மாநாடு உணர்த்துகின்றது. தீண்டாமைக்குத் தீர்வு இஸ்லாம் தான் என்பதையும் ஐயத்திற்கு இடமின்றி இந்த மாநாடு தெரிவிக்கின்றது.
கர்நாடகாவில் வாழும் கன்னடனே! உன் அண்டை மாநிலத்தவன் - தமிழ்நாட்டுக்காரன் வேறு யாருமல்ல! ஆதம் என்ற ஒரே தந்தைக்குப் பிறந்த உன் உடன்பிறந்த சகோதரன் தான். அவன் தமிழ் மொழி பேசுவதால் தண்ணீர் கொடுக்க மறுக்காதே என்ற பந்த பாசத்தை ஊட்டி வேற்றுமை உணர்வை வேரறுக்கச் செய்கின்றது இந்த மாநாடு!
 
இந்தியாவில் 626 மில்லியன் மக்கள் திறந்த வெளியில் மலம், ஜலம் கழிக்கின்றனர். இது மிகப்பெரிய சுகாதாரக் கேடாகும். இதனால் தான் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ், ஒரு ஊரில் கோயில் இருப்பதை விட கழிப்பறை இருப்பது மிக மிக அவசியம் என்று குறிப்பிடுகின்றார்.
 
கழிவறை இல்லாத வீட்டு மாப்பிள்ளையை கைப்பிடிக்காதீர், கல்யாணம் முடிக்காதீர் என்றும் அவர் மணப்பெண்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது இந்தியாவில் சுகாதார நிலையின் அவலத்தைப் படம்பிடித்துக் காட்டுகின்றது.
 
இந்த ஆண்டு உலகெங்கிலும் இருந்து சுமார் 37 லட்சம் முஸ்லிம்கள் ஹஜ் செய்வதற்காக மக்காவில் கூடியுள்ளனர். ஆனால் ஒரு நபர் கூட திறந்த வெளியில், மக்களின் நடைபாதையில் மலம் கழிப்பதைக் காண முடியாது.
 
இந்தியாவில் கோயில் மற்றும் தர்ஹாக்களின் சுவர்களைச் சுற்றி மக்கள் மலம் கழித்து அசுத்தப்படுத்துவதைப் பார்க்க முடிகின்றது. ஆனால் இந்த நிலை மக்காவில் இல்லையே! ஏன்?
 
உலக மக்களை இந்தச் சுகாதார விஷயத்திலும் சுண்டியிழுக்கின்ற வகையில் ஹஜ் மாநாடு அமைந்திருக்கின்றது. இப்படிப் பல்வேறு பயன்பாட்டுப் பரிமாணங்களைக் கொண்டிருப்பதால் தான் ஹஜ் பற்றி வல்ல இறைவன் பின்வருமாறு கூறுகின்றான்.
 
"மக்களுக்கு ஹஜ்ஜைப் பற்றி அறிவிப்பீராக! அவர்கள் உம்மிடம் நடந்தும், ஒவ்வொரு மெலிந்த ஒட்டகத்தின் மீதும் வருவார்கள். அவை அவர்களைத் தொலைவிலுள்ள ஒவ்வொரு பாதையிலிருந்தும் கொண்டு வந்து சேர்க்கும்'' (என்றும் கூறினோம்.) அவர்கள் தங்களுடைய பயன்களை அடைவதற்காகவும், சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு அளித்ததற்காகக் குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும் (வருவார்கள்.)
அல்குர்ஆன் 22:27,28
 
உலக மக்களுக்கு சமத்துவம், சகோதரத்துவம், பாதுகாப்பு, சுகாதாரம் என்பன மட்டுமில்லாமல் மனித வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் வழிகாட்டுவதால் அகிலத்தின் வழிகாட்டி என்று மிகப் பொருத்தமாகவே அல்லாஹ் கூறியுள்ளான்.
 
அகிலத்தின் நேர்வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார்.
அல்குர்ஆன் 3:96, 97
 
இதன் மூலம் திருக்குர்ஆன் உலகிற்கு உரக்கச் சொல்லும் உண்மை இதுதான்:
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!
அல்குர்ஆன் 7:3